ஒரு பேருந்துப் பயண அனுபவம் எனக்கு ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுத் தந்தது. நீங்கள் நினைப்பீர்கள், "என்ன இவன், எழுதுவதெல்லாம் பேருந்தைப் பற்றியே இருக்கிறதே" என்று. ஆனால், பயணங்கள் தான் நமக்கு உண்மையான வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுத் தருகின்றன. சரி, அந்தச் சம்பவத்திற்கு வருகிறேன்.
அன்று நான் பிராட்வேயில் இருந்து புறப்பட்ட 21L மகளிர் விடியல் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தேன். பேருந்து ஓரளவிற்கு காலியாகத்தான் இருந்தது. தலைமைச் செயலகத்தைக் கடந்தபோது, ஒரு இளம் பெண் முன் வாசல் வழியாக ஏறி, பின்னால் உள்ள நடத்துனர் இருக்கைக்கு நேராகச் சென்று, "இது அண்ணா பல்கலைக்கழகம் போகுமா?" என்று கேட்டாள். அதற்கு நடத்துனர், "போகும்" என்றதும், அந்தப் பெண் நேரடியாக முன்னாடிச் சென்று ஒரு காலி இருக்கையில் அமர்ந்துவிட்டாள்.
"அம்மா, இந்தக் கட்டணமில்லா பயணச் சீட்டை வாங்கிக்கொள்ளுங்கள்" என்று நடத்துனர் அழைத்தும், அதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் அந்தப் பெண் இருக்கையில் அமர்ந்திருந்தாள். நடத்துனரோ வயதானவர். கண்டிப்பாக விரைவில் ரிடையர் ஆகக் கூடியவாகத் தான் தெரிந்தார். அவர் எழுந்து சென்று அந்தப் பெண்ணிடம் பயணச் சீட்டைக் கொடுத்தார். அந்தப் பெண்ணும் அதை வாங்கிக்கொண்டாள். அப்போது நடத்துனரின் முகத்தில் ஒருவித சலிப்பு தெரிந்தது. அவர் என்னைப் பார்த்து, "என்ன செய்வது, இந்தக் காலத்துப் பிள்ளைகள் அப்படித்தான் இருப்பார்கள்" என்று அலுப்புடன் சொல்லிவிட்டுத் தன் இருக்கையில் அமர்ந்தார்.
இந்தச் சம்பவத்தில் பெரிதாக என்ன இருக்கிறது, இது சாதாரணமாக நடக்கும் விஷயம்தானே, விதிமுறைகளின் படி நடத்துனர்தான் எழுந்து சென்று கொடுக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், உண்மையில் பண்பு என்றால் என்னவென்று நீங்கள் கற்றுக்கொள்ளவில்லை. அல்லது, நீங்கள் பெற்ற கல்வி உங்களுக்கு அதைக் கற்றுக்கொடுக்கவில்லை.
இல்லை, அந்தப் பெண் செய்தது தவறு தான் என்று நீங்கள் நினைத்தால், இந்தக் காலத்து இளைஞர்களின் பார்வையில் நீங்கள் ஒரு 'பழமைவாதி' (Boomer) ஆகத் தெரிவீர்கள். ஆம் இதுதான் உண்மை.
சரி, அந்தப் பெண் என்ன செய்திருக்க வேண்டும்? பேருந்து தான் செல்லும் இடத்திற்குப் போகும் என்று தெரிந்தவுடன், அவர் தனது கட்டணமில்லா பயணச் சீட்டை நடத்துனரிடமிருந்து மரியாதையுடன் அல்லது சாதாரணமாகவாவது பெற்றுக்கொண்டு, தன் இருக்கையில் அமர்ந்திருக்க வேண்டும். நடத்துனரும் நம்மைப் போன்ற ஒரு மனிதர்தானே, அவருக்கும் கால்கள் வலிக்கும் தானே என்ற இரக்க உணர்வுடன் நடந்திருக்க வேண்டும். நம்மைவிட வயதில் பெரியவர் என்ற எண்ணமும் வரவில்லை.
இவற்றையெல்லாம் பள்ளியில் படிக்கும்போதே மாணவர்களுக்குக் கற்றுத் தர வேண்டும். ஆனால், இன்றைய கல்வி முறை அதைச் செய்கிறதா என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி!
உலகத்திலேயே ஒழுக்கத்திற்கு எடுத்துக்காட்டாக ஜப்பான் நாட்டைச் சொல்வார்கள். அங்கு, மாணவர்கள் தங்கள் பள்ளிப் பருவத்திலிருந்தே தங்களைச் சுற்றியுள்ள அனைத்தையும் சுத்தமாகப் பராமரிக்கவும், அடுத்தவர்களுக்கு எந்தத் தொந்தரவும் தராத வகையில் நடந்துகொள்ளவும் சிறுவயதிலேயே கற்றுக்கொடுக்கப்படுகிறார்கள். வெறுமனே மதிப்பெண்களை நோக்கிய ஓட்டம் என்பது எதிர்காலத்தில் வேலைக்கு வேண்டுமானால் பயன்படலாம். ஆனால், வாழ்க்கைக்கு...?
இப்போது தலைப்பை மீண்டும் படித்துப் பாருங்கள்: 'பண்புகளைக் கற்றுத் தருகிறதா இன்றைய கல்வி?'
நிச்சயமாக, இது ஒரு கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.

0 கருத்துகள்