Advertisement

Responsive Advertisement

சமுதாய மேம்பாட்டில் ஆன்மிகத்தின் பங்கு - தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பலர் கூடி வாழ்வது சமுதாயம். பலர் கூடி வாழ்தல் வேண்டும். அப்போதுதான் சமுதாயம் தோன்றும். வாழ்க்கை வரையறுத்த கால எல்லையையுடையது. அந்த எல்லைக்குள் மற்றவர்கள் நலனுக்குரியன செய்து, அவ்வழி ஆன்மாவை வளர்த்துக்கொள்ள வேண்டும்; முன்னேற வேண்டும். நமது வாழ்க்கை கண்ணாடி வளையல்கள் போல உலைந்து போகக்கூடியது. வாழ்க்கை நிலையில்லாதது. நிலையில்லாதனவற்றைக் கொண்டு, நிலையானவற்றை அடைதலே வாழ்க்கையின் குறிக்கோள்.

நன்றாக வாழவேண்டும் என்றால் அதற்கென்று ஒரு விதி தனியாக இல்லை. எதைச் செய்தாலும், அழகாகச் செய்தலும், பயனுறச் செய்தலுமே நல்வாழ்க்கை. குறித்த ஒரு நோக்கத்துக்காகத் தான் வாழ்க்கையை நடத்தவேண்டும். குறிக்கோளுடைய வாழ்க்கையை நடத்துவதுதான் அதிர்ஷ்டம். வாழ்க்கை முழுவதும் விரும்பக் கூடியது ஊழியம் புரியும் சக்தியேயாம். அதுவும் சுயநலமற்ற நிலையில் ஊழியம் புரியும் சக்தியாக அமைய வேண்டும்.

வாழ்க்கையை முறையாக வாழ்ந்தால், உழைப்போடு கூடிய வாழ்க்கை நடத்தினால், அவ்வாழ்க்கையே ஒரு தொழில்தான். வாழ்க்கை இன்பமானது அன்று: இன்பமாக அமையவும் அமையாது. தைரியத்தோடும், துணிச்சலோடும் வாழ்க்கையை நடத்தப் பழகிக் கொள்ள வேண்டும். தற்கொலை செய்து கொள்வதிலும், அல்லது கொலை செய்வதிலும் தைரியம் என்பது இல்லை. வாழ்வதில்தான் தைரியம் இருக்கிறது.

உழைப்பு, துக்கம், மகிழ்ச்சி, இவற்றை விருப்பும், வெறுப்பும் இன்றி அனுபவிக்கத் தெரிந்துகொண்டால் மனிதனாகலாம். வாழ்க்கையின் உந்து சக்தி நம்பிக்கை. நோக்கம், கடமை, பரிவு ஆகியன வாழ்க்கைக்கு ஒளியூட்டுவன. வாழ்க்கையில் ஏதேனும் ஒரு வேலை செய்யவேண்டும்; யாராவது ஒருவரிடமாவது அன்பு காட்ட வேண்டும்.

வாழ்க்கையில் வெற்றிகளை நம்பிக்கையுடன் எதிர் பார்க்க வேண்டும். இங்கணம் வாழக் கற்றுக்கொண்டால் அது வாழ்க்கையாகி விடும். ஏன்? இத்தகு வாழ்க்கையே வாழ்வாங்கு வாழ்தல். ஒரே ஒருமுறைதான் பிறக்கின்றோம். என்றாவது ஒருநாள் மூச்சுவிட மறந்து போவோம்; அல்லது உயிர்ப்பு அடங்கும். இந்த இடைவெளிக் காலத்திற்குள் நாம் வாழ்ந்துவிட வேண்டும். நாம் வாழப் பிறந்தோம். “வாய்த்தது நந்தமக்கோர் ஈதோர் பிறவி மதித்திடுயின்” என்றார் அப்பரடிகள், சாவது எளிது.

பிறவி என்பது என்ன? ஆன்மா என்பது என்ன? நான் யார்? என் உள்ளம் யார்? என்ற ஆராய்ச்சி இல்லாமல், தெளிவான அறிவு இல்லாமல், எப்படி வாழ முடியும்? இந்த "ஆன்மா’ விஷயத்தில், தத்துவச் சிந்தனையாளர்களிடையிலும், மதஸ்தாபகர்-களிடையிலும் நிலவுவது மாறுபட்ட சிந்தனை போக்குத்தான். ஆன்மா, பிறப்பு, இறப்பு குறித்து தமிழ் மரபுவழிச் சிந்தனையே அறிவியல் அடிப்படையில் சரியானது என்று துணிய முடிகிறது. 

”உள்ளது போகாது. இல்லது வாராது” என்பது ஒரு தர்க்க அடிப்படை. இந்தத் தர்க்க நியாயத்தின்படி ஆன்மா உண்டென்பதும், அது நிலையானது என்பதும் பெறப்படும் உண்மைகள். கடவுள் ஆன்மாக்களைப் படைத்தான் என்ற கொள்கை ஏற்புடையதன்று. கடவுள் குறைவிலா நிறைவு. நிறைவிலிருந்து குறை தோன்ற முடியாது. ஆதலால், கடவுள் ஆன்மாக்களை, உயிர்களைப் படைத்திருக்க முடியாது. "எனது" என்றும், "நான்" என்றும் உரிமை கொண்டாடும் ஒன்று உளது. அதுவே ஆன்மா.

ஆன்மா என்பது சமஸ்கிருதச் சொல். உயிர் என்பது தமிழ்ச் சொல். உயிர்களின் பரிணாம வளர்ச்சி பற்றிய டார்வின் கொள்கையில் உடன்பாடு மிகுதியும் உடையது தமிழ் மரபு. உயிர்களின் பரிணாம வளர்ச்சியில், உயிர்கள் ஓரறிவுயிர் தொடங்கி, பரிபக்குவ நிலையினுக்கு ஏற்ப மாறி மாறிப் பிறந்து, கடைசியாக ஆறறிவு உடைய மனிதனாகப் பிறக்கிறது என்பது தமிழ்ச் சிந்தனை!

அறிவு சார்ந்த பரிணாம வளர்ச்சியில், பாம்பு சட்டையை உரித்துப் போட்டுவிட்டுப் புதுச் சட்டையுடன் உலா வருதலைப் போல், உயிர் உடலை மாற்றிக் கொண்டே வந்து, மானுடப் பிறப்பை எய்தியது. அதனால்தான் சாதலையும், பிறத்தலையும், திருவள்ளுவர்

"உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு"

என்றார்.

ஆன்மிகம் என்பது முற்றிலும் ஆன்மாவைச் சார்ந்தது. அதாவது, ஆன்மாவின் தரத்தை உயர்த்திக் கொள்ளும் வாழ்க்கை முறை. இந்த உடல், உடலின் பொறிகள் வழி குணங்கள் இல்லை. குணங்களும், திறன்களும், பண்புகளும், ஆன்மாவைச் சார்ந்தவையே என்பது வெளிப்படை. 

எல்லோருக்கும் உறுப்புக்கள் ஒத்து உள்ளன. ஆனால் பண்புகள் ஒத்து இல்லை. இதற்கு ஆன்மாக்களிடையே உள்ள தராதரமே காரணம். அறிவு, ஆன்மாவைச் சார்ந்தது. ஆன்மாவை அறிந்து, அதனை வளர்த்துக் கொள்ளுதலே வாழ்க்கையின் முதற்படி.

காணாதனவற்றைக் காண, கண்ணிற்கு ஒளியாக, அறிவொளியாக இருந்து துணை செய்வது ஆன்மா. கேளாதனவற்றைக் கேட்க, காதுகளுக்குப் புலனாக அமைந்து துணை செய்வது ஆன்மா. ஆன்மா உருவமற்றது. ஆன்மாக்கள் எண்ணிக்கையில் பல, ஆன்மா அதன் வளர்ச்சிக்காக எடுத்துக்கொண்டது உடல்.

ஆன்மாவை, ஆன்மாவின் வளர்ச்சியை, மறந்துவிட்டு உடலால் மட்டும் வாழும் மனித மிருகங்களும் உண்டு. இவர்களே துஷ்டர்கள்; கொலைக்காரர்கள்; சமூகத்திற்குரியன செய்யாதவர்கள். ஆதலால்தான் சான்றோர் ஆன்மாவில் வாழ்தலை, ஆன்மாவைச் சார்ந்து வாழ்தலை வாழ்நிலை என்றனர்.

நெருப்பு தனக்குள் வரும் பொருள்களை எரித்து, அவற்றின் பலத்தைக் கொண்டு, மேலும் உயரமாகக் கிளம்பி எரிகிறது. அதுபோல, ஆன்ம சக்தி உடையவர்கள், தங்களுடைய வளர்ச்சிக்குத் தடையாய் உள்ளவைகளையே தன் வளர்ச்சிக்குச் சாதனங்களாக்கிக் கொண்டு வளர்வார்கள். ஆன்ம சக்தி உள்ளவர்கள், அடிபடும் பந்து மேலெழுவதைக் போல், துன்பங்கள் சூழச் சூழ மேலெழுவார்கள்.

ஆன்ம சக்தி வளரக் கல்வி தேவை; ஆற்றல் தேவை கலைஞானம் தேவை; அறிவு தேவை; பண்பு தேவை; சான்றாண்மை தேவை; ஒப்புரவுப் பண்பு தேவை. இவையெல்லாவற்றையும் ஒருங்கே பெற்ற ஆன்மா ஆனந்தமாக வளரும் வாழும்; வாழ வைக்கும். அதனால்தான் தம்மை உணர்ந்த நிலையிலேயே தலைவனாகிய கடவுளை உணரமுடியும் என்றனர் ஞானிகள்!

ஆன்மிகம் என்பது முற்றாகச் சமயமும் அல்ல; சமயம் சாராததும் அல்ல. ஆனால், ஆயிரத்தில் ஓரிருவர் கடவுள் பக்தியில்லாமலும், அறிவியல் மேதைகளாக, நல்லவர்களாக, சான்றோர்களாக, வையகத்தை வாழ்வித்தவர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால், பெரும்பாலோரின் ஆன்ம வளர்ச்சிக்குக் கடவுள் நம்பிக்கையும், வழிபாடும் ஒரு சாதனமாகும்.

- தொடரும்...

கருத்துரையிடுக

0 கருத்துகள்