Advertisement

Responsive Advertisement

பெயர் கேட்டாலே பலன் - இரா.இரகுநாதன்

கயிலாயத்தின் வடபுறப் பகுதியில் இருந்த வைசிரா மகன் குபேரன், "புட்பகம்' எனும் விமானத்தில் ஏறி சிவத் தலங்களை வழிபடுவார். ஒருநாள் இரு நதிகளுக்கு இடையில் இருக்கும் இந்த வனத்தைக் கண்டு பூஜை செய்தார். அதுமுதல் இந்தப் பகுதி "குபேரனின் அழகாபுரி' எனவும் இறைவன் "அழகேசன்' எனவும் அழைக்கப்படலாயிற்று.

அங்கதேசத்து தர்மகர்மனுக்கு திருமணம் நிச்சயித்திருக்க, வனத்துக்குச் சென்ற அவரோ முனிவர் சாபத்தால் கல்லானார். அவர் வேண்ட இறைவனே, "இத்தலத்தில் அட்சய திருதியை அன்று வணங்கினால் எல்லா பாவங்களும் நீங்கி நல்லவை வளரத் தொடங்கும்' என்றார். அவ்வாறே வணங்கி, சாபம் நீங்கப் பெற்றார். இதேபோல், கலிங்க நாட்டு மன்னன் விஸ்வதர்மன், கணிகையல் குல பிங்கலை ஆகியோரும் சாபம் நீங்கி, நல்வாழ்வு பெற்றனர்.

பாற்கடலைக் கடைந்தபோது வந்த அமுதத்தில் தேவர்களுக்கு வழங்கியது போக மீதமானவற்றை முனிவர்கள், ரிஷிகளுக்கு வழங்க ஒரு குடத்தில் இட்டு கருடனிடம் கொடுத்தார் திருமால். கருடனும் அழகாபுரிக்கு வந்து, இரு நதிகளுக்கு இடையிலுள்ள பத்ரிகாவனத்தில் அழகேசனை வணங்கி, கும்பத்தை பராசர முனிவரிடம் கொடுத்தார். மயக்கம் தெளிந்த அசுரர்கள் அமுதகலசம் தேடி திருநணாவை வந்தடைந்தனர். இலவணாசுரன் புதல்வர்கள் நான்கு பேரும் 4 திசைகளில் சென்று தேட ஆயத்தமாயினர். பராசரன் சங்கமுகநாதரை வேண்ட, அவர் வேதநாயகியை வேண்டச் சொன்னார். ஏகவீரை, ஜயந்தி, மர்த்தனி சண்டகாதினி என்னும் துர்க்காம்ச சக்திகள் அசுரர்களை அழித்து "தட்சண அளகை' என்னும் காவல் தெய்வங்களாக ஆயினர்.

சிவன் தவமிருந்த திசைக்கு நிருதி திசையில் வைத்த அமுதம் கல்லைப் போல் திரண்டு கனமாக லிங்க வடிவாக மாறியிருந்தது. அங்கேயே "அமிர்தலிங்கேஸ்வரர்' என்ற பெயருடன் இருந்து அருளலானார். அமிர்தலிங்கம் ஆவுடையரின் மேல் எளிதில் எடுக்கவும், மீளவும் வைக்கவும் கூடிய நிலையில் உள்ளது.

சங்கமேஸ்வரன், சங்கமுகநாதன், அழகேசன், வக்கிரேஸ்வரன், பவானி லிங்கேஸ்வரன், நட்டாற்றீஸ்வரன், திருநண்ணாவுடையார், பவானி கூடல் சங்கமேஸ்வரர் என்னும் பெயர்களில் மூலவர் அருளுகிறார். வேதநாயகியோ சங்கமேஸ்வரி, என்னும் பெயரோடு உமாதேவி, மகேஸ்வரி, கெளரி, பிராமி, வைஷ்ணவி சண்டிகேஸ்வரியும் துணையிருக்க அம்பாள் சந்நிதி தனியாக அமைந்துள்ளது.

சோம ஸ்கந்த வடிவமைப்பாக சங்கமேஸ்வரர் சந்நிதிக்கும் பவானி அம்மன் சந்நிதிக்கும் இடையில் அருணகிரிநாதர் போற்றிய சண்முக சுப்பிரமணியன் சந்நிதி அமைந்துள்ளது. இன்றும் விசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதர் சந்நிதியும் அருகில் வெப்பு நோய் போக்கும் ஜுரஹரேஸ்வரர் சந்நிதியும் உள்ளன. சுப்ரமணியர் சந்நிதிக்கு எதிரில் கிழக்கு வாயில் வழி காவிரிப்படித்துறை, சூரியதீர்த்தம் உள்ளது. இந்த மதிலையொட்டி தென்திசை சென்றால் காயத்ரி லிங்கம், காயத்ரி தீர்த்தம் உள்ளன. காயத்ரி சந்நிதியின் சிறிது தூரத்தில் பவானி ஆறு கலக்கும் கூடுதுறையும் உள்ளது. கோயிலின் உள்புறம் ஆதிகேசவப்பெருமாள் செளந்தரவல்லித் தாயார் சந்நிதி, நடுவே யோகநரசிம்மர் சந்நிதிகள் உள்ளன.

பராசரர் அமுதம் புதைந்து கிடந்த பள்ளத்தைத் தீர்த்தமாக்கி, கங்கை முதலிய நதிகளை அங்கு வரவழைத்தார். அமிர்தம் இருந்த இடத்தில் ஒரு ஊற்றும் எழுந்து அருகில் ஓடிக் கொண்டிருந்த காவிரி, பவானி நதிகளுடன் இணைந்து முக்கூடலெனும் "திரிவேணி சங்கமம்' ஆயிற்று. இவை இணைந்த நாள் சித்திரை மாதம் அமாவாசையை அடுத்த திருதியை திதியாகும். "திருநணா' என அழைக்கப்பட்ட இத்தலம் பவானி கூடுதுறை எனப்படும் தேவாரப் பாடல் பெற்ற கொங்கேழ் சிவாலயங்களில் ஒன்றாகும்.

கோயிலின் தென்மேற்கு மூலையில் ஒரு மேடை மீது தலவிருட்சமான "பத்ரி' எனப்படும் இலந்தை மரம் உள்ளது. 4 வேதங்களே இங்கு இலந்தை மரமாக வந்தது என்கின்றனர்.

திருஞானசம்பந்தர் தனது பாடலில், (ஊர் பெயர்) "கேட்டார் வினை கெடுக்கும் திருநணாவே' என்கிறார். சுமார் 7,8 ஆம் நூற்றாண்டில் இருந்தே கெட்டி முதலி பரம்பரையால் பராமரிக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்ட திருநணாவை பெரிய புராணம், கொங்கு மண்டலச் சதகம், பவானி கூடற்புராணம், வேதநாயகி, பிள்ளைத்தமிழ் போன்ற நூல்கள் பாடுகின்றன.

"அட்சய திருதியையன்று கூடல் சங்கமேஸ்வரரையும் ஆதிகேசவப் பெருமாளையும், வேதநாயகியையும் வணங்குவதால் இழந்த செல்வம், தொலைந்த பொருள், சாதகமான நீதிமன்ற தீர்ப்புகள், தொட்டவை துலங்கும், வேண்டியவை கிடைக்கும். மகப்பேறு உட்பட சித்திரைத் திருவிழா தொடங்கி, அட்சய திருதியை முதல் ஆண்டு முழுவதும், பூஜைகள் நடக்கின்றன.

ஈரோடு ரயில் நிலையத்தில் இருந்து 15 கி.மீ தொலைவில் சங்கமேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.

நன்றி - தினமணி வெள்ளிமணி

கருத்துரையிடுக

0 கருத்துகள்