பயம் என்பது என்ன? அது எண்ணத்தின் மூலம் வருகிறதா? அது காலத்தின் மூலம் வருகிறதா? இப்போது நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். ஆனால் வயசாக ஆக எனக்கு நோய் வரும். எனக்கு பயமாக இருக்கிறது. இது காலம். அல்லது என் எண்ணம் சொல்கிறது. எனக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம். வேலைபோகலாம். பார்வை பறிபோகலாம். மனைவி இறந்து போகலாம். . . இப்படித்தான் உருவாகிறதா? இந்தப் புத்தகம் உங்களைக் கேட்கிறது. பக்கத்தைப் புரட்டுங்கள். நீங்களே பதிலைக் கண்டுபிடிப்பீர்கள். ,இதைப் பேசிக் கொண்டிருப்பவர் சொல்லப் போவதில்லை. எண்ணங்களும் காலமும்தான் பயத்திற்குக் காரணம் என்கிறது இந்தப் புத்தகம். எண்ணம் என்பதுதான் காலம் என்றும் அது சொல்கிறது.
கடுகளவுகூட பயம் இல்லாத அளவுக்கு அதிலிருந்து முற்றாக விடுதலை பெறுவது மனித மனத்திற்கு, இந்தப் புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கும் உங்களுக்கு, சாத்தியம்தான் என்கிறது அடுத்த பக்கம். அதற்கு என்ன வழி என்று கேட்காதீர்கள் என்கிறது அது. வழி என்பது ஒரு விஷயத்தைத் திரும்பத் திரும்பச் சொல்வது; அது ஒரு செயல்முறை. இது உங்கள் பயத்தைப் போக்காது. ஏனென்றால் நீங்கள் ஒரு வழிமுறையைப் பின்பற்றுகிறீர்களே தவிர அச்சத்தின் இயல்பைப் புரிந்துகொள்ளவில்லை. எனவே எந்த வழிமுறையையும் தேடாதீர்கள். அச்சத்தின் இயல்பைப் புரிந்துகொள்ளுங்கள். புரிந்துகொள்ளுதல் என்றால் என்ன? என்று இந்தப் புத்தகம் உங்களைக் கேட்கிறது. அச்சம் என்ற வார்த்தையின் அமைப்பைப் புரிந்துகொள்கிறீர்களா அல்லது அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்கிறீர்களா? (அர்த்தத்தைப் புரிந்துகொள்வது என்பது அறிவுபூர்வமான செயல்பாடு) அல்லது அதன் உண்மையை புரிந்து கொள்கிறீர்களா? அச்சம் என்பது என்ன என்ற உண்மையை நீங்கள் புரிந்துகொண்ட மாத்திரத்தில் அது உங்களை விட்டு மறைந்துவிடுகிறது. எண்ணங்களும் காலமும்தான் அச்சத்தின் ஆணி வேர்கள் என்பதை வெறும் வார்த்தையாக அல்லாமல், அதை உங்கள் ரத்த நாளங்களில், உங்கள் மனதில், உங்கள் இதயத்தில், உங்களுக்குள் ஒரு பகுதியாக உங்களால் தெளிவாகப் பார்க்க முடிந்தால் பயத்திற்கென்று சொந்தமாக எந்த இடமும் இல்லை; காலம் மட்டுமே உள்ளது என்பதை உணர்விர்கள். ஏனென்றால் காலமும் எண்ணங்களும்தான் அச்சத்தைக் கொண்டுவருகின்றன. என்ன நடக்குமோ என்று பயப்படுகிறேன். தனிமையை எண்ணி பயப்படுகிறேன். என் தனிமையை நான் ஆராய்ந்து பார்ப்பதே இல்லை. தனிமை என்றால் என்ன என்று யோசிப்பதில்லை. ஆனால் அதைக் கண்டு அஞ்சுகிறேன். அதாவது, அதை விட்டு நான் விலகி ஓடுகிறேன் என்று அர்த்தம். ஆனால் தனிமையோ என் நிழலைப் போன்றது. அது என்னைப் பின்தொடர்ந்து வருகிறது. நிழலை விட்டு நாம் எங்கும் ஓடிவிட முடியாது. ஆக, கவனிப்பதற்கான பொறுமை உங்களுக்கு இருந்தால்-ஓடக்கூடாது; கவனிக்க வேண்டும்-பார்க்க வேண்டும். இநத்ப் புத்தகம் சொல்வதைக் கேட்க வேண்டும். காலம்தான் காரணம்; அச்சம் அல்ல என்கிறது அது. எனவே காலத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அதைப்புரிந்துகொண்டால் அச்சத்திற்கு ஒரு முடிவுகட்டிவிடலாம்.
- தொடரும்...
தமிழில்: அரவிந்தன்

0 கருத்துகள்