Advertisement

Responsive Advertisement

இன்னுமா உறக்கம்? - ப.முருகன்


இது கூதல் காலம். ஐப்பசி, கார்த்திகை மழைக்காலம். மார்கழி பனிக்காலம். மொத்தத்தில் இவை குளிர்காலம். இயல்பாகவே சோம்பல் தொற்றிக் கொள்ளும். இந்தக் காலத்தில் அதி காலை துயில் எழுதல் எவ்வளவு சிரமமானது? 

பழைய காலத்தில் பாயும் போர்வையும் கம்பளியும் ஒன்றைவிட்டு ஒன்றகலாமல் இருக்கும். இப்போது ஸ்வெட்டர், தலைக்குல்லாய் ஆகியவையும் இணைந்துவிட்டன. கேட்கவா வேண்டும், குளிரும் சோம்பலும் இணைந்து குடும்பம் நடத்துகின்றன. வெயிலும் கதிரும் வந்துதான் இவற்றை விரட்டியடிக்க வேண்டும். அதுவரை தூக்கத்திலேயே கிடந்தால் வேலை வெட்டி என்னாகும்?



விடியல் காலையில் எழு. குளிர்ந்த நீரில் குளி. குளிர்விட்டுப் போகும் என்பார்கள் பெரியவர்கள். உனக்கு குளிர்விட்டுப் போச்சு, அதுதான் இப்படி நடந்துக்கிற என்பது வேறு வகை. சீக்கிரமே எழுந்து குளித்து கோவிலுக்குப் போவது, பஜனை பாடுவது, குளிரை போக்க ஆன்மீகத்தின் பெயரால் நடக்கிறது.

எல்லோரும் காலையில் எழுவது என்பது ஒருபக்கம். ஆனால் பெண்கள் மற்றவர்களைவிட இன்னும் சீக்கிரமாகவே எழுந்து இதர வேலைகளையும் செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுக்கு இது கூடுதல் சுமையாகிவிடுகிறது. அம்மாக்கள் தங்கள் பெண்களை எழுப்புதல் எல்லா வீடுகளிலும் நடக்கும். எல்லாக் காலங்களிலும் நடக்கும் விஷயம்தான். இவற்றைத்தான் திருப்பாவை, திருவெம்பாவை பள்ளி எழுச்சிப் பாடல்கள் நமக்கு உணர்த்துகின்றன. ஆண்டாள் இதன் ஆதர்ச வெளிப்பாடாகத் திகழ்கிறாள். இன்னும் உறங்குதியோ என்று எழுப்புகிறாள்.




அடிமை உறக்கத்தில் ஆழ்ந்து உறங்கியவர்களை விடுதலை விழிப்பிற்கு கொண்டு வர கூவிய சேவல் மகாகவி பாரதி. பாரதி புதுமை செய்தவர் எல்லாவற்றிலும்.
அவர் கொஞ்சமல்ல, நிறைய வித்தியாசப்பட்டு அம்மாவை - பாரதமாதாவை எழுப்பினார். அதற்காக திருப்பள்ளி எழுச்சி பாடினார். 

வாணிகம் செய்ய வந்து நாட்டின் ஆட்சியைப் பிடித்த ஆங்கிலேயர்களை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை விரட்டியடிப்பதற்காக பிள்ளைகள் நாங்கள் விழித்துவிட்டோம். அம்மா நீ எழுந்திடு என்று பாரதமாதாவுக்கு பள்ளி எழுச்சி பாடினார்.



'பொழுது புலர்ந்தது; யாம் செய்த தவத்தால்


புன்மையி ருட்கணம் போயின யாவும்;


எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி


எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி;


தொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கு 
இங்குஉன்

தொண்டர் பல்லாயிரர் சூழ்ந்து நிற்கின்றோம்.


விழிதுயில் கின்றனை இன்னும் எம்தாயே


வியப்பிது காண்! பள்ளி எழுந்தரு ளாயே'


என்று துவங்குகிறது ‘பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி’ பாடல்.


'புள்ளினம் ஆர்த்தன; ஆர்த்தன முரசம்; பொங்கியது எங்கும் சுதந்திர நாதம்' என்று தொடர்ந்திடும் அந்தப் பாடல் நிறைவுப் பகுதியில் ஐந்தாவது பாராவில் 'விதமுறு நின்மொழி பதினெட்டும் கூறி வேண்டியவாறு உனைப் பாடுதும் காணாய்' என்றும் உரைக்கிறார். விடுதலை உணர்வு நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் நீக்கமற நிறைந்துள்ளது. இன்னும் நீ தூங்கலாமா, எழுந்து வா தாயே, எமது இன்னல்களை - அல்ல அல்ல, உமது இன்னல்களைப் போக்கவா என்று கட்டளையிடுகிறார்.



பாரதி எல்லாவற்றிலும் புதுமை, எல்லா வகையிலும் புதுமை விரும்பினார். பாரத சமுதாயமே புதிதாக, அனைவரும் சமமாக இருக்கும் நிலை கொண்டதாக அமையவே எண்ணினார். பக்தியில் புதுமை செய்தார். அதனால்தான் புதிய திருப்பள்ளி எழுச்சி. புதிய ஆத்திச்சூடி எல்லாம். 

பக்தி இலக்கியக் காலத்தில் தெய்வத்தை தோழனாகக் கண்டார் சுந்தரர். ஆனால் பாரதியோ, தலைவன் முதல் வேலைக்காரன் வரை காதலன், காதலி, குழந்தை, குரு என எல்லாமாக கண்டு புதுமை செய்தார். அதனால்தான் சொல்புதிது, சுவை புதிது சோதிமிக்க நவகவிதை நாளும் புதிது என்றுரைத்தார்.



உலகமயம் எனும் புதிய வடிவில் நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ள போது வால்மார்ட்டுகள் இந்தியாவின் வீதிகளில் கடைவிரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ள போது பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ என்கிற பாரதியின் கவிதை வரிகளை நாம் மறந்தால் ஆபத்து நம்மைச் சூழாதா? இந்தச் சூழலில் பாரதியின் பள்ளி எழுச்சிப் பாடல், தூங்குகிற, தூங்குவது போல் நடிக்கிற இந்தியர்களை எழுப்பிடப் பயன்படாமலா போகும்?

நன்றி - தீக்கதிர் 2012

கருத்துரையிடுக

0 கருத்துகள்