Advertisement

Responsive Advertisement

சாக்ரடீஸின் கோழிக் கடன்


பழங்கால கிரேக்கத்தில், ஏதென்ஸ் நகரின் வீதிகளில் அறிவுப் பந்தத்தைப் பிடித்து நடந்தவர் சாக்ரடீஸ். அவர் ஏழையாயிருந்தார், எளிமையாயிருந்தார், ஆனால், அவரது வார்த்தைகள் ஒவ்வொன்றும் இடி முழக்கமாயிருந்தன. அதிகாரத்தின் முட்டாள்தனத்தைக் கேள்வி கேட்டார்; அறிவைத் தேடினார்.

அவரது புரட்சிகரமான கருத்துக்களுக்காக, ஏதென்ஸ் சபை அவருக்கு மரண தண்டனையை விதித்தது. "இவன் இளைஞர்களின் மனதைக் கெடுக்கிறான்! தெய்வ நம்பிக்கையை இகழ்கிறான்!" என்று குற்றம் சாட்டினர்.

சாக்ரடீஸுக்கு விஷம் அருந்தும்படி கோப்பை கொடுக்கப்பட்டது. விஷத்தை அருந்துவதற்கு முன், அவரது அன்புச் சீடர்களான பைடோவும், கிரீட்டோவும் துயரத்துடன் அவரைச் சூழ்ந்தனர். மரணத் தருவாயில் இருக்கும் தன் ஆசானைப் பார்த்து அவர்கள் கண்ணீர் வடித்தனர்.

சாக்ரடீஸ் அமைதியாக அவர்களை நோக்கினார். அவரது கண்களில் அச்சமில்லை; இறுதி விடைபெறும் வேதனையும் இல்லை.

"என் அன்புக் குழந்தைகளே," என்று கரகரத்த குரலில் சாக்ரடீஸ் பேசினார். "என் ஆன்மா விடுதலை அடையும் நேரம் வந்துவிட்டது. இந்த உலகில் நான் கடமைப்பட்டிருப்பதை நிறைவேற்றாமல் செல்ல விரும்பவில்லை."

சீடர்கள் குழப்பத்துடன் ஒருவரையொருவர் பார்த்தனர். ‘இந்த மகத்தான ஞானி, தன் வாழ்க்கையில் யாருக்குக் கடன்பட்டிருக்க முடியும்?’ என்று எண்ணினர்.

சாக்ரடீஸ் தொடர்ந்தார்: "நான் நம் நகரத்து எக்ஸ்ளிப்யாஸி என்பவரிடம் ஒரு கோழி கடன் வாங்கியிருந்தேன். ஒரு நோயிலிருந்து மீண்ட பின், அந்தக் கோழியைப் திருப்பித் தருவதாக அவரிடம் வாக்குக் கொடுத்திருந்தேன். ஆனால், அதைத் திருப்பிக் கொடுப்பதற்குள் என் நிலைமை இப்படி ஆகிவிட்டது."

அவர் சிறிது நிறுத்தினார். விஷத்தின் தாக்கம் உடலில் ஏறத் தொடங்கியது.

"நீங்கள் இருவரும், தயவுசெய்து எக்ஸ்ளிப்யாஸியிடம் அந்த கோழியைக் கொடுத்து, என் கடனைத் தீர்த்துவிடுங்கள். ஒரு சிறிய கடனாக இருந்தாலும், நேர்மை என்பது மரணத்திலும் தொடர வேண்டும்," என்று சொல்லி, கண்களை மூடினார்.

அந்த வார்த்தைகள் முடிந்த கணமே, சாக்ரடீஸின் உயிர் பிரிந்தது.

பைடோவும் கிரீட்டோவும் அதிர்ச்சியுடன் ஒரு கோழிக்காகத் துடித்து உயிர் விட்ட ஆசானின் முகத்தைப் பார்த்தனர். அவர் ஒரு நாட்டின் நீதியால் மரண தண்டனை பெற்றவர். விரும்பியிருந்தால், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஓடியிருக்கலாம்; அல்லது கடைசிக் கணத்தில் உலகியல் பற்றுகளை உதறித் தள்ளியிருக்கலாம். ஆனால், அவர் ஒரு சிறு கோழிக் கடனைக் கூடத் தன் ஒழுக்கக் கடமையிலிருந்து பிரித்துப் பார்க்கவில்லை.

அந்த நாள் முதல், சாக்ரடீஸின் இந்தக் கதை தலைவர்களுக்கு ஒரு மகத்தான பாடம் ஆனது.

பாடம்:

தலைவன் என்பவன் தன் உறுதிமொழிக்கும், கடமைக்கும், நேர்மைக்கும் மதிப்பளிப்பவன். அதிகாரம் கையில் இருக்கும்போது பலர் கோடிக்கணக்கான ஊழல்களில் ஈடுபடுகின்றனர். ஆனால், சாக்ரடீஸைப் பொறுத்தவரை, ஒரு கோழிக்கான கடனைத் தீர்க்காமல் இறப்பது, ஒரு தேசத்தின் மொத்த வரிப்பணத்தைக் கொள்ளையடிப்பதற்குச் சமமானதே.

"கடமை, கண்ணியம், கட்டுப்பாடு" ஆகிய இந்த மூன்று மந்திரங்களும் வெறும் வார்த்தைகள் அல்ல. அவை, மரணத்தின் வாயிலில் நின்றபோதும், சிறு கடனில் கூட நேர்மையைக் கடைப்பிடிக்கச் சொல்லும் சாக்ரடீஸின் ஒழுக்கமே ஆகும். இந்த உயரிய ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கும் தலைவர்களே என்றென்றும் மக்கள் மனதில் நீடித்து நிலைப்பார்கள்.

-S.B.

கருத்துரையிடுக

0 கருத்துகள்