Advertisement

Responsive Advertisement

தமிழக அரசியல் வரலாறு (முன்னுரை) - ஆர்.முத்துக்குமார்


சுதந்தரத்துக்குப் பிறகான தமிழக அரசியல் களம் ஒன்றும் அத்தனை அமைதியானதாக இருக்கவில்லை. முன்னர் எப்படி போராட்டமும் போர்க்குரலும் எதிர்நீச்சலுமாக இருந்ததோ அப்படித்தான் சுதந்தரத்துக்குப் பிறகும் இருந்தது. ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், பி.எஸ். குமாரசாமி ராஜாவைத் தொடர்ந்து ராஜாஜி அதிகாரத்துக்கு வந்தபிறகு தமிழ்நாட்டு அரசியல் களத்தின் தட்பவெப்பம் வேகமான மாற்றத்தைக் கண்டது. திமுக வளரத் தொடங்கியதும் இந்தச் சமயத்தில்தான்.

மொழிவாரி மாகாணப் பிரிவினை என்பது இந்தியாவுக்கு மட்டுமல்ல, தமிழக அரசியலுக்கும் ஒரு திருப்புமுனை. அதுதான் தமிழ்நாட்டு அரசியல் களத்தைத் தெளிவுபடுத்தியது. யாரை எதிர்த்து, யார் போராட வேண்டும் என்பது குறித்த புரிதலை ஏற்படுத்தியது. ஆந்திரப் பிரிவினையில் ராஜாஜி காட்டிய பிடிவாதம் அவருக்குப் புகழைக் கொடுத்தது என்றால் குலக்கல்வித் திட்டத்தில் அவர் காட்டிய பிடிவாதம் அவருடைய புகழைக் கெடுத்தது. அதுதான் காமராஜர் என்ற புதிய ஆட்சியாளரைக் களத்துக்கு அழைத்து வந்தது.

காமராஜரின் ஆட்சிக்காலம் என்பது பங்களிப்புகளின் பொற்காலம். அணைகள் கட்டியது தொடங்கி ஏழைக்குழந்தைகளுக்கு அன்னமிட்டது வரையிலான பட்டியல் வெகுநீளமானது. தமிழ்நாட்டு அரசியல் வரலாறு என்பது விசித்திரங்களின் விளைநிலம். எப்போது, எது நடக்கும் என்று அத்தனைத் துல்லியமாகச் சொல்லிவிடமுடியாது. காமராஜர் கொண்டுவந்த K Plan அந்த வகையைச் சேர்ந்ததுதான். தமிழகத்தில் காங்கிரஸின் பிடி தளர்கிறது என்பதை உணர்ந்த காமராஜர், அதைச் சரிசெய்ய விரும்பினார். தன்னுடைய இடத்துக்கு பக்தவத்சலத்தைக் கொண்டுவந்தார். அந்த நொடியில்தான் திமுகவின் வெற்றிக்கும் காங்கிரஸின் வீழ்ச்சிக்கும் ஒருங்கே முகவுரை எழுதப்பட்டது.

சமூக, அரசியல் தளங்களில் காங்கிரஸ் கட்சிக்கு சவாலாக விளங்கிய திமுகவை அறுபதுகளின் மத்தியில் தொடங்கிய இந்தி எதிர்ப்புப் போராட்டம் அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் சென்றது. 1967 தேர்தல் திமுகவை ஆட்சியில் அமர்த்தியது. அன்று தொடங்கி அடுத்த பத்தாண்டுகளுக்கு தமிழ்நாட்டு அரசியல் சக்கரம் திமுகவையும் காங்கிரஸையும் மட்டுமே சுற்றிக்கொண்டிருந்தது. இடதுசாரிகளும் இன்னபிறரும் வெறும் பார்வையாளர்கள் மட்டுமே.

அண்ணாதுரையின் அகால மரணம் தமிழக அரசியலின் பாதையை திசை திருப்பிவிட்டது. கட்சியின் கொள்கைகளையும் லட்சியங்களையும் திட்டங்களையும் முன்வைத்து செய்யப்பட்ட அரசியல் தனிப்பட்ட மனிதர்களின் தர்க்க மேடையாக மாறியது அதன்பிறகுதான். காமராஜர் Vs கலைஞர், எம்.ஜி.ஆர் Vs கலைஞர், கலைஞர் Vs ஜெயலலிதா என்ற இருதுருவ அரசியல் உருவானது தொடங்கி தமிழ்நாட்டின் தலையாய பிரச்னைகளாக இன்று உருவெடுத்து நிற்கும் பல பிரச்னைகள் முளைவிடத் தொடங்கியது வரை எல்லாமே எழுபதுகளுக்குப் பிறகுதான். இந்தி எதிர்ப்பு, இட ஒதுக்கீடு, கச்சத்தீவு, சாதிக்கலவரங்கள் என்று பல பிரச்னைகள் இருந்தபோதும் ஈழத்தமிழர் பிரச்னையும் காவிரி பிரச்னையும் இங்கு பிரதான இடத்தைப் பிடித்திருக்கின்றன.

ஈழத்தமிழர் பிரச்னை என்பது அடிப்படையில் அயல்நாட்டுப் பிரச்னை. ஆனால் நடைமுறையில் தமிழக மக்களின் உணர்வுப் பிரச்னை. மனித உரிமை தொடங்கி மண்ணுரிமை வரை ஈழத்தமிழர்கள் கோரிக்கை வைத்தது இலங்கை ஆட்சியாளர்களிடம்தான். ஆனால் அவர்கள் அதை மறுத்து, தமிழர்களை அகதிகளாக அடித்து விரட்டியபோது அது தமிழக மக்களின் பிரச்னையாகவும் மாறியது. எழுபதுகளில் தீவிரம் அடைந்து இன்று வரை இந்திய, இலங்கை மற்றும் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. ஈழ ஆதரவு இங்கிருக்கும் பல கட்சிகளுக்கு முத்திரை; சில கட்சிகளுக்கு அதுவே முகவரியும்கூட. ஈழத்தமிழர் பிரச்னையில் இருக்கும் சிக்கல்களையும் சிடுக்குகளையும் தாண்டி உண்மை நிலையைப் புரிந்து கொள்வது அத்தனை சுலபமானதல்ல. என்றாலும், அதற்கான முயற்சிகள் இந்தப் புத்தகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதேபோல, தமிழ்நாட்டின் தீராத தலைவலியாக இருக்கும் காவிரி பிரச்னை என்பது சற்றேறக்குறைய நூற்றியிருபது ஆண்டுகால பிரச்னை. முதலமைச்சர்கள் பேசுகிறார்கள், அமைச்சர்கள் பேசுகிறார்கள். அதிகாரிகள் பேசுகிறார்கள். சட்டம், வழக்கு, நீதிமன்றம், நடுவர்மன்றம் என்று எந்தவொரு முயற்சிக்கும் பலன் கிடைக்கவில்லை. விளைவு, இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள இரண்டு மாநிலங்கள் பரம வைரிகளாக மாறியிருக்கின்றன. உன்னிப்பாகக் கவனித்தால் சுதந்தர இந்திய அரசின் கூட்டாட்சித் தத்துவத்துக்கே காவிரி பிரச்னை சவால் விடுகிறது என்பது புரியும்.

காவிரி பிரச்னைக்குக் கொஞ்சமும் சளைக்காதது கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்ட விவகாரம். நமக்குச் சொந்தமான நிலப்பகுதியை அந்நிய நாடு ஒன்றுக்கு இலவசமாகக் கொடுத்திருப்பதாக மட்டும் இந்தச் செயலைப் பார்க்கமுடியாது. தமிழக மீனவர்களின் அடிப்படை வாழ்வாதாரத்தையே தாரை வார்த்துக் கொடுத்திருப்பதாகத்தான் பார்க்க வேண்டும். மாநில அரசின் உரிமைகளை எந்த அளவுக்கு மத்திய அரசு மதிக்கிறது என்பதற்கான அளவுகோலாகத்தான் கச்சத்தீவு கைமாறிய கதையைப் பார்க்கவேண்டும்.
கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டபோது இந்திய அரசு நடந்துகொண்ட முறை, எடுத்த முடிவுகள், இந்திய நாடாளுமன்றத்தில் பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் கொடுத்த விளக்கங்கள் ஆகியவற்றை ஆராய்ந்து பார்த்தால் மாநில அரசுகள் எத்தனை அதிகாரமற்ற அமைப்புகளாக இயங்கி வருகின்றன என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
தமிழ்நாட்டின் அரசியல் வரலாறு என்பது வெறும் பிரச்னைகளின் வரலாறு மட்டுமல்ல. அரசியல் கட்சிகள் அடைந்த வெற்றி, தோல்விகளின் வரலாறு. தேர்தல் அரசியலின் வரலாறு. வாக்காளர்களின் வரலாறு. மொத்தத்தில் சுதந்தரத்துக்குப் பிறகான அரை நூற்றாண்டு கால தமிழக மக்களின் அரசியல் போராட்ட வரலாறு. அந்த வகையில் தமிழக அரசியல் களத்தில் உருவான கட்சிகள், தலைவர்கள், ஆட்சியாளர்கள், அரசியல் கட்சிகளின் சாதனைகள் - சோதனைகள், சாதி மொழி வாக்கு அரசியல் உள்ளிட்ட அம்சங்கள் இந்தப் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளன.

மக்கள் மத்தியிலும் பொதுமேடைகளிலும் சில விஷயங்கள் பூடகமாகவும் மேலெழுந்த வாரியாகவும் காலங்காலமாகப் பேசப்பட்டு வருகின்றன. உதாரணமாக, குலக்கல்வி, கே ப்ளான், மாநில சுயாட்சி, 356வது பிரிவு, சர்க்காரியா கமிஷன், மிசா, மண்டல் கமிஷன், பல்கேரியா பால்டிகா, எரிசாராயம், டெசோ, ஐபிகேஎஃப், ஜெயின் கமிஷன், டான்ஸி, தடா, பொடா என்பன போன்ற பதங்கள் வெறும் வார்த்தைகளாக மட்டும் வலம் வந்து கொண்டிருக்கின்றன. உண்மையில் அவை எதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன, அவற்றின் முன்னணி - பின்னணி விவரங்கள் என்ன என்பது பற்றி இங்கே அதிகம் பேசப்படுவதில்லை. இந்தப் புத்தகம் அவற்றைப் பற்றிப் பேசியிருக்கிறது.

வரலாற்றுப் புலனாய்வுகளுக்கும் இந்தப் புத்தகத்தில் இடமிருக்கிறது. உதாரணமாக, சுதந்தரத்துக்குப் பிறகான முதல் தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸ் கட்சிக்கான மாற்று சக்தியாக ஏன் மாறவில்லை? காமராஜர் உள்ளிட்ட பல தலைவர்கள் அரசியலில் தீவிரமாக இயங்கிய சமயத்தில் அரசியல் துறவறம் பூண்டிருந்த ராஜாஜியை அவசரம் அவசரமாக அழைத்து முதல்வர் பொறுப்பை ஏற்கச்சொன்னது ஏன்? அண்ணா தனிக்கட்சி தொடங்குவதற்கு பெரியார் - மணியம்மை திருமணம் மட்டுமே காரணமாக இருக்குமா?

காங்கிரஸைக் காப்பாற்றும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்ட காமராஜர் திட்டம் என்கிற கே ப்ளான் தோல்வியில் முடிந்தது எப்படி? இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தூண்டிவிட்டது இந்திய அரசா அல்லது சிஐஏவா? எம்.ஜி.ஆரின் வெளியேற்றத்துக்குக் காரணம் கட்சிக் கணக்கா அல்லது வேறு கணக்குகளா? நெருக்கடி அத்துமீறல்களுக்குப் பிறகும் இந்திரா காங்கிரஸ் தமிழகத்தில் வெற்றிபெற்றது எப்படி? பழ. நெடுமாறனின் ரகசிய இலங்கைப் பயணத்தைச் சிலாகித்து வரவேற்ற கலைஞர், வைகோவின் ஈழப் பயணத்தைக் கண்டித்தது ஏன்? என்பன போன்ற வரலாற்று முடிச்சுகள் பலவும் இந்தப் புத்தகத்தில் விவாதிக்கப்பட்டுள்ளன.
புத்தகத்தின் முதல் பாகம் ராஜாஜியின் ஆட்சிக்காலம், எல்லைப் போராட்டம், ஆந்திரப் பிரிவினை, குலக்கல்வித் திட்டம், காமராஜர் ஆட்சி, முதுகுளத்தூர் கலவரம், பக்தவத்சலத்தின் வருகை, இந்தி எதிர்ப்புப் போராட்டம், சுதந்தரா கட்சியின் தோற்றம், கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவு, திமுக ஆட்சியைப் பிடித்தது, கீழவெண்மணி படுகொலைகள், அண்ணாவின் மரணம், அதிமுகவின் உருவாக்கம், காங்கிரஸில் பிளவு, எமர்ஜென்ஸி, கச்சத்தீவு, மிசா, சர்க்காரியா கமிஷன் என்று சுதந்தரத்துக்குப் பிறகான முதல் முப்பது ஆண்டுகால தமிழக அரசியல் வரலாற்றைப் பேசுகிறது.

புத்தகத்தின் இரண்டாம் பாகம் எம்ஜிஆர் ஆட்சிக்காலம், ஈழத்தமிழர் விவகாரம், ஜெயலலிதாவின் அரசியல் பிரவேசம், சத்துணவுத்திட்டம், ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம், இட ஒதுக்கீட்டுப் போராட்டம், பாட்டாளி மக்கள் கட்சியின் தோற்றம், மண்டல் கமிஷன், ராஜீவ் காந்தி படுகொலை, தடா சட்டம், திமுகவில் வைகோ ஏற்படுத்திய பிளவு, மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ், ஜெயின் கமிஷன் அறிக்கை, புதிய தமிழகம் - விடுதலைச்சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் அரசியல் நுழைவு, திமுக - அதிமுகவின் டெல்லி அரசியல் என்று எமர்ஜென்ஸிக்குப் பிறகான இருபதாண்டுகால தமிழக அரசியல் வரலாற்றைப் பேசுகிறது.
வரலாற்றைக் கற்றுக்கொள்ளாதவர்கள் அதில் நடந்தேறியிருக்கும் தவறுகளை மீண்டும் ஒருமுறை செய்யவேண்டியிருக்கும் என்பது வின்ஸ்டன் சர்ச்சிலின் வாக்கு. அந்த வகையில் வாசகர்களும் மாணவர்களும் இளைய தலைமுறையினரும் தமிழ்நாட்டின் சமகால வரலாற்றைத் தெரிந்துகொள்ள என்னுடைய இந்தப் புத்தகம் நிச்சயம் உதவும் என்று நம்புகிறேன். முக்கியமாக, வருங்கால அரசியல் ஆய்வாளர்களுக்கு என்னுடைய இந்தப் புத்தகம் அடிப்படைத் தரவாக அமைந்தால் அதுதான் எனக்கான பரிசு. வாசகர்களின் எதிர்வினைகளுக்காகக் காத்திருக்கிறேன்.

4 டிசம்பர், 2012



கருத்துரையிடுக

0 கருத்துகள்