Advertisement

Responsive Advertisement

மாக்சிம் கார்க்கி - வாழ்வும் இலக்கியமும் - எஸ்.ஏ.பெருமாள்


மாக்சிம் கார்க்கி
- உலகம் முழுவதும் அறியப்பட்ட பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகன். மனிதகுலத்தின் மாண்புகளையும் பெருமைகளையும் உலகறியச் செய்தவர். அன்று முதல் இன்று வரை கார்க்கியின் “தாய்” புரட்சிகரத் தொழிலாளி வர்க்கத்திற்கு வீரியமூட்டி வருகிறாள்.

இளமையில் கார்க்கியைப் போன்று துன்ப துயரங்களை அனுபவித்தவர் யாரும் இருக்க முடியாது. அவரது தந்தை மாக்சிம் கார்க்கியின் குடும்பத்தில் அவர் சேற்றில் மலர்ந்த செந்தாமரை போன்று முளைத்தார். “ஒரு தோட்டத்தில் செடி கொடிகளும் மரங்களும் பூத்துக் குலுங்கின. ஆனால் அவைகள் எல்லாம் ஒருநாள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டன” என்று தனது தந்தை இறந்ததும் கார்க்கி கூறினார். தனது இறுதிக் காலம் வரை இரண்டு விஷயங்களை அவர் வெறுப்புணர்ச்சியோடு கண்டனம் முழங்குவார். ஒன்று அக்கிரம ஆட்சி நடத்திய ஜார் மன்னனும் முதலாளித்துவ சமூகமும் ஆகும். மற்றொன்று அவரது தந்தையைக் கொடுமைப்படுத்தி அடித்துக் கொன்ற அவரது பாட்டனார் வாசிலிகாசிரின் ஆவார்.

இளமைக்காலம்

கார்க்கியின் இளவயது வாழ்வு துயரமும் கண்ணீரும் இருளும் நிறைந்தது. அந்த இருளில் அவருக்கு ஒளிவிளக்காய்த் திகழ்ந்தது. அவரது பாட்டி அக்குலினா. இந்தப் பாட்டி மட்டும் இல்லையென்றால் பேரன் கார்க்கி எட்டு வயதிலேயே மடிந்திருப்பார். தனது பாட்டியைப் பற்றி அவர் குறிப்பிடும்போது - “என் பாட்டிதான் மனித வாழ்வை எனக்கு முதன்முதலில் போதனை செய்தார். அவளது வாழ்க்கை அனுபவங்களிலிருந்து படைத்து எனக்குச் சொன்ன ராஜா ராணிக் கதைகள்தான், எனக்கு அறிவுப் பாடம் நடத்தின.” அந்தப் பாட்டியின் கதைகளைத் தனது இறுதிக்காலம் வரை கேட்கக் கிடைக்காத புதையல் என்று மதித்துப் பேணிப் பாதுகாத்தார். கார்க்கியின் வாழ்வுக்கு இன்பமூட்டி, அறிவொளி பாயச் செய்த பாட்டி அக்குலினாவை “எனது குழந்தைப் பருவம்” என்ற நூலில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

தனது பத்தாவது வயதிலேயே வாழ்க்கை நடத்த வீட்டை விட்டு வெளியேறினார். தந்தை இறந்ததால் ஏற்பட்ட துயரமும் வறுமையும் அவரை விரட்டின. குழந்தைத்தொழிலாளியாக மாறி அவர் பல இடங்களில் வேலை செய்தார். பத்து வயது முதல் கார்க்கி தனக்கென ஒரு குறிப்பேடு வைத்துக் கொண்டார். பத்து வயதிலேயே அக்காலத்தில் இப்படி ஒரு பழக்கம் எப்படி அவருக்கு வந்தது என்பது புரியாத புதிராக உள்ளது.

இந்தக் குறிப்பேட்டில்தான் பாட்டி அக்குலினா கூறிய கதைகளை எழுதி வைத்திருந்தார். ஆனால் அந்தக் குறிப்பேட்டை அவர் யாரிடமும் காட்டாமல் தனக்கு மட்டுமே பாதுகாப்பாக வைத்திருந்தார்.

அந்த இளவயதில் பல நாட்கள் பட்டினி கிடந்து வீதிகளில் அலைந்தார். வேலை கிடைக்காமல் வறுமையில் வாழ்க்கையில் வெறுப்புற்றார். தன்னைத்தானே அவர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்ய முயன்றார். அந்தத் துயரச் சம்பவம் 1887-ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் நாள் இரவு எட்டு மணிக்கு நடந்தது. தன்னைச் சுட்டுக் கொள்வதற்கு முன்பு அவர் ஒரு குறிப்பு எழுதி வைத்திருந்தார். அதை அவர் தனது மனைவியிடமும் நண்பர்களிடம் மட்டும் பிற்காலத்தில் சொல்லிச் சிரிப்பார். அந்தக் குறிப்பில் தனது தற்கொலைக்கு ஜெர்மானியக் கவிஞர் ஹைனே தான் காரணம் என்று எழுதியிருந்தார். மனிதனுக்கு உண்டாகும் இதய வலி பற்றித் தனக்கு முதன்முதலாக உணர்த்திய கவிஞன் ஹைனேவைப் பாராட்டியும் எழுதியிருந்தார்.

துப்பாக்கிச் சூட்டுக் காயம் ஆறி மருத்துவமனையை விட்டு சுகமாய் திரும்பினார். ஆனால் அந்தச் சூட்டினால் ஏற்பட்ட தசைவலிகள் அவர் சாகும் வரை துன்புறுத்தின. எனது இளமைப் பருவத்தை தேவன் பறித்து விட்டான் என்று அவர் வேடிக்கையாய்க் குறிப்பிடுவது உண்டு. அதற்காக அவர் வேதனைப்பட்டதில்லை. தனது 24 வயதில் இடுகாட்டில் பிணங்களின் தலைமாட்டில் நின்று கூலிக்குப் பிரார்த்தனை செய்யும் வேலை செய்தார். இது ஆறு மாத காலம் மட்டுமே நீடித்தது. அது அவரது வாழ்க்கையில் நெஞ்சுறுதியும் தெம்பும் பெற உரமூட்டியது. பிணங்களின் வாடையை ஆறு மாதம் பக்கத்திலிருந்து கார்க்கி நுகர வேண்டியிருந்தது. வெளியில் மக்கள் இந்தப் பிணவாடையை விட மோசமான வாழ்வை அனுபவித்தனர். வறுமையால் அவர்கள் அனுபவிக்கும் பிணவாடையில் இருந்து அவர்களை விடுவிக்கும் லட்சியத்தில் உறுதிகொண்டார்.

முதல் கவிதை

ஒருமுறை கார்க்கி நேங்குரோத் நகரில் வாழ்ந்தபோது அவரது அறைக்குள் ஒரு திருடன் புகுந்துவிட்டான். அவன் நெடுநேரம் அந்த அறைக்குள் எதையோ தேடிக் கொண்டிருந்தான். அப்போது பசியோடு கார்க்கி விழித்துக் கொண்டிருந்தார். முதலில் திருடனின் தேடலை ரசித்த போதிலும் பின்பு அது அவன் மீதான பரிதாபமாக மாறியது. அவர் எழுந்து உட்கார்ந்து கொண்டு திருடனைப் பார்த்து “நண்பனே, உனது முயற்சி வீணானது. கடந்த மூன்று மணிநேரமாக என் அறையில் நீ தேடிக் கொண்டிருக்கும் பொருளை நான் கடந்த இரண்டு நாட்களாக இரவு பகலாய்த் தேடி வருகிறேன். விளக்கு ஏற்ற எண்ணெய் வாங்கக்கூடப் பணமில்லாமல் இருளில் தவிக்கிறேன். போயும் போயும் திருடுவதற்கு என் வீட்டுக்கு வந்தாயே. திருட்டுத் தொழிலுக்கு நீ புதியவரோ? சரி, எதற்கும் நாளைக்கு நீ பகலில் வா. இரண்டு பேரும் சேர்ந்து தேடுவோம்” என்று கூறினார். அதற்குப் பிறகு திருடன் அந்தப் பக்கம் தலைகாட்டவேயில்லை.

கார்க்கி முதன்முதலாகக் கவிதை எழுதியது வேடிக்கையான சம்பவமாகும். அது அவர் காசான் ரயில் நிலையத்தில் காவல்காரராக வேலை செய்தபோது நடந்தது. அங்கு அவரது அறைக்குப் பக்கத்தில் ரயில்வே தொழிலாளர்களுக்கான சமையலறை இருந்தது. அங்கு ஒரு தடித்த சமையல் காரி பணியாற்றினார். வாலிபமிடுக்கும் உடற்கட்டும் மிக்க கார்க்கியை அந்தப் பெண் இரவு நேரங்களில் தொந்தரவு செய்து வந்தாள். அவளது தொல்லை குறித்து தொழிலாளர்களிடமும், ரயில் நிலைய அதிகாரி வரை கார்க்கி புகார் கூறினார். ஆனால் எவரும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார்.

சமையல்காரப் பெண்ணின் நச்சரிப்பைத் தாங்கிக் கொள்ள முடியாமல் கார்க்கி அது பற்றி ஒரு கவிதை எழுதினார். அதில் சமையல்காரியைப் பற்றி முதலில் வர்ணித்துவிட்டு, அவளிடம் சிக்கி ஒவ்வொரு இரவும் தான்படுகிற நரக வேதனையை நகைச்சுவை ததும்ப எழுதினார். அதில் ரயில்வே அதிகாரிகளின் கவனத்தையும் ஈர்க்கும் விதத்தில் அது இருந்தது. கவிதையை எழுதி அதிகாரியிடம் கொடுத்தார். இருபது தினங்கள் கழித்து கார்க்கிக்கு ஊர் மாற்ற உத்தரவு கிடைத்தது. அக்காலத்தில் ஊர்மாற்றம் பெறுவது எளிதல்ல. அது சொர்க்கத்திற்கே சென்று திரும்புவது போன்றது. அதிகாரிகளுக்குக் கார்க்கியின் கவிதை புரியாத புதிராகவே இருந்தது. எனினும் ஊர் மாற்றம் செய்தனர்.

அவரது முதல் கவிதை இவ்வாறு முக்கியத்துவம் பெற்றது. தொழிலாளர்களும் அந்தக் கவிதையைப் படித்து கிண்டலும் கேலியும் சிரிப்புமாக இருந்தனர். ஊர் மாற்றத்திற்குப் பின்பு கார்க்கி தனது இரண்டாவது கவிதையை எழுதினார். “பழங்கமுகு மரத்தின் கீதம்” என்ற அந்தக் கவிதை எங்கும் பிரசுரமாகவில்லை. தொடர்ந்து நிறைய கவிதைகள் எழுதினார். எனது பெரும்பாலான கவிதைகள் இறந்தே பிறந்தன என்று அவர் கூறினார். எனது கவிதைகளில் மனிதனின் உணர்ச்சிகளைத் தட்டி எழுப்பும் துடிப்பு ஏனோ மந்தமாக உள்ளது என்று தனது நண்பர்களிடம் சுயவிமர்சனம் செய்துகொண்டார். இதனால் அவர் உயிரோடு வாழ்ந்த வரை அவரது கவிதைகளைத் தொகுப்பாக வெளியிட அவர் சம்மதிக்கவேயில்லை. அவர் இறந்த பின்புதான் அந்தக் கவிதைத் தொகுப்பு வெளியானது.

கார்க்கி முக்கியமான நூல்களைத் தவிர மற்றவைகளை ஒருமுறைக்கு மேல் வாசிப்பதில்லை. படித்த நூல்களின் உள்ளடக்கத்தைப் பல ஆண்டுகளுக்குப் பின்னர்கூடச் சொல்லுவார். படிக்கும் விசயங்கள் அவரது சிந்தனையில் ஆழமாய்ப் பதிந்திருந்தன. அவரது நினைவாற்றல் அபூர்வமானது. தனது பத்து வயதில் அவர் முதலில் வாசித்த ஹான்ஸ் ஆண்டர்சனின் சிறுவர் கதைத் தொகுதியிலுள்ள பல கதைகளை அவர் கடைசி வரை மறக்கவில்லை.

மகனின் மரணம்

கார்க்கிக்கு ரஷ்ய மொழி தவிர பிரெஞ்சு, இத்தாலிய மொழிகளும் நன்கு தெரியும். ஆங்கிலம், ஜெர்மன் மொழிகளும் தெரியும். கார்க்கியின் மகனுக்கும் ஐந்து மொழிகள் தெரியும். மகன் உதவியைக் கொண்டு கார்க்கி உலக இலக்கியங்கள் பற்றிய பல விமர்சனங்களையும், ஒரு விமர்சன நூலையும் வெளியிட்டார். பல நாடுகளிலிருந்து வரும் பத்திரிகைகளில் வெளியாகியுள்ள கதைகள், நாவல்கள், கட்டுரைகளைப் படித்து கார்க்கியின் மகன் தனது தந்தைக்கு எடுத்துரைப்பார். அதே போல் கார்க்கியின் கதைகளை ரஷ்ய மொழியிலிருந்து பிறமொழிகளில் மொழிபெயர்த்து அனுப்புவதிலும் உதவினார். உலக நாடுகளிலிருந்து நண்பர்கள் எழுதும் கடிதங்களுக்கு மகனின் உதவியுடன் பதில் எழுதினார்.

பிரெஞ்சு எழுத்தாளர் ரோமெய்ன் ரோலந்து, அமெரிக்க எழுத்தாளர் தியோடர் ட்ரீசர், ஜாக்லண்டன், அப்டன் சின்கிளேர், ஆங்கில நாவலாசிரியர்கள் ஜான் கால்ஸ்வொர்த்தி, ஜேன் ஆன்டர்சன், சீன எழுத்தாளர் லூசுன் ஆகியோருடன் கார்க்கிக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. கார்க்கி வெளிநாடுகளுக்குச் சென்றபோதெல்லாம் தனது மகனையும் அழைத்துச் சென்றார். வெளிநாடுகளில் சாதாரண மக்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி அவர்களைப் பற்றியும், வாழ்வு மற்றும் பழக்கவழக்கங்களையும் அறிந்துகொள்வதில் அவரது மகனின் மொழிபெயர்ப்பு பெரிதும் உதவியது. ஐரோப்பா, அமெரிக்க நாடுகள்பற்றி கார்க்கி கட்டுரைகள் எழுத இவை உதவியாக இருந்தன. ஆனால் கார்க்கியின் துரதிருஷ்டம் அவருக்குப் பேருதவிபுரிந்த மகன் 1934ஆம் ஆண்டு திடீர் மரணம் அடைந்தார். மகனின் மரணம் அவரை அடியோடு உலுக்கிவிட்டது. அந்தப் பாதிப்பு கார்க்கிக்கு இறுதிவரை தொடர்ந்தது.

-தொடரும்...

நன்றி - கீற்று 18-02-2011

கருத்துரையிடுக

0 கருத்துகள்