Advertisement

Responsive Advertisement

'கிரெட்டா துன்பெர்க்' (Greta Thunberg) - யாரிவள்?


கிரெட்டா துன்பெர்க் (Greta Thunberg), ஸ்வீடனைச் சேர்ந்த ஒரு இளம் சூழலியல் செயற்பாட்டாளர். 2008ல் ஸ்வீடனைச் சேர்ந்த பள்ளி செல்லும் சிறுமியான கிரெட்டா, பார்ப்பதற்கு அமைதியான இயல்புடையவராக இருந்தாலும், ஆட்டிசத்தின் ஒரு வகையான அஸ்பெர்கர் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் யாரோடும் ஒன்ற முடியாத இயல்பு இருந்தபோதிலும், அவரிடம் இருந்த அசைக்க முடியாத மன உறுதியும், தான் எடுத்த வேலையை ஈடுபாட்டுடன் செய்து முடிக்கும் தன்மையும் அவரை உலகறியச் செய்தது.

ஒரு நாள் பள்ளியில் ஆசிரியர் பருவநிலை மாற்றம் குறித்துப் பேசிய உரையாடல்தான் கிரெட்டாவின் வாழ்க்கைப் பாதையை மாற்றியது. துருவ கரடிகள் அழிவு, பனிப்பாறைகள் உருகுதல், உலக வெப்பமயமாதல், கடல் மட்ட உயர்வு, தீவிர வறட்சி போன்ற காரணங்களால் புவிக்கு ஏற்படவிருக்கும் பேராபத்துக்கள் அவளது மனதில் ஆழமான அச்சத்தை ஏற்படுத்தின. "எதிர்காலம் என்ற ஒன்றே இல்லாத போது பள்ளிக்குச் சென்று என்ன பயன்?" என்ற சிந்தனை அவளுக்குள் எழுந்தது.

முதலில் தனது வீட்டில் மாற்றத்தை ஏற்படுத்தத் தொடங்கினாள்.

தன்னுடைய பெற்றோருக்கும் நிலைமையின் தீவிரத்தைப் புரிய வைத்து, குடும்பத்துடன் இணைந்து விமானப் பயணத்தைக் குறைத்துக் கொண்டாள்.

கால்நடைகளுக்கும் காலநிலைக்கும் உள்ள தொடர்பைக் கணக்கில் கொண்டு சைவ உணவிற்கு மாறினார்கள்.

வீட்டில் காய்கறித் தோட்டம் அமைத்து, சூரிய ஆற்றலைப் பயன்படுத்தத் தொடங்கினர்.

தனது தனிப்பட்ட மாற்றங்களைத் தாண்டி, அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் என்று கிரெட்டா உறுதி பூண்டாள்.


ஆகஸ்ட் 20, 2018, வெள்ளிக்கிழமை முதல், "காலநிலை காக்க பள்ளி வேலை நிறுத்தம்" என்ற வாசகத்துடன் ஸ்வீடன் நாடாளுமன்றத்தின் முன் தனியொரு ஆளாக அமர்ந்து போராடினாள்.

ஊடக வெளிச்சமும் ஸ்வீடன் தேர்தலும் இப்போராட்டத்திற்கு ஆரம்பத்தில் வெளிச்சம் கொடுத்தன. இவள் அழைப்பு விடுத்த வேலைநிறுத்தம் உலக அளவில் கவனத்தை ஈர்த்தது.


இதன் தொடர்ச்சியாக, அவள் உருவாக்கிய "எதிர்காலத்துக்கான வெள்ளிக்கிழமைகள் (Fridays for Future)" என்ற குழந்தைகளுக்கான பள்ளி செல்லா போராட்டம் ஸ்வீடனில் மட்டுமின்றி உலகெங்கிலும் ஒரு மாபெரும் இளைஞர் இயக்கமாகப் பரவியது.

குறுகிய காலத்திலேயே கிரெட்டாவின் போராட்டம் உலகளவில் பேசும் பொருளானது.


2018 டிசம்பரில் ஐ.நா.வில் பேசுவதற்கு அழைக்கப்பட்டாள். ஐரோப்பா, நியூயார்க் எனப் பல நாடுகளுக்கும் அழைப்பு வந்த போதும், குறைந்தபட்ச சுற்றுச்சூழலை பாதிக்கும் எளிய பயண முறைகளையே பயன்படுத்தினாள்.

டைம் வார இதழ் 2019 ஆம் ஆண்டின் நபராக அவளை அறிவித்தது. 2019 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கும் பரிந்துரைக்கப்பட்டாள்.


ஆனால், "பருவநிலை காக்க தேவை விருது அல்ல; செயல்பாடே" என்று கூறி விருதுகளை மறுத்தாள். "எங்களின் எதிர்காலத்தை சூரையாட நீங்கள் யார்?" என உலகத் தலைவர்களை நேரடியாகக் கேள்வி கேட்டு, காலநிலை குறித்த தனது அச்சத்தையும் தெளிவான புரிதலையும் உரக்கச் சொன்னாள்.

பள்ளியில் பட்டம் பெற்ற பிறகும், கிரெட்டா தனது போராட்டத்தை நிறுத்திவிடவில்லை. தனது அடிப்படை இலக்கான காலநிலை நீதியுடன் சேர்த்து, தற்போது உலகளாவிய மனித உரிமை மற்றும் நீதிப் பிரச்சினைகளிலும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.


"Fridays for Future"
போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார். மேலும் அறிவியல் உண்மைகளை ஏற்றுக்கொண்டு உடனடியாக செயல்பட வேண்டும் என்ற தனது செய்தியை சர்வதேச மேடைகளில் வலியுறுத்தி வருகிறார்.

சமீபத்திய ஆண்டுகளில், இஸ்ரேல்-ஹமாஸ் போரின் போது பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகிறார்.


ஜூன் 2025-ல், காசா மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற 'ஃப்ரீடம் ஃப்ளோட்டிலா' என்ற கப்பலில் ஆர்வலர்களுடன் இணைந்து கடல் வழியாகப் பயணித்தபோது, அவர் இஸ்ரேலியப் படைகளால் தடுத்து நிறுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டார். அவர் தனக்கு நேர்ந்த துயரங்களையும் உலகிற்கு வெளிப்படுத்தினார்.

கிரெட்டா துன்பெர்க்கின் கதை, ஒரு சிறுமியின் மன உறுதியும், சூழலியல் மீது இருந்த அச்சமும், உலகளாவிய இயக்கமாக எப்படி உருவெடுக்க முடியும் என்பதைக் காட்டுகிறது. கொரோனா போன்ற பாதிப்பிலிருந்து கூட உலகம் மீள முடியும். ஆனால், பருவநிலை மாறுதல் காரணமாக ஏற்படும் அழிவுகள் கற்பனை செய்ய முடியாதவை மற்றும் சங்கிலித் தொடர் போன்றவை.

ஆகையால், எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, கிரெட்டாவைப் போன்ற இளம் போராளிகளுடன் இணைந்து நிற்பதும், நமது வாழ்க்கை முறையை உடனடியாக மாற்றி அமைத்துக்கொள்வதும், உலகளாவிய நீதிக்காகக் குரல் கொடுப்பதுமே புவியைக் காக்க சிறந்த வழியாகும்.

-S.B.

கருத்துரையிடுக

0 கருத்துகள்