வங்காள விரிகுடாவில் கங்கை, பிரம்மபுத்திரா, மேக்னா ஆறுகளின் சங்கமத்தில் உருவான மாபெரும் இயற்கை அதிசயம், சுந்தரவனங்கள் ஆகும். இந்தியா (மேற்கு வங்காளம்) மற்றும் வங்காளதேசம் ஆகிய இரு நாடுகளின் எல்லைகளைத் தொட்டுப் பரவியுள்ள இக்காடு, சுமார் 10,277 சதுர கி.மீ. பரப்பளவில் விரிந்து, உலகின் மிகப்பெரிய சதுப்புநிலக் காடு என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
ஊக்ளி ஆற்றில் தொடங்கி வங்காளதேசத்தின் பாலேஷ்வர் ஆறு வரை பரவியுள்ள இந்தக் காடு, அடர்ந்த மற்றும் திறந்த சதுப்புநிலக் காடுகள், வேளாண் நிலங்கள், சேற்றுப் படுகைகள், மற்றும் எண்ணற்ற ஓத நீரோடைகள் (Tidal Channels) ஆகியவற்றின் சிக்கலான வலையமைப்பைக் கொண்டுள்ளது. இதன் பெரும்பகுதி வங்காளதேசத்தின் குல்னா கோட்டத்தில் அமைந்துள்ளது.
இந்தக் காடுகளில் அதிக அளவில் காணப்படும் தாவர இனங்கள் சுந்தரி (Heritiera fomes) மற்றும் தில்லை (Excoecaria agallocha) ஆகும். சுந்தரி மரத்தின் பெயரிலிருந்தே சுந்தரவனம் (அழகிய காடு) என்ற பெயர் வந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
சுந்தரவனங்கள் 453 வனவிலங்கு இனங்களுக்கு வாழ்விடமாக உள்ளது. இவற்றில் 290 பறவை இனங்கள், 120 மீன் இனங்கள், 42 பாலூட்டிகள் ஆகியவை அடங்கும். குறிப்பாக, உலகின் புகழ்பெற்ற வங்காளப் புலி (Bengal Tiger), புள்ளிமான், முதலைகள், பாம்புகள் உள்ளிட்ட அரிய உயிரினங்கள் இங்கு வாழ்கின்றன. இந்தப் பகுதியின் நான்கு பாதுகாக்கப்பட்ட பகுதிகள் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியத் தளங்களாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.
சுந்தரவனங்கள், கொல்கத்தா, குல்னா போன்ற முக்கிய நகரங்களைச் சுற்றியுள்ள இலட்சக்கணக்கான மக்களை சூறாவளிகளாலும், வெள்ளத்தாலும் ஏற்படும் பேரழிவுகளிலிருந்து காக்கும் ஒரு பாதுகாப்பு அரணாக செயல்படுகிறது. இது கடலோர மக்களை ஆழிப்பேரலை மற்றும் மண் அரிப்பிலிருந்தும் பாதுகாக்கிறது.
இருப்பினும், இந்த அரிய சூழல் தீவிர அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. சிதர் (2007) மற்றும் ஐலா (2009) போன்ற சூறாவளிகள் காட்டின் பெரும் பகுதியைச் சேதப்படுத்தியுள்ளன. காலநிலை மாற்றம், கடல் மட்ட உயர்வு, நன்னீர் வரத்து குறைவதால் அதிகரிக்கும் உப்புத்தன்மை மற்றும் மனிதத் தலையீடுகள் ஆகியவை இந்தக் காட்டைத் தொடர்ந்து பாதிக்கின்றன. மேலும், நிலக்கரியை எரிபொருளாகக் கொண்ட ராம்பால் மின் நிலையத்தின் கழிவுகள், இந்தக் காட்டை மேலும் சேதப்படுத்தும் என்று யுனெஸ்கோ எச்சரித்துள்ளது.
இந்த நெருக்கடிகளைக் கருத்தில் கொண்டு, சுந்தரவனத்தின் அழியும் உயிரினப் பகுதிகளை மீட்டெடுக்கவும், உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், சதுப்புநிலக் காடுகளை மீட்டெடுத்து நிர்வகிக்கவும் நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர். வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கு முழு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், மனிதத் தலையீட்டால் பல்லுயிர் பெருக்கம் குறைவது உலகளாவிய கவலைக்குரிய விஷயமாக உள்ளது.
-S.B.




.jpg)
0 கருத்துகள்