மத்திய கல்வி வாரியம் - சிபிஎஸ்சி (CBSE) அதனுடைய பாடத்திட்டத்தில் புதிதாக திறந்த புத்தகம் தேர்வு முறை - Open Book Exam - என்பதை அறிவித்துள்ளது. இதன்படி அடுத்த கல்வியாண்டு அதாவது 26-27 கல்வி ஆண்டில் ஒன்பதாம் வகுப்பிற்கு இந்த Open Book Exam முறையானது அமல்படுத்தப்படுகிறது. ஏற்கனவே கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் 2023 இல் இதனை பரிட்சார்த்த முறையில் பரிசோதித்த பிறகு இது மாணவர்களுக்கு பலனளிக்கும் என்பதால் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த சிபிஎஸ்சி போர்டு முடிவு செய்துள்ளது.
தேசிய கல்விக் கொள்கை 2020 (NEP-2020) ன்படி கல்வித்துறையில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதன் ஒரு தொடர்ச்சியாகவே இந்த open book Examயும் நாம் கருத வேண்டும். பொதுவாகவே மத்திய கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தில் மாணவர்களுக்கு பல புதுமையான மாற்றங்கள் புகுத்தப்பட்டு வந்திருப்பது காலம் காலமாக நடந்து வருகின்ற நிகழ்வு. பாடத்திட்டத்தினை தேர்வு, மற்றும் மதிப்பெண் கண்ணோட்டத்துடன் மட்டுமே அணுகிடாமல் மாணவர்களுடைய சிந்திக்கும் திறனை வளர்ப்பதற்கு இத்தகைய தேர்வு முறை என்பது மிகவும் பலனளிக்கும்.
பொதுவாக மாணவர்கள் பள்ளி படிப்பை பயின்று கல்லூரிகளில் சேரும்பொழுது ஐஐடி, என்ஐடி, போன்ற இந்தியாவின் மிக உயரிய கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும்போது ஏற்கனவே இத்தகைய தேர்வு முறையை அவர்கள் அணுகியிருப்பது மிகுந்த பலனை அளிக்கும். நமது அன்றாட பணிகளில் AI தொழில்நுட்ப புரட்சி நாளுக்கு நாள் கணிக்க முடியாத வேகத்தில் வளர்ந்து வருகிறது. இதில் மாணவர்களின் பள்ளி படிப்பிற்கும் அவர்களுடைய பாடங்களை படிப்பதற்கும் AI உதவியாக இருக்கிறது. எனவே AIன் உதவியைக் கொண்டு ஒரு மாணவர் எளிதில் கல்வி கற்க முடியும். எனினும் AI நம்முடைய மாணவர்கள் சிந்திக்கும் திறனை (Analytical Skill) ஐ எவ்வாறு வளர்க்கும் என்பது எனக்கு தெரியவில்லை. Open book exam தேர்வு முறை என்பது சிந்திக்கும் திறனையும், பரந்துபட்ட விரிவான அறிவை நோக்கியும், Analytical skill மாணவர்கள் வளர்த்துக்கொள்ளவும் நிச்சயம் உதவிடும்.
புத்தகம் மட்டும் போதும், மனப்பாடம் செய்து தேர்வினை அணுகினால் போதும் என்ற பழைய விஷயங்களை உடைத்து மாணவர்களை ஒரு புதிய திசை நோக்கி கொண்டு செல்லும். எனவே இப்படிப்பட்ட தொழில்நுட்ப புரட்சியோடு ஒத்திசைவாக CBSE கல்வித் திட்டத்தில் மாற்றம் என்பது வரவேற்கத்தக்க முடிவாகவே நான் பார்க்கின்றேன். மத்திய கல்வி திட்டத்திற்கு சற்றும் குறைவில்லாத வகையில் மாநில கல்வித் திட்டத்திலும் பாடத்திட்டம் என்பது மிகவும் சிறப்பாகவும் விரிவாகவும் மாற்றப்பட்டுள்ளது.
குறிப்பாக எட்டாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு பாடத்திட்டங்களில் சமச்சீர் கல்வி முறையில் மிக அதிக அளவில் CBSE, ICSE கல்வி திட்டத்திற்கு இணையான பாடங்கள் புகுத்தப்பட்டுள்ளன. இவற்றை மாணவர்கள் கற்பதற்கு சிறந்த பயிற்சி தேவைப்படுகிறது. ஆசிரியர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று கடும் போட்டிக்கு இடையே கடினமான தேர்வினை முடித்து ஆசிரியர்களாக தகுதி பெற்றுள்ளவர்கள் அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வருகின்றனர். தனியார் மெட்ரிக் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இத்தகைய எவ்வித கடினமான தகுதி தேர்வுகளும் இல்லை. வேறு பணிகளில் வழங்கப்படும் சம்பளத்தை விட மிக குறைவான மாத சம்பளம் பெறும் ஒருவராகவே தனியார் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் உள்ளனர்.
எனினும் இதே சமச்சீர் பாடத்திட்டத்தில் மேம்பட்ட தரத்தில் உள்ள பாடங்களை மாணவர்களை பயிற்றுவிக்க வேண்டிய கடமை தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு உள்ளது. எனவே அரசு இதனை கருத்தில் கொண்டு தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு புத்துணர்ச்சி பயிற்சிகளை வழங்கிட முன்வர வேண்டும். ஏனெனில் தனியார் பள்ளிகளில் பயின்றாலும் அவர்கள் படிப்பதும் சமச்சீர் கல்வி திட்டத்தின் மூலம் மட்டுமே. இத்தகைய கடினமான, தரமான ஒரு பாடத்திட்டத்தை அமுல்படுத்தி மாணவர்கள் கல்வி தரத்தினை உயர்த்திட வேண்டும் என்ற ஒற்றை இலக்கோடு செயல்படுவது அதாவது பாடங்களின் தரம் மட்டும் மட்டும் மாணவர்கள் கல்வி கற்கும் தரத்தை உயர்த்தி விடாது.
இன்றைக்கு சமூகத்தில் பொருளாதார ரீதியில் சிரமப்படும் பலரும் தங்கள் பிள்ளைகளை மெட்ரிக் பள்ளிகளில் படிப்பதையே விரும்புகின்றனர். அரசும் இதனை உணர்ந்துதான் 25% RIGHT TO EDUCATION சட்டத்தின் அடிப்படியில் மாணவர்களை சேர்ப்பதை கட்டாயம் ஆக்கி உள்ளது. மேலும் இது சரியாக கடைபிடிக்கப்படுவதையும் பலவாறு உறுதி செய்கின்றது. இவ்வாறு சேர்க்கப்பட்ட மாணவர்களின் கல்வி கட்டணத்தில் அரசும் பங்கேற்கின்றது. தனியார் மெட்ரிக் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு குறைந்தபட்சம் ஆறு மாதத்திற்கு ஒரு முறை பாடத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு இணைந்த வகையில் அவர்கள் பாடங்களை எடுப்பதற்கு ஏதுவாக ஒரு பயிற்சி திட்டத்தினை மாநில அரசு கொண்டுவர வேண்டும். ஏற்கனவே அரசு பள்ளிகளில் பணிபுரியும் சீனியர் ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வு என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக நான் அறிகின்றேன்.
எனவே தனியார் மெட்ரிக் பள்ளிகளில் ஆசிரியர்களின் பாடம் எடுக்கும் திறனை மேம்படுத்துதல் குறித்த செயல்பாடுகளை எவ்வித சாக்குப் போக்கும் இன்றி அமுல்படுத்திடவும் அதனை கண்காணிக்கவும் மாநில அரசு முன்னெடுப்பு செய்ய வேண்டும். எதிர்காலத்தில் பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளை சமாளித்து அதில் வெற்றி பெறக்கூடிய ஒரு சூழலை நமது தமிழ்நாட்டு மாணவர்களுக்கு குறிப்பாக Metric பள்ளிகளில் சமச்சீர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஏற்படுத்திட தரவேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.
இப்படிப்பட்ட ஒரு புதிய ஒரு மாணவர் சமுதாயத்தை உருவாக்கிட அரசு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் அவ்வப்போது தேவைப்படுகின்ற மாறுதல்களை எவ்வித விடுதலும் இன்றி செய்து முடித்தல் வேண்டும். அவ்வாறு செய்யும் போது மட்டும் தான் மத்திய கல்வி வாரியத்தின் பாடத்திட்டங்களுக்கு இணையான பாடத்திட்டங்களை உருவாக்குவதற்கும், தேர்வு முறைகளில் மாற்றம் கொண்டு வருவதற்கும் அப்படிப்பட்ட சூழலோடு பயணிக்க கூடிய ஒரு மன வலிமையை நமது தமிழக மாணவர்களுக்கு ஏற்படுத்தி தரவும் முடியும் என்பது திண்ணம்.
A.கேசவன்,
DO (PLI) காஞ்சிபுரம்
Mobile : 9894473600

1 கருத்துகள்
அருமையான பதிவு. open book exam முறையின் முக்கியத்துவத்தை அழகாக விளக்கியுள்ளது. மாணவர்களின் சிந்தனை திறனை மேம்படுத்தும் புதிய முயற்சியை ஆதரித்து எழுதப்பட்ட விதம் பாராட்டத்தக்கது.
பதிலளிநீக்கு