Advertisement

Responsive Advertisement

4,410 கிலோ சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் வெற்றி: இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு!


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நிகழ்த்திய மற்றுமொரு மாபெரும் சாதனையாக, 4,410 கிலோ எடையிலான சிஎம்எஸ்-03 தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இச்சிறப்பான முயற்சி வெற்றி பெற்றதையடுத்து, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், இந்த மகத்தான சாதனைக்காக இஸ்ரோ குழுவினருக்குத் தனது பாராட்டுதலைத் தெரிவித்துள்ளார்.

மிக அதிக எடைகொண்ட சிஎம்எஸ்-03 (CMS-03) செயற்கைக்கோளை, இஸ்ரோவின் வலிமை வாய்ந்த எல்விஎம்-3 (LVM-3) ராக்கெட் மூலம் ஞாயிற்றுக்கிழமை மாலை விண்ணில் செலுத்தப்பட்டது. திட்டமிட்டபடி, இந்தச் செயற்கைக்கோள் வெற்றிகரமாக புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் திரு. நாராயணன், "எல்விஎம்-3 ராக்கெட் மூலம் சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. சிஎம்எஸ்-03 ஒரு அதிக எடையுடைய செயற்கைக்கோள். இதன் பயன்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இன்று அனைத்தும் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நடைபெற்றது" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.


இஸ்ரோவின் இந்த வெற்றி இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளது. இது குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், தனது 'எக்ஸ்' (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்குப் பாராட்டுத் தெரிவித்தார்.

பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில்,

“நமது வின்வெளித் துறை நம்மைத் தொடர்ந்து பெருமிதம் கொள்ளச்செய்கிறது! இந்தியாவின் அதிக எடை (4,410 கிலோ) கொண்ட தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் ‘சிஎம்எஸ்-03’ வெற்றிகரமாக நிலைநிறுத்தியமைக்காக இஸ்ரோவுக்குப் பாராட்டுகள்.

நமது விண்வெளி விஞ்ஞானிகளின் திறனால் நமது விண்வெளித் துறை படைப்பாற்றல் மற்றும் திறம் வாய்ந்து சிறக்கிறது என்பது போற்றுதற்குரியது. அவர்களுடைய வெற்றிகள் தேசிய முன்னேற்றத்தை மேலும் அதிகரித்திருப்பதுடன் எண்ணற்ற உயிர்களுக்கு வலுவூட்டியுள்ளன”

என்று குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார்.

சிஎம்எஸ்-03ன் முக்கியத்துவம்

4,410 கிலோ எடை கொண்ட சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள், இந்தியாவின் தொலைத்தொடர்பு சேவைகளை மேலும் மேம்படுத்தும் நோக்குடன் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், நாடு முழுவதும் தகவல் தொடர்பு, இணைய சேவை மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரோவின் இந்தத் தொடர்ச்சியான வெற்றிகள், உலக விண்வெளி அரங்கில் இந்தியாவின் நிலையை மேலும் வலுப்படுத்துகின்றன.

இதனை இந்திய விண்வெளியின் 'பாகுபலி' என்று குறிப்பிடலாமா.....

-S.B.

கருத்துரையிடுக

0 கருத்துகள்