சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் தெரு நாய்கள் குறித்த ஒரு விவாதத்தை தற்செயலாக பார்க்க நேர்ந்தது. விவாதத்தில் கலந்து கொண்டவர்களுக்கு தெருநாய்கள் - STRAY DOGS என்பது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை என்பது அப்பட்டமாக தெரிந்தது. ஒரு தனி நபருடைய விருப்பு வெறுப்புகள், பொழுதுபோக்குகள் சமுதாயத்தில் உள்ள வேறு நபர்களை பாதிக்காத வரை அதைப்பற்றி எவ்வித சர்ச்சைகளும் எழுவதில்லை.
சமீப காலங்களில் தெரு நாய்கள் மூலம் குழந்தைகள், வயதானவர்கள், பெண்கள் ஆகியோர் கடி படும் நிகழ்வுகள் அன்றாடம் நாம் கேள்விப்படும் ஒன்றாக மாறிவிட்டது. பொதுவாகவே நாய்க்கடி என்பது மிகுந்த மன அழுத்தத்தை தருகின்ற ஒரு விடயமாகும். தெருவில் தனித்து விடப்படுகின்ற நாய்கள் பொதுமக்களுக்கு ஏற்படுத்துகின்ற இன்னல்கள் பாதிப்புகள் மிகவும் அதிகம். நன்றாக வீட்டில் வளர்த்து தடுப்பூசிகள் போட்டு சரியான முறையில் பராமரிக்கும் நாய்கள் மூலம் கூட ஆட்கொல்லி நோயான ரேபிஸ் என்பது தாக்குவதற்கான சாத்திய கூறுகள் அதிகம் என்பது மருத்துவ நல்லுலகம் கண்டறிந்த உண்மை.
ஒரு நாய் கடித்த பின் அதற்கு முதலுதவி மற்றும் ரேபிஸ் தடுப்பு மருந்து மற்றும் தொடர் சிகிச்சை என ஒரு சாதாரண விளிம்பு நிலை மக்களால் நேரம் மற்றும் பணம் இவற்றை செலவு செய்வது என்பது இயலாத காரியம் தான். எனினும் நாய்க்கடியின் இன்ன பிற விளைவுகளை கருத்தில் கொண்டு இவற்றை பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
நம்முடைய மருத்துவ சுகாதாரத் துறையும் கடுமையான பணிகளை செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளது. இதற்கென அந்த அவசர சிகிச்சை பிரிவுகள் தற்போதைய சூழலில் பரபரப்பாகவே இயங்கி வருவதை காண முடிகிறது.
முன்பெல்லாம் நாய்க்கடி என்பது அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த விஷயமாக இருந்தது .ஆனால் தற்போது அப்படி இல்லை. மேலும் இதற்கென அரசாங்கம் செலவு செய்கின்ற பணம் என்பது மிகப் பெரும் தொகை ஆக உள்ளது. ஒரு நாய்க்கடிக்கென குறைந்தபட்சம் 6 ஆயிரம் ரூபாய் வரை அரசாங்கம் செலவு செய்வதாக கூறப்படுகிறது. இந்த தரவு உண்மை எனில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் என்பது இந்த நாய்க்கடிக்கென, நாய் கடி முறிவு மருந்துக்கு என செலவழிக்கப்படுகிறது.
இந்த விஷயத்தில் நாம் ஒரு உண்மையை புரிந்து கொள்ள வேண்டும் தமிழக அளவில் அகில இந்திய அளவில் தமிழ்நாடு தான் மருத்துவ சுகாதார கட்டமைப்புகளில் முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது. அதே நேரத்தில் ரேபிஸ் பாதிப்புகளிலும் முதன்மை மாநிலமாக இருந்து வருவது கசப்பான ஒரு உண்மை. இப்படி மிகப்பெரும் பணம் செலவழிப்பதை தகுந்த ஆராய்ச்சிகளுக்கும் தேவையான உயிர் காக்கும் அதிக விலையுள்ள புற்றுநோய் மருந்துகளுக்கும் அரசு செலவழித்தால் அடிப்படை சுகாதார கட்டமைப்பு என்பது பல மடங்கு உயரம் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.
தனித்து விடப்பட்ட தெருவில் சுற்றித் திரியும் தெருநாய்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் பல மடங்கு உள்ளது. இந்த நாய்களுக்கு பொது கிடங்குகளை அமைத்து அங்கு பாதுகாப்பது என்பது அரசாங்கத்திற்கு தேவையற்ற வேலைப்பளு மற்றும் நிதி சுமைகளை ஏற்படுத்தும். அரசு இயந்திரம் என்பது பொதுமக்களை நல்ல சுகாதாரமான நோய் தொற்றுகள் அற்ற ஒரு சூழலில் அமர்த்தி குடி அமர்த்துவது என்பதே பிரதானமானதாக கொண்டு இயங்குகிறது. இதற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தெரு நாய்கள் சுற்றித் திரிவது சரி செய்ய வேண்டிய சீரமைக்க வேண்டிய ஒரு முக்கியமான கடமையாக அரசுக்கு உள்ளது. எனவே இந்த நாய்களுக்கு இனப்பெருக்க அறுவை சிகிச்சை மட்டும் அல்லாது இந்த நாய்களை கொல்லுவது என்பது பிரச்சனையை ஓரளவிற்கு கட்டுக்குள் வைக்கும்.
முன்பெல்லாம் நாய்களை இவ்வாறு பிடித்துச் செல்வது என்பது நம்முடைய சிறிய வயதில் பார்த்த ஒரு நிகழ்வு தான். தற்போது இயற்கை சமநிலையை அற்ற ஒரு நிகழ்வு இருப்பதினால் தெரு நாய்கள் பல நூறு இருந்தது தற்போது பல்லாயிரக்கணக்காக பல்கி பெருகிவிட்டது. புள்ளி விவரங்களின் அடிப்படையில் தமிழ்நாட்டில் மட்டும் ஏறக்குறைய 1.3 லட்சம் தெருநாய்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. நிச்சயம் இவற்றின் மீது அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டிய ஒரு அவசர நிலை ஏற்பட்டுள்ளதாகவே நான் நினைக்கின்றேன். செல்லப்பிராணிகளை வளர்ப்பதற்கான வழிமுறைகள் அரசால் ஏற்கனவே வகுக்கப்பட்டு இருந்தாலும் நாய் வளர்ப்போர் முழு கவனத்தை தங்கள் வீட்டு நாய்களிடமும், மீதமுள்ள அன்பையும், மீதம் இருக்கும் உணவு பண்டங்களையும் தெருநாய்களுக்கும் படைக்கின்றனர்.
சமீபத்தில் ப்ரோ கபடி லீக்கில் விளையாடிய ஒரு கபடி வீரர் உத்தரபிரதேசத்தில் தெரு நாய்களுக்கு உணவளிக்கும் போது நாய் கடித்து அதன் மூலம் ரேபிஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். சமீபத்தில் தமிழ் நாட்டில் கூட ஒரு என்ஜினீயர் ரேபிஸ் நோய்க்கு பலி ஆன சம்பவம் நடந்துள்ளது. இவ்வாறு ரேபிஸ் பாதிப்பு உயிரிழப்புகள் தொடர்கதை ஆகி வருகின்றது. எனவே தற்போது தமிழ் மாநில அரசும் வியாதிகள் பாதிக்கப்பட்ட நாய்களை மட்டும் கருணை கொலை செய்வது என உயர்நீதிமன்றத்தில் கூறியுள்ளது. எனினும் ஜீவகாருண்ய அடிப்படையில் இப்பிரச்சனையை அணுகுவது என்பது ஒருதலை பட்ச முடிவுகளையே ஏற்படுத்தும். அறிவுப்பூர்வமாக சிந்தித்து முடிவு எடுக்க வேண்டிய விஷயம் இது.
இன்றைக்கு நாய் கடி என்பது ஏற்படுத்தும் மன வலி TRAUMA என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒன்று. எனவே இப்பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகள் தற்போது உள்ள கவனத்தோடு கூடுதலாக கவனத்தை செலுத்தி இதை ஒரு விழிப்புணர்வை தெருநாய் மீது அன்பு செலுத்துபவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். உயிர்கொல்லி நோய்களோடு போராட வேண்டிய ஒரு மிக முக்கியமான காலகட்டத்தில் மருத்துவ சுகாதாரத் துறைகள் இருக்கும் போது தேவையற்ற பிரச்சனைகளில் கவனம் செலுத்துவது வீண் விரயத்தை ஏற்படுத்துகிறது.
தெருநாய்கள் மீது அல்லது தெருநாய்களுக்கு பரிந்து பேசும் செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் தெருவில் அனாதையாக சுற்றித் திரியும் நாய்களை தத்தெடுத்துக் கொண்டு அவர்கள் வீட்டிலேயே இந்த தெரு நாய்களை வளர்த்தால் இப்பிரச்சனை என்பது பெருமளவில் குறையும். அத்தகைய பரந்த மனப்பான்மையை நாய் வளர்ப்பவர்களும் கடைபிடிக்க வேண்டும். அஞ்சல் துறையில் பணியாற்றும் தபால்காரர் மற்றும் டெலிவரி ஏஜென்ட்கள் நாய்க்கடியிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும். தங்களுடைய பணிகளை செய்யும்பொழுது மிகவும் கவனமாக எச்சரிக்கையாக விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். நாய் கடி ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவிகள் குறித்த ஒரு விழிப்புணர்வை நமது துறையின் சார்பாகவும் வழங்குவது நல்லதொரு யோசனையாக இருக்கும் என நினைக்கின்றேன்.
தெருவில் சுற்றித் திரியும் தெருநாய்களை அழிப்பது என்பது தற்போது உள்ள தெருநாய்களின் எண்ணிக்கைக்கு ஒரு நிரந்தர தீர்வாக இருக்க முடியும். ஒரு சீரான கால இடைவெளியில் இத்தகையதொரு பயிற்சியினை அரசு எடுக்க வேண்டும். ஏனெனில் நாய்களை பராமரிப்பதற்கு பொது நாய்க்கு பராமரிப்பு கட்டிடம் அதற்கான வேலைப்பளு அதற்கான பணவரையும் என்பதை கணக்கிடும்போது இது பெரிய ஒரு பணியாக இருக்காது.
A.கேசவன்,
DO (PLI) காஞ்சிபுரம்
Mobile : 9894473600

1 கருத்துகள்
ஆழமாக சிந்திக்க வேண்டிய கருத்தினை ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக தெரிவித்துள்ளது சிறப்பாகும்.
பதிலளிநீக்கு