Advertisement

Responsive Advertisement

கண்ணன் கதை - 7 - பி.என்.பரசுராமன்


ஆயர்பாடியில் ஓர் அதிகாலைப் பொழுது. யசோதையின் பக்கத்தில் தன் சின்னஞ்சிறு கால்களை அசைத்தபடி அழுதான் கண்ணன். அதைக் கேட்டு, கோகுலம் முழுவதும் ஆனந்தப் பரவசம் அடைந்தது. அப்போது கண்ணனைக் கண்ட கோகுலவாசிகளின் மனநிலையை பெரியாழ்வார் வர்ணிக்கிறார்.

ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார்
நாடுவார் நம்பிரான் எங்குத் தானென்பார்
பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று
ஆடுவார்களும் ஆயிற்றாய்ப் பாடியே
உறியை முற்றத்து உருட்டி நின்றாடுவார்
நறுநெய் பால் தயிர் நன்றாகத் தூவுவார்
செறிமென் கூந்தல் அவிழத் திளைத்து எங்கும்
அறிவழிந்தனர் ஆய்ப்பாடியாயரே

கோடிசூரிய ஒளியுடன் ஸ்வாமியைப் பார்த்தவர்கள், ‘இதை நாம் பார்த்தால் போதுமா? ஆயர்பாடி முழுவதும் அல்லவா பார்க்க வேண்டும்?’ என்று, ஆர்வத்துடன் குழந்தைக்கு அருகில் வர வேண்டியவர்கள், வெளியே ஓடுகிறார்கள். கால்கள்தாம் ஓடுகின்றனவே தவிர, மனம் யசோதையின் பக்கத்தில் இருக்கும் கண்ணனிடமே இழுக்கிறது. மனதுக்கும் கால்களுக்குமான இந்தப் போராட்டத்தில் சிக்கிக் கொண்ட உடம்பு ‘பொத்’தென்று விழுகிறது. குதூகலத்தில் கோபியர் போடும் கோஷம், ஆயர்பாடி முழுதும் பரவி எதிரொலித்து, ஒரு பெரிய முழக்கமாக மாறுகிறது.

ஆண்களும் பெண்களுமாக ஏராளமானவர்கள் கண்ணனைக் காண வருகிறார்கள். பாட்டுப் பாடியும் தாளத்துக்கு ஏற்ப ஆடியும் வருகிறார்கள்.

கண்ணனை தரிசித்ததும் அவர்களது நடவடிக்கைகள் மாறின. தங்களது வீட்டு உறிகளை முற்றத்தில் உருட்டி விடுகிறார்கள். தயிர், பால், நெய், வெண்ணெய் போன்றவற்றை ஒருவர் மேல் ஒருவர் பூசியும் தூவியும் விளையாடினர். சுருக்கமாகச் சொன்னால், ‘அறிவழிந்தனர் ஆய்ப்பாடி ஆயரே’ என்கிறார் ஆழ்வார்.

அவர்கள் செய்த காரியங்கள், ‘சித்த சுவாதீனம் இல்லாதவர்கள்’ என்று நினைக்கும்படி இருந்தன.

மனிதனது சாதாரண அறிவுக்கு எட்ட முடியாதவன் பகவான். அவனை உணர வேண்டுமென்றால், அறிவால் ஆவது ஒன்றும் இல்லை. அறிவால் ஆராய்ச்சி செய்பவர், அறிய முடியாத ஸ்வாமியை, கோபியர் தங்கள் உள்ளங்களால் விரைவில் நெருங்கி விட்டார்கள். கோபியரைப் போன்ற திடமான பக்தியை நமக்கும் அருளுமாறு, ஆயர்குல அதிபனிடம் வேண்டுவோம்.

- தொடரும்…
நன்றி - சக்தி விகடன் 25-06-2006

கருத்துரையிடுக

0 கருத்துகள்