நமது வாழ்வில் காலம் பெரும்பங்கு வகிக்கிறது. நான் இப்போது இப்படி இல்லை, ஆனால் விரைவில் அப்படி ஆகிவிடுவேன்; எனக்குத் தெரியாது, ஆனால் நான் தெரிந்துகொள்வேன்; எனக்குக் குறிப்பிட்ட ஒரு மொழி தெரியாது, ஆனால் அவகாசம் கொடுத்தால் கற்றுக்கொண்டு விடுவேன். காலம் நமது காயங்களை ஆற்றும். காலம் தமது நுட்பமான உணர்வுகளை மழுங்க அடிக்கும். காலம் உறவுகளை அழிக்கும். காலம் புரிந்துகொள்ளுதலை அழிக்கும். ஏனென்றால் புரிந்தகொள்ளுதல் என்பது உடனே நடக்க வேண்டிய விஷயம். 'புரிந்துகொள்ளக் கற்றுக் கொள்வேன்' என்பதெல்லாம் நடக்காது. எனவே நமது வாழ்வில் காலம் மிக முக்கியமான, அசாதாரணமான பங்கு வகிக்கிறது என்கிறது இந்தப் புத்தகம். நமது மூளை காலப்போக்கில் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது. இது உங்கள் மூளையோ என் மூளையோ அல்ல. மனித மூளை. மனித மனம். அது தான் நீங்கள். அந்த மூளைதான் என்னுடைய மூளை, என்னுடைய மனம் என்று நீங்கள் இனம் கண்டிருக்கிறீர்கள். ஆனால் அது உங்களுடைய மூளையல்ல; உங்கள் மனமல்ல. லட்சக்கணக்கான ஆண்டுகளாக வளர்ச்சி பெற்றுவரும் மனித மூளை. காலத்தால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள இந்த மூளை காலத்தின் எல்லைகளுக்குப்பட்டே செயல்பட முடியும் என்பதையும் உங்களால் உணர முடியும். உங்கள் மூளை முற்றிலும் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். உங்கள் மூளையும் மனமும் காலத்தின் எல்லைக்குள் செயல்படுகிறது என்கிறது இந்தப் புத்தகம். காலம் உங்கள் வாழ்க்கையில் முக்கியமான பங்கை வகித்திருக்கிறது. காலம், தொழில்நுட்பப் பிரச்னைகள் தவிர வேறு எந்தப் பிரச்னைக்கும் தீர்வு அல்ல. காலத்தைப் பிரச்னைக்குத் தீர்வாகப் பயன்படுத்தாதீர்கள். உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இடையில், உங்களுக்கும் உங்கள் வேலைக்கும் இடையில் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்க்க காலத்தைப் பயன்படுத்தாதீர்கள். இதைப் புரிந்துகொள்வது மிக மிகக் கடினமானது. தயவுசெய்து இதை கவனியுங்கள். இந்தப் புத்தகத்தை கவனமாகப் படியுங்கள்.
தமிழில்: அரவிந்தன்

0 கருத்துகள்