Advertisement

Responsive Advertisement

‘இலக்கியம் கண்டதற்கு இலக்கணம்’ - கவிஞர் மகுடேசுவரன்


ஐயா… ‘இலக்கியம் கண்டதற்கு இலக்கணம்’ என்று சொல்லப்பட்டுள்ளதாகச் சொல்றாங்களே?”

“அதையும் சொல்றாங்களா ? நல்லதுதான். அது நன்னூல் பதவியலில் வரும் நூற்று நாற்பத்தொன்றாவது நூற்பா. பதவியலில் பெயரிடைநிலை என்பது என்ன என்பதைக் குறித்து விளக்கும் நூற்பா அது. முழுசாக அந்த நூற்பாவைப் பார்ப்போமா ? 

“இலக்கியம் கண்டதற் கிலக்கண மியம்பலிற் 
பகுதி விகுதி பகுத்திடை நின்றதை 
வினைப்பெய ரல்பெயர்க் கிடைநிலை யெனலே.” 

இதுதான் முழுமையான நூற்பா. எப்படித் திருக்குறளில் ஒரு குறளுக்கு உரை வழங்க அதிகாரத்தின் தலைப்பைக் கைவிளக்காகக் கொள்வோமோ அப்படி இலக்கண நூல்களின் நூற்பா விளக்கத்தை அடைய அவற்றின் இயல்களைச் சார்ந்து இருக்கணும். இப்ப நான் விளக்கறேன் பாருங்க. 

இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பலின் = இலக்கியத்தில் காணப்பட்ட ஒரு பதத்திற்கு இலக்கணம் இயம்ப வேண்டிய இடத்தில். 

பகுதி விகுதி பகுத்து = பகுதி விகுதின்னு பகுக்கணும். 

இடை நின்றதை வினைப்பெயர் அல் பெயர்க்கு இடைநிலை எனலே = அப்படிப் பகுத்த பிற்பாடு, பகுதி விகுதியாகிய அவ்விரண்டுக்கும் இடையில் நின்றதை வினையால் அணையும் பெயர் அல்லாதவற்றுக்கான பெயரிடைநிலை என்று சொல்லுங்க. 

இதுதான் அந்த நூற்பாவின் பொருள். இலக்கியத்தில் ஒரு பதத்தைப் புகுத்தினால் அதற்கு இலக்கணம் இயம்பும் தன்மையோடுதான் இருக்கணும். எளிமையாகச் சொன்னால் பகுபத இலக்கணப்படி இலக்கியத்தில் ஆளப்படும் ஒரு புதுச்சொல் இருக்கணும். அந்தச் சொல்லுக்குப் பகுதி விகுதி பிரித்து இடையில் எஞ்சுவதைப் பெயரிடைநிலை என்று வெச்சுக்கங்க. இதுதான் அந்த நூற்பாவின் தெளிவான பொருளுங்க. அதனால நீங்கள் விட்டு ஆட்டறதுக்கு எல்லாம் இலக்கணம் பொறுப்பாளி ஆகாதுங்க. அதை முதல்ல புரிஞ்சுக்கங்க.”

கவிஞரின் முகநூல் பக்கத்திலிருந்து...

கருத்துரையிடுக

0 கருத்துகள்