ஆனந்தம் அருளும் அற்புத சூரியனே போற்றி!!
‘நல்லது செய்தால் சொர்க்கத்துக்குப் போவாய்; தீயன செய்தால் நரகத்துக்குப் போவாய்’ - நம் முன்னோர்கள் நமக்கு அறிவுறுத்தியும், நம்மை பயமுறுத்தியும் சொன்ன வாசகம் இது. சொர்க்கம் என்றால் எத்தகைய சுகம், நரகம் என்றால் எத்தகைய சோகம் என்ற கேள்விகளுக்கு அவர்களால் கற்பனையாகத்தான் பதில் சொல்ல முடிந்ததே தவிர, திருப்தியளிக்கும் வகையில் விளக்க இயலவில்லை. ‘கருட புராணம்’ புத்தகத்தைக் காட்டி நரகத்தில் ஒரு ஆன்மா அனுபவிக்கக்கூடிய வேதனைகளை சிலர் விவரிக்க முற்பட்டதும் உண்டு.
சொர்க்கமோ, நரகமோ அது எப்படி இருக்கும்? அதையும் இறந்த பிறகுதானே அறியமுடியும்? அப்படியே அனுபவித்தாலும், அதை எப்படி மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல முடியும்? பெரியவர்களைப்போல நாமும் கற்பனையாக எண்ணிப் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான். ஆனால், இப்படி அறிவுறுத்தியதற்கும், பயமுறுத்தியதற்கும் ஒரே நோக்கம் - நல்லன மட்டுமே சிந்திக்கவேண்டும்; நல்லன மட்டுமே பேசவேண்டும், நல்லன மட்டுமே செய்யவேண்டும் என்பதுதான்.
கொஞ்சம் ஆழ சிந்தித்தோமானால் ‘கருட புராணம்’ என்பதே யாரோ குரூர சந்தோஷியின் படைப்பாக இருக்குமோ என்றுகூட யோசிக்கத் தோன்றுகிறது. ‘நீ என்னை இந்த அளவுக்கு நிந்தித்தாயா, இப்படியெல்லாம் இம்சை செய்தாயா, அதற்கு பதில் இந்த அளவுக்கு நீயும் கஷ்டப்படு, துன்பம் அனுபவி,’ என்று சரிக்குச் சரியாகவோ அல்லது அதற்கு மிகையாகவோ பழிவாங்க விரும்பும் குரூரம்.
ஆனால் சொர்க்கம், நரகம் இரண்டையும் நாம் இங்கேயே அனுபவிக்கிறோம் என்பதுதான் உண்மை. பல குற்றங்கள் புரிந்து, பலரை ஏமாற்றி, வேதனைப்படவைத்து, துரோகம் இழைத்து, தீயச்செயல் புரிந்து சந்தோஷப்பட்டு இந்த துர்ச்செயல்களால் ஏகப்பட்ட பணம் சேர்த்தவர்கள் வெகு ரகசியமாகவே, அந்தப் பணத்தால் சில வசதிகளை அனுபவிக்க வேண்டியிருக்கிறதே, அதுதான் நரகம்! வெளிப்படையாக, சுதந்திரமாக இயங்க இயலாமல், போலி மகிழ்ச்சியைக் காட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறதே, அதுதான் நரகம்.
யாருக்கும் எந்தத் துன்பமும் தராமல், எந்தத் தவறையும் செய்யாமல், நமக்கு இடப்பட்ட பொறுப்பை முழு விசுவாசத்துடனும், அக்கறையுடனும், நம் மனம் திருப்தியடையும் வகையில் செய்கிறோமே, நன்றாக ருசித்து உண்கிறோமே, சுகமாகத் தூங்கி எழுகிறோமே, இதுதான் சொர்க்கம். நாம் உணர்வுகளுடன் இருக்கும்போதே, இங்கேயே, சொர்க்கத்தையோ, நரகத்தையோ அனுபவித்துவிடுவோம். இரண்டிற்கும் உள்ள அனுபவ வித்தியாசத்தை உணர்ந்து இரண்டில் சிறப்பானதைத் தேர்ந்தெடுப்போம், சந்தோஷமாக வாழ்வோம்.
அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்…

0 கருத்துகள்