பழனி மலை அடிவாரம்! பெரும் குளம் ஒன்றின் கரையில் ஏராளமான மீன்கள் குவிக்கப்பட்டு, ஒரு சிறு குன்றுபோலக் காட்சியளித்தது. குளத்தில் பிடிக்கப்பட்ட மீன்கள் அவை.
அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் குளத்தில் உள்ள மீன்களைப் பிடித்து கரையில் குவிப்பார்கள். மறுநாள் அவற்றைப் பங்கிடுவார்கள். குவிக்கப்பட்டிருக்கும் மீனுக்குக் காவலாகப் பழனித்தேவர் என்பவர் காவலாக நியமிக்கப் பட்டிருந்தார். பெயர் அறியமுடியாத உத்தம அடியார்களில் பழனித் தேவரும் ஒருவர்.
அதிகாலையில் எழுவது, நீராடுவது, திருநீறு - ருத்திராட்சம் அணிந்து, பழனியாண்டவனைத் தியானித்து அடிவாரத்தில் இருந்தபடியே நிமிர்ந்து மலையைப் பார்த்து, ‘‘அப்பா! பழனித்தேவா!’’ என்று குரல் கொடுப்பார்; பிறகு தொண்டு தொண்டு தொண்டுதான். அவருடைய பெயர் தெரியாததால், அவர் சொன்ன ‘பழனித்தேவா’ என்பதையே அவருக்குப் பெயராகச் சூட்டி அழைத்தார்கள்.
அப்படிப்பட்ட பழனித்தேவர் இரவில், மீன் குவியலைக் காவல் காத்துக் கொண்டிருந்தார். அதே வேளையில் பழனியில் இருந்த மீனவர் குடும்பத்தில் ஒன்றில் இருந்த பெண்மணி ஒருவர் தன் குடிசையில், ‘‘யப்பா! பழனியாண்டவா! என் வீட்டுக்காரர் இருந்திருந்தால், எங்கள் வீட்டிற்கும் ஒரு கூடை மீன் கிடைத்திருக்கும். என் ஏழ்மையும் கொஞ்சமாவது நீங்கியிருக்கும். என்ன செய்ய? வீட்டுக்காரரும் போய்விட்டார். என் குறையை வேறு யாரிடம் சொல்ல?’’ என்று தன் குடிசையில் மாட்டியிருந்த முருகன் படத்தின் முன்னால் இருந்து புலம்பிக் கொண்டிருந்தார்.
அடியவர் இச்சையில் எவையெவை உற்றன; அவை தருவித்தருள் பெருமாளே! - என்ற அருணகிரிநாதரின் வாக்கிற்கு இணங்க, அப்பெண்ணின் குறைதீர்க்கத் தீர்மானித்தார் முருகப் பெருமான். நள்ளிரவு நேரம்; இருட்டின் ஆக்கிரமிப்பும் சுற்றியிருந்த மரங்களின் காற்று ஓசையும் மலையைச் சுற்றியிருந்த விலங்குகள் சிலவற்றின் கத்தும் ஓசையும், அந்தப் பகுதியை மேலும் அச்சத்தில் ஆழ்த்தின. ஆனால் எதைப் பற்றியும் பொருட்படுத்தாத பழனித்தேவர், கண்ணும் கருத்துமாக முருகன் திருநாமங்களைச் சொன்னபடி, தன் காவலைச் செய்து வந்தார். கள்வர்கள் மட்டுமல்ல; தூக்கம்கூட அவரை நெருங்கவில்லை.
அப்போது கண்ணைக் கவரும்படியான, உருண்டு திரண்ட பதினாறு வயது உருவம் ஒன்று அடிமேல் அடி வைத்து, மீன் குவியலை நெருங்கியது. பரமனருளால் பழனித்தேவரும் ஒருசில விநாடிகள் கண் அயர்ந்தார். அதற்காகவே காத்திருந்ததைப் போல, பதுங்கிப்பதுங்கி வந்த உருவம் தன் கையிலிருந்த கூடையில் பரபரப்போடு மீன்களை வாரி நிரப்பியது; அதன்பிறகு அங்கிருந்து மெள்...ள நழுவி ஓடத் தொடங்கியது.
அதற்குள் கண் விழித்த பழனித்தேவர், ஒரு கூடை நிறைய மீன்களுடன் ஓர் உருவம் ஓடுவதைப் பார்த்தார்; பதறினார்; ‘‘ஏய்! யார் நீ? நில்! நில்!’’ என்று கத்தியபடியே கையிலிருந்த தடியுடன் துரத்தினார்; பிடிக்க முடியவில்லை; கோபம் தாங்காமல் கையில் இருந்த தடியை ஓங்கிப் பலமாக வீசினார். அது உருவத்தைத் தாக்கியது. அதே விநாடியில் அந்த உருவம் மறைந்தது.
‘‘என்னைத் தெரியவில்லையா? நாள்தோறும் நீ வழிபடும் பழனியப்பனடா நான்!’’ என அசரீரி மட்டும் கேட்டது. பழனித்தேவருக்கு உடம்பு ஆடியது;
உள்ளம் கலங்கியது; ‘‘முருகா! பழனியப்பா! வந்தது நீயா?’’ என வீறிட்டுக் கதறி மூர்ச்சையாகிக் கீழே விழுந்தார். மீன் கூடையுடன் ஓடிய பழனியாண்டவன் அதை, பங்கு பெற முடியாமல் புலம்பிய பெண்ணின் குடிசை வாசலில் வைத்து விட்டு, ‘‘பெண்ணே! உன் பங்கு மீன் இதோ!’’ என்று கூவினார். குரல் கேட்டு வெளியில் வந்து பார்த்த பெண், ஒரு கூடை நிறைய மீன்களைக் கண்டு மனம் மகிழ்ந்து,
‘‘யாரப்பா நீ?’’ என்றாள். பழனியாண்டவர் சிரித்தார்; ‘‘நன்றாக இருக்கிறது நீ பேசுவது! என்னைக்கூவி அழைத்து உன் எண்ணத்தை நிறைவேற்றுமாறு வேண்டுகிறாய். அதை நிறைவேற்ற வந்தால், நீ யாரப்பா என்கிறாய். உனக்கு இன்னும் என்னைத் தெரியவில்லையா?’’ என்று சொல்லிவிட்டு, அப்படியே மறைந்தார். பார்த்துக் கொண்டிருந்த பெண் அதிர்ச்சி அடைந்தாள்;
‘‘அப்பனே! பழனியாண்டி! ஏழை எனக்காக வந்தாயா? முனிவர்களும் ஞானிகளும் துதித்துத் தேடும் நீ, எனக்காக மீன்கூடையைச் சுமந்து வந்தாயே! என்ன பாவம் செய்து விட்டேன் நான்! அதைக்கொடு! இதைக்கொடு! என்று கேட்டு உன்னை, வேலை வாங்கி விட்டேனே! முருகா! இப்போதே புறப்படுகிறேன். உன் சந்நதி வந்து, நான் வேலை செய்தால்தான் என் பாவம் தீரும்; பிறவி ஈடேறும்’’ எனச் சொல்லிவிட்டு, ‘விடுவிடு’வென்று மலை ஏறத் தொடங்கினாள்.
அந்த ஏழைப் பெண் மலை உச்சியை அடைந்த நேரம் - அதிகாலை நேரம். பழனியாண்டவன் சந்நதியில் ஏராளமான பக்தர்கள் விஸ்வரூப தரிசனத்தை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்குபோன ஏழைப்பெண், ‘‘அரோகரா! பால தண்டாயுதபாணிக்கு அரோகரா!’’ என்று வீறிட்டுக் கூவினாள். அதைக் கேட்டுப் பக்தர்கள் எல்லாம் மெய்சிலிர்த்து, அவளைப் பார்த்தார்கள்.
‘‘பழனியாண்டவா! பாவி நான் நேர்மையில்லாதவள். நற்கதி கிடைக்குமா எனக்கு?’’ எனப் புலம்பினாள் ஏழைப்பெண். அப்போது சந்நதியில் பூஜை செய்து கொண்டிருந்த அர்ச்சகருக்கு அருள் வந்தது. ‘‘ஹும்! ஹும்...’’ என ஆடிய அவர், ‘‘என்ன இது? அறிவு தோன்றிய நாள் முதல் என்னை வழிபட்ட புண்ணியவதி நீ! என்ன வேண்டும் உனக்கு?’’ என்றார். ஏழைப் பெண் பதில் சொன்னாள்; ‘‘முருகா! பாவியான என்னையும் உன் வாக்கால், புண்ணியவதி என்றாயே! அருள் தெய்வமான உன் மலைமேல், என்றும் நான் பணி செய்ய வேண்டும். அருள்செய்!’’ என்று தன் உள்ளத்தை வெளிப்படுத்தினாள்.
‘‘அப்படியே ஆகும்!’’ என்று சொல்லி, அர்ச்சகர் உடலில் இருந்து மலை ஏறினார். அதே நேரத்தில் அடிவாரத்தில் மயங்கிக் கிடந்த பழனித்தேவர் மயக்கம் தெளிந்து எழுந்தார்.
நடந்தவைகளை எண்ணித் துடித்தார்.‘‘ஆ! ஐயோ! என்ன அக்கிரமம் இது? தண்டாயுதபாணியைப் போய்த் தடி கொண்டு அடித்தேனே. பழனியாண்டவனை அடிக்குமளவிற்குப் பாவக்கோட்டையாகி விட்டேன். கும்பிட வேண்டிய கைகள் அவனை அடித்தன; வலம்வர வேண்டிய கால்கள் அவனைத் துரத்தின; துதிக்க வேண்டிய நாக்கு தூற்றியது; கனிவோடு பார்க்க வேண்டிய கணகள், கனல் பொங்கச்சீறின அமைதியாய் இருக்க வேண்டிய மனம், ஆத்திரம் கொண்டது.
‘‘இவ்வளவு பாவங்களைச்செய்த நான், இனி உயிரோடு இருப்பது முறையல்லவே. பாவம் செய்த என் அங்கங்களை ஒவ்வொன்றாக அறுத்துப் பழனியாண்டவனின் பலி பீடத்தில் சமர்ப்பணம் செய்ய வேண்டும். இந்நேரம் அவன் சந்நதியில் ஏராளமான பக்தர்கள் இருப்பார்கள். நம் எண்ணம் நிறைவேறாது. எல்லோரும் மலையிலிருந்து இறங்கி வந்தபின் இன்று இரவே, என் அங்கங்களை அறுத்து ஆறுமுகனுக்குக் காணிக்கை ஆக்குவேன்’’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்ட பழனித்தேவர், வீடு போய்ச் சேர்ந்தார்.
உறையிலிருந்த வாளை உருவி சாணை பிடிக்கத் தொடங்கினார். அப்போது காலை மணி பத்து. பழனித் தேவரிடமும் ஏழைப் பெண்ணிடமும் தன் திருவிளையாடலைக் காட்டிய பழனியாண்டவன், அந்த இரவிலேயே நடத்திக்காட்டிய மற்றொரு திருவிளையாடலையும் பார்க்கலாம்! அந்த நாட்டை ஆளும் அரசர் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார்.
-தொடரும்...
நன்றி - ஆன்மிகம் 10-7-2025

0 கருத்துகள்