கரூரில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களில் 13 ஆண்கள், 17 பெண்கள் மற்றும் இதில் கொடுமை என்னவென்றால் 9 குழந்தைகள் (4 சிறுவர்கள், 5 சிறுமிகள்) உள்ளனர். குழந்தைகளுக்கு என்ன தெரியும். மேலும் 51 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பகல் 12 மணிக்கு கூட்டம் என்று அறிவிக்கப்பட்ட போதிலும், அனுமதி பகல் 3 மணி முதல் இரவு 10 மணி வரைதான் பெறப்பட்டிருந்தது. உச்சிவெயிலில் (அதுவும் நல்ல வெயிலில்) 11 மணியிலிருந்தே மக்கள் காத்திருந்த நிலையில், விஜய் மாலை 6 மணிக்கு மேலாகத்தான் வந்து சேர்ந்தார்.
ஒலிபெருக்கி அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் குறைபாடுகள் (ஒவ்வொரு கூட்டத்திலும் அவ்வாறுதான் உள்ளது) காரணமாக, கூட்டத்தில் கலந்துகொண்டவர்களால் பேச்சைத் தெளிவாகக் கேட்க முடியவில்லை. அனுபவம் மிக்க அரசியல் கட்சிகள் செய்வது போல முன்னதாகவே பல்வேறு பகுதிகளில் ஒலிபெருக்கிகள் வைக்கப்படவில்லை. இதனால் தொண்டர்கள் அலைமோதினர். அதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மின்கம்பங்களில் ஆட்கள் ஏறியிருந்ததால் மின்சாரம் நிறுத்தப்பட்டது. விஜய் பேசி முடிக்கும் முன்பே நெரிசல் ஆரம்பமானது. அரசியல் கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் இத்தனை பேர் உயிரிழந்திருப்பது நாட்டிலேயே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்து நடந்த உடனேயே முழு அரசு எந்திரமும் செயல்பாட்டுக்கு வந்தது. அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, அன்பில் மகேஷ் ஆகியோர் விரைந்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நள்ளிரவிலேயே தனி விமானத்தில் திருச்சி வந்து கரூர் சென்றார். குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.
ஆனால், தன்னைப் பார்க்க வந்த 39 ரசிகர்கள் உயிரிழந்து மருத்துவமனைச் சவக்கிடங்கில் கிடக்கும் போதும், அவர்களின் உறவினர்கள் கதறிக் கொண்டிருக்கும் போதும், விஜய் அவர்களைப் பார்க்காமல் முன்பே திட்டமிட்டபடி விமானத்தில் சென்னை திரும்பினார். 4 மணி நேரம் கழித்து மட்டுமே "இதயம் நொறுங்கிப் போயிருப்பதாக" இரங்கல் ட்வீட் செய்தார்.
அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். நடிகராக இருந்து அரசியலுக்கு வருவதிலும் குறை இல்லை. நடிகராக இருந்த எம்.ஜி.ஆர் போன்றவர்கள் முதல்வராகி நல்ல மாற்றங்களைக் கொண்டு வந்தார்கள். ஆனால் அதற்கான அளவில் தன்னை தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
திரைப்படங்களில் வசனகர்த்தாக்களால் எழுதித் தரப்பட்ட வசனங்களை போன்று மட்டும் பேசுவதாலேயே ஒருவர் தலைவராக முடியாது. தலைவராகட்டும், இளைய தளபதியாகட்டும் எந்தப் புரட்சியை நடத்தி முடித்துவிட்டு மக்களிடம் வருகிறார்? மக்களுக்காக என்ன செய்யப் போகிறார்? இதுவரை என்ன செய்துள்ளார்?
அவ்வளவு நெருக்கத்தில் தான் விஜயை பார்க்க வேண்டுமென்றால் தொலைக்காட்சியிலோ அல்லது கைப்பேசியிலோ பார்க்க வேண்டியது தானே. எதற்காக உயிரைப் பணயம் வைத்து இப்படிப் பெருங்கூட்டமாகத் திரள வேண்டும்? அதுவும் சிறு குழந்தைகளுடன்? இவர்களுக்கு என்ன அரசியல் தெரியும்.
வெற்றிமாறனின் விடுதலை படத்தில் ஒரு வசனம் வரும், "தத்துவமில்லாத தலைவர்கள் ரசிகர்களை மட்டுமே உருவாக்குவார்கள்" என்ற வாக்கியம் இன்று மிகவும் பொருத்தமானது. இவர்களை ‘விசிலடிச்சான் குஞ்சுகள்’ என்று சொல்வார்கள். மக்கள் கூட்டம் என்பது விஜய்யின் பெரும் பலமாக தான் இருக்கிறது அதில் சந்தேகமில்லை. எல்லா கட்சிகளும் கொஞ்சம் கலக்கத்தில் தான் இருக்கின்றன. ஆனால் அந்தக் கூட்டம் பத்திரமாக வீடு வந்து சேர வேண்டும் அல்லவா? அதையும் தலைவன் தானே பார்த்துக் கொள்ள வேண்டும். நல்ல பக்குவமடைந்த தலைவர்கள் கூட்டத்தில் பேசி முடித்ததும் அனைவரும் பத்திரமாக வீடு போய் சேருங்கள் என்று வேண்டுகோள் விடுப்பார்கள். அதுதான் தலைமைக்கு அழகு. இந்த விபத்திற்கான பொறுப்பை நாம் முற்றிலுமாக விஜயிடம் தள்ளி விட முடியாது. கூட்ட ஒருங்கினைப்பாளர்கள் மற்றும் மக்களாகிய நாம் தான் இதற்கு பொறுப்பு. சிந்திக்கும் பகுத்தறியும் அறிவை வளர்க்காத கல்வியும் ஒரு காரனம் என்று தான் நான் சொல்வேன்.
வருத்தங்களுடன்….
-S.B.


0 கருத்துகள்