கம்ப்யூட்டர்களால் கற்றுக் கொள்ள முடியும். தங்களுக்கு சொல்லப்பட்ட விஷயங்களைத் திருப்பி சொல்லும் விதத்தில் அவற்றை புரோகிராம் செய்து வைக்க முடியும். முதலில் நமக்கு அனுபவம் ஏற்படுகிறது. அறிவை சேர்த்துக்கொள்கிறோம். அவற்றை மூளையில் சேமித்து வைக்கிறோம். பிறகு நினைவுகளின் வடிவத்தில் எண்ணங்கள் வருகின்றன. பிறகு அவை செயலாக மாறுகின்றன. அந்தச் செயலிலிருந்து நாம் கற்றுக் கொள்கிறோம். கற்பது என்பது மேலும் அறிவை சேமித்துக்கொள்ளும் காரியமாகிறது. விழிப்போடும் எச்சரிக்கையுடனும் இருக்கும் ஒரு மனம் எப்போதும் இதைத்தான் செய்துகொண்டிருக்கிறது. கம்ப்யூட்டரைப் போல. அனுபவம், அறிவு, ஞாபகம், சிந்தனை, செயல் - இதைத்தான் நாம் எப்போதும் செய்துகொண்டிருக்கிறோம். கற்றுக்கொள்வது என்பது இதுதான். அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்வது. இதுதான் மனிதனின் கதை. ஓயாத சவாலும் அந்த சவாலை சமாளிப்பதும். மனித அறிவு மொத்தமும் இந்தப் புத்தகத்தில் உள்ளது. நீங்கள்தான் அந்தப் புத்தகம்.
நீங்கள் நன்கு படித்தவர் என்று நினைக்கிறேன் என்றாலும் இதையெல்லாம் நான் மிக மிக எளிமையான மொழியில் சொல்லிக்கொண்டிருக்கிறேன். வார்த்தை முக்கியமல்ல. இதை தயவு செய்து எப்போதும் நினைவில் வைத்திருங்கள். வார்த்தை முக்கியமல்ல. குறியீடு ஒருபோதும் நிஜமல்ல. நான் முன்பே சொன்னது போல, பார்ப்பது என்ற கலை, கவனிக்கும் கலை, கற்றுக் கொள்ளும் கலை ஆகியவை உள்ளன. தான் அறிந்தவற்றிலிருந்து மனிதன் விடுதலை பெறவே முடியாது. எனவே நாம் கற்றுக் கொள்வது யந்திரத்தனமாகி விடுகிறது. கற்றுக் கொள்ளும் கலை என்பது முற்றிலும் வித்தியாசமானது. கற்பது என்றால், அறிதலின் எல்லைகளை ஆராய்ந்து அவற்றைத் தாண்டிச் செல்லுதல் என்று பொருள். கவனித்தல், உள்வாங்குதல், கற்றுக்கொள்ளுதல் என்ற இந்த மூன்று அம்ச வழிமுறையின் மூலம் நாம் வாழ்கை என்ற புத்தகத்தை சேர்ந்து படிப்போம். இந்தப் புத்தகத்தை என்னோடு சேர்ந்து நீங்கள் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் புத்தகத்தை நான் படிக்கவில்லை. நீங்கள், நான், இதர மனிதர்கள் ஆகிய எல்லோருமாக உள்ள மனித இனம் என்ற புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறோம். தயவுசெய்து இதில் சிறிது கவனம் செலுத்துங்கள். இந்தப் புத்தகத்தை எப்படிப் படிப்பது என்பதை நாம் அறிந்துகொண்டால் எல்லா நெருக்கடிகளும் ஒரு முடிவுக்கு வந்துவிடும். சமயம் சார்ந்த மனம், நம்பும் மனம், சடங்குகள் அனைத்தையும் செய்யும் மனம் - இப்படிப்பட்ட மனதால் இநதப் புத்தகத்தைப் படித்து உள்வாங்கிக்கொள்ள முடியாது. சுதந்திரமான மனதால்தான் முடியும். இந்தப் புத்தகத்தை முழுவதுமாகப் படித்த பிறகு, இப்படிப்பட்ட மனம்தான் உண்மையின் ஆசிர்வாதத்தைப் பெறுகிறது.
இப்புத்தகத்தின் முதல் அத்தியாயம் எது? இது உங்களுடைய புத்தகம். இதன் முதல் அத்தியாயத்தில் என்ன இருக்கிறது?
- தொடரும்...
தமிழில்: அரவிந்தன்

0 கருத்துகள்