Advertisement

Responsive Advertisement

அவர் நாண நன்னயம்! - 2 - முனைவர் சுந்தர ஆவுடையப்பன்


ஒரு கிராமத்தில் பக்கத்துப் பக்கத்து வீடுகளில் நடந்த ஒரு சம்பவம் சுவாரஸ்யமானது. அந்தக் காலத்திலும் சரி, இந்தக் காலத்திலும் சரி, கிராமங்களில் வீடுகள்தோறும் வீட்டுத் தோட்டங்கள் போட்டுக் காய்கறிகள் பயிர் செய்வதும், ஆடுமாடுகள் கோழிகள் வளர்ப்பதும் வழக்கம். அப்படி ஒரு வீட்டில் மூன்று கோழிகளை ஒருவர் வளர்த்து வந்தார். அவரது பக்கத்து வீட்டுக்காரர் கோழிகள் எதுவும் வளர்க்கவில்லை; தன் வீட்டுக் கொல்லைப்புறத்தில் காய்கறித் தோட்டம் மட்டும் போட்டிருந்தார். இரண்டு வீட்டுக் கொல்லைப் புறத்திற்கு இடையே வேலிகளோ அல்லது மதிற்சுவர்களோ கட்டப்படவில்லை.

ஒவ்வொருநாள் விடிந்ததும், தன்வீட்டில் பஞ்சாரத்தில் அடைக்கப் பட்டிருக்கும் கோழிகளை வீட்டுக்காரர் மேய்ச்சலுக்காகத் திறந்துவிடுவார். ஆனால் அந்த மூன்று கோழிகளும் அந்த வீட்டுக் கொல்லைப் புறத்தில் மேயாமல், பக்கத்துவீட்டுக் கொல்லைப் புறத்திற்குச் சென்று, அங்கிருந்த காய்கறிச் செடிகளைக் கொத்திக்கிளறிச் சேதப்படுத்தி மேய்ந்து கொண்டிருந்தன. பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் அப்போதைக்குக் கோழிகளை அந்த வீட்டுப்பக்கமாக விரட்டினாலும், அவை மீண்டும் மீண்டும் வந்து அவர் வீட்டுக் கொல்லைப்புறப் பயிர்களிலேயே மேய்ந்து கொண்டிருந்தன.கோழிக்குச் சொந்தக்காரரைப் பார்த்துக் கோழிகள் செய்வதைச் சொல்லி, அவற்றைக் கூடைகளுக்குள் அடைத்து வைத்து வளருங்கள்! அல்லது உங்கள் வீட்டுக் கொல்லைப் புறத்திலேயே மேயும்படிப் பார்த்துக் கொள்ளுங்கள்! என்று அறிவுரை கூறினார்.

பக்கத்துவீட்டுக்காரரின் புகாரைக் கேட்ட கோழிவீட்டுக்காரர், "ஐயா! எனக்கு ஆயிரம் வேலைகள் வெளியில் இருக்கின்றன; எந்நேரமும் கோழிகளை உங்கள் வீட்டுப்பக்கம் வரவிடாமல் கோழிமேய்க்கும் வேலையை மட்டும் என்னால் பார்க்க முடியாது. உங்களுக்கு வேண்டுமானால், கொல்லைப்புறத்தில் ஒரு தடுப்புச் சுவரோ வேலியோ போட்டு வைத்துக் கொள்ளுங்கள்; வசதிப்பட்டால், எங்கள் வீட்டுக் கோழிகள் உங்கள் வீட்டுப்பக்கம் வராமலிருக்க ஒரு ஆளைக் காவலுக்குக்கூட அமர்த்திக் கொள்ளுங்கள்!" என்று முகத்திலடித்தாற் போலச் சொல்லி விட்டார்.

கோழிக்காரரை எப்படித் திருத்துவது? யோசித்தார் பக்கத்து வீட்டுக்காரர். கடைக்குச் சென்று ஐந்தாறு கோழிமுட்டைகளை வாங்கி வந்தார். அன்றுகாலை பஞ்சாரத்தைத் திறந்துவிட்டவுடன் வழக்கம்போலக் கோழிகள், பக்கத்து வீட்டுக் கொல்லைப் புறத்துக்கு வந்து காய்கறிச் செடிகளுக்குள் புகுந்து செடிகளைக் கொத்திக் கிளற ஆரம்பித்தன. அந்த நேரத்தில் தான் கடையில் வாங்கி வந்திருந்த கோழி முட்டைகளைச் செடிகளுக்கு அடியில் வைத்துக், கோழிக்காரர் பார்க்கும் நேரத்தில், அவர் பார்க்கும்படியாக ஒவ்வொரு முட்டையாக எடுத்து வீட்டுக்குள் கொண்டு சென்றார்.

அவ்வளவுதான் பதறிப்போய்விட்டார் கோழிக்காரர். இந்தக்கோழிகள் பக்கத்து வீட்டுக் கொல்லைப்புறத்துக்கு மேய மட்டும் செல்லாமல் அங்கு முட்டைகளையும் இட்டு வருகின்றனவா? என்று பார்த்தார். ஓடிச்சென்று மூன்று கோழிகளையும் ஒரே பிடியாகப் பிடித்துத், தன் வீட்டுப் பஞ்சாரத்திற்குள் போட்டு அடைத்து வைத்துவிட்டார். இனி எந்தக்காலத்திலும் அந்தக் கோழிகள் பக்கத்துவீட்டுக் கொல்லைப்புறத்திற்கு மேய வரப்போவதேயில்லை.

இதுதான் அவர்நாண நன்னயம் செய்துவிடல். பக்கத்துவீட்டுக்காரர் நினைத்திருந்தால் தன்வீட்டுக் கொல்லைக்கு மேயவந்து காய்கறிச் செடிகளைச் சேதப்படுத்திய கோழிகளைப் பிடித்துச் சிறைப் படுத்தியிருக்கலாம். அல்லது அடித்துச் சமைத்தும் உண்டிருக்கலாம். ஆனால் அவை மென்மேலும் இருவீட்டார்களுக்கும் கசப்புணர்வையே வளர்த்திருக்கும். பிரச்சனைகளுக்கு எதிர் வினைகளே தீர்வாகாது. எதிரியும் உணர்ந்து திருந்தும்படி நன்மைகள்வழி நல்வழிப்படுத்துவதே சிறந்த தீர்வு.

மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் அறமற்ற செயல்களில் ஈடுபடுவதற்கு நாணப்பட வேண்டும். தன்மானத்திற்குத் தலைகுனிவாகவும், சுயமரியாதைக்கு இழுக்காகவும் உள்ள செயல்களைச் செய்யக்கூடாது. அவமானம் உண்டாகும் காரியத்தில் தம்மை அறியாமலும்கூட ஈடுபட்டு விடக்கூடாது. ஒரு மனிதர் எவ்விதமான துன்பம் வந்தாலும், எவ்விதமான இக்கட்டு வந்தாலும், தனது நிலையிலிருந்து தாழ்ந்துவிடக் கூடாது. அப்படி ஒரு மனிதன் தனது நிலையிலிருந்து தாழ்வதைத் தலையிலிருந்து உதிரும் மயிருக்கு உவமைகாட்டி இழிவாகக் குறிப்பிடுகிறார் திருவள்ளுவர்.

நாணப்படும்படி செயல்கள் நிகழ்ந்து விடும்போது, அக்காலத் தமிழ்மன்னர்கள் உண்ணாமல் வடக்கிருந்து உயிர் துறந்த மான வரலாற்றைச் சங்ககால வரலாறு எடுத்துரைக்கிறது. சேரமன்னன் பெருஞ்சேரலாதன், கரிகால்சோழன் எய்தஅம்பு முதுகில் புண் ஏற்படுத்தியதற்காக நாணி வடக்கிருந்து உயிர்துறக்கிறான். போரில் வீரமரணம் என்பது மார்பில் வேல்தாங்கி இறப்பது; ஆனால் கரிகாலன் எய்த அம்பு புறமுதுகைப் புண்ணாக்கியது என்றால், அது அம்பு எய்த கரிகாலனுக்கும் இழுக்கு! அம்பைத் தாங்கிய பெருஞ்சேரலாதனுக்கும் இழுக்கு! எனவே நாணப்பட்டு வடக்கிருந்து இறக்கிறான் பெருஞ்சேரலாதன்.

தன்னுடைய சொந்த மகன்களாலேயே தனக்கு அவமானம் ஏற்பட்டுவிட்டதால், அதற்குப் பொறுக்காத கோப்பெருஞ்சோழனும் வடக்கிருந்து உயிர் துறந்த வரலாறும் புகழ்மணக்கும் புறநானூற்றில் உண்டு.

பிறக்கின்ற மனிதர் எல்லாரும் வாழ்ந்தாலும் மறைந்தாலும் ஒருசிலரின் மறையாத நிலைத்த புகழுக்கு அடிப்படையாகத் திகழ்வது, அறமற்ற செயல்களைச் செய்வதற்கு நாணப்படுவதே ஆகும். அடுத்தவர் நமக்கு அறமற்ற செயல்களைச் செய்தாலும் அவர்களாக உணர்ந்து நாணப்படும்படியாக அவர்களுக்கு நன்மையையே செய்வதுதான் சிறந்த மனிதச் செயல் ஆகும்.

நன்றி - மாலைமலர் 15-09-2025

கருத்துரையிடுக

0 கருத்துகள்