Advertisement

Responsive Advertisement

புத்தாண்டு செய்தி - ஜெயகாந்தன்


ஜன.,1,1970ல், 'குமுதம்' இதழில், தன் புத்தாண்டு செய்தியாக, எழுத்தாளர், ஜெயகாந்தன் தெரிவித்திருந்தது:

புத்தாண்டுகள் எல்லாமே நம்பிக்கை தருவன. அடுத்த புத்தாண்டு வருகிற வரை இந்த ஆண்டை தான் நம்பி வாழ்தல் வேண்டும். இந்த ஆண்டில் எனக்கு வயது, 36; வழக்கம் போல் பல சிறுகதைகளும், ஓரிரு நாவல்களும் நிச்சயம் எழுதுவேன். ஒரு படம் தயாரிக்கும் திட்டமும் உண்டு. அது, என் முந்தைய படைப்புகளிலிருந்து, மாறுபட்டிருக்கும். அதை, 'ஷார்ட் பிலிம்'மாகத் தயாரிக்க தான் என்னிடம் வசதி உண்டு. இதுவும் ஒரு புத்தாண்டு நம்பிக்கை!

இம்மாதிரியான நம்பிக்கை தான் எல்லா மனிதரையும் வாழ வைக்கிறது; நம்பிக்கை நிறைவேறுவது இரண்டாம் பட்சம்; ஆனால், நம்பிக்கை தான் வாழ்க்கைக்கு அடிப்படை; அடித்தளம்!

எவ்வளவு தான் சிறப்பானதாயிருந்த போதிலும், முந்தைய ஆண்டு என்பது இறந்த காலம் தான்; எவ்வளவு தான் குழப்பமானதாக இருந்தாலும், இந்த ஆண்டு தான் எதிர்காலமும், நாம் எதிர்கொள்ள வேண்டிய காலமும் ஆகும். எனவே, புதிய நம்பிக்கைகளுடன் இந்த ஆண்டை எதிர்கொள்வோம்.

ஒவ்வொரு நாளின் உதயமும், நம்பிக்கையின் எழுச்சியாகவே மலர்கிறது. என் வீட்டு வாசலில் எப்போதும் ஒரு ரோஜா மலர்ந்திருக்கிறது; வந்து பாருங்கள். எல்லா வீடுகளின் முன்னாலும் எப்போதும் ஓர் இனிமை மலர்ந்திருக்கிறது; ஆழ்ந்து கவனியுங்கள்!

நேற்று வரை, விடிவே இல்லையா என்று தனிமையில், ரகசியமாக பெருமூச்செறிந்த ஒரு கன்னிப் பெண்ணுக்காக, இன்று கெட்டி மேளம் முழங்குகிறது. இந்த நல்ல செய்தியை இப்போது தனிமையில் பெருமூச்செறிந்து நிற்கிற கன்னிப் பெண்ணுக்கு சொல்வதை விட, நல்ல பணி உங்களுக்கு வேறு என்ன இருக்கிறது!

இதைத்தான் நான் செய்கிறேன். அதோ அந்த கூரையின் மீது ஏறி நின்று, இறுமாப்புடன் இந்த உலகைப் பார்த்து, நம்பிக்கையோடு கொக்கரிக்கிறது, செந்நிறக் கொண்டை கோழி. ஆனால், சில நண்பர்களின் பார்வை மட்டும் குனிந்தே போயிருக்கிறதே!

ஒடெட்டா என்ற நீக்ரோ மாது சொல்கிறாள்...

நீ உன்னையே பார்
நீ சர்வ வல்லமை வாய்ந்தவன்
நீ சர்வ வல்லமை பொருந்திய
உலகத்தின் ஓர் அங்கம்
எனவே, நீ சர்வ
வல்லமை வாய்ந்த ஆத்மா!

தன்னையும், காலத்தையும் நம்புவதை தவிர, இந்த வாழ்க்கையில் பயனுள்ள, அர்த்தமுள்ள காரியம் வேறில்லை.

பகைமையும், வெறுப்பும், வஞ்சனையும், ஏமாற்றும்,
பழைய நைந்து போன பிசாசுகள்!

நம்பிக்கை ஒன்று தான் எப்போதும் புதிதாய், ஒளிமிக்கதாய், மகிழ்ச்சி தருவதாய் உள்ள ஒரே ஆயுதம்; மருந்து; மந்திரம்!

நன்றி - தினமலர் டிசம்பர் 2017

கருத்துரையிடுக

0 கருத்துகள்