ஹவாய் தீவுகளில் உள்ள ஓஅஹு (Oahu) கடற்கரையில், சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட பழங்கால கற்குறிகள் (Petroglyphs) சமீபத்திய கடல் உள்வாங்குதல் (Sea retreat) மற்றும் மணல் அரிப்பு காரணமாக மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. பல ஆண்டுகளாகக் கடற்கரை மணலில் புதைந்து கிடந்த இந்தக் கல்வெட்டுக் குறிகள், பழங்கால ஹவாய் மக்களின் வரலாற்றையும் வாழ்க்கை முறையையும் வெளிப்படுத்தும் ஓர் அரிய வரலாற்று நிகழ்வாகக் கருதப்படுகிறது.
ஹவாய் மாநில வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றுப்படி, இந்தக் கற்குறிகள் சுமார் கி.பி 1500ஆம் ஆண்டைச் சேர்ந்தவை என நம்பப்படுகிறது. இவை ஹவாய் மக்களின் ஆரம்பகால சமூக அமைப்பு, ஆன்மீக அடையாளம் மற்றும் கலை வெளிப்பாட்டின் முக்கியச் சான்றாகத் திகழ்கின்றன.
இந்தக் கற்குறிகள் ஒரு பெரிய கல் பாறையில் செதுக்கப்பட்டுள்ளன. இதில் இருபதுக்கும் மேற்பட்ட பண்டைய வடிவங்கள் உள்ளன. அவை பெரும்பாலும் மனித வடிவில் தோன்றும் குச்சி வடிவ உருவங்களாக (stick figures) காணப்படுகின்றன. அப்போது வாழ்ந்த பூர்வகுடி மக்கள் தங்கள் ஆன்மீக நம்பிக்கைகள், முன்னோர்கள் வழிபாடு மற்றும் சமூக நிகழ்வுகளைப் பதிவு செய்ய இவற்றைச் செதுக்கியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். சில உருவங்களில் ஆண் வடிவங்களாக இருப்பதற்கான சான்றுகளும் காணப்படுகின்றன.
இந்தக் கற்குறிகள் வயனே (Waianae) பகுதியில் உள்ள அமெரிக்க இராணுவ ஓய்வு மையம் அருகே அமைந்துள்ளன. ஒட்டுமொத்த கல் பாறையும் சுமார் 115 அடி (35 மீட்டர்) நீளமுள்ளது.
இந்த வரலாற்றுச் சின்னங்களை வெளியே பார்ப்பது மிகவும் அரிய வாய்ப்பாகக் கருதப்படுகிறது. காரணம், இயற்கையின் சுழற்சியே இவற்றின் காட்சிக்குக் காரணமாகும். பொதுவாக, கடல் உள்வாங்குதல், மணல் அரிப்புகள் மற்றும் அலைகளின் நகர்வு ஆகியவற்றால் இந்தக் கற்குறிகள் சில ஆண்டுகள் மட்டுமே வெளிப்படையாகக் காணப்படுகின்றன. அதன் பிறகு, மீண்டும் மணலால் மூடப்பட்டுவிடுகின்றன.
இந்த கற்குறிகள் முழுவதுமாக முதல் முறையாக 2016 ஜூலை மாதம் வெளிப்பட்டன. இப்போது, ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, முழு பாறையும் மீண்டும் கடல் மணலில் இருந்து வெளிப்பட்டுள்ளது.
அமெரிக்க இராணுவத்தின் ஆய்வறிக்கையின்படி, மே முதல் நவம்பர் வரை பசிபிக் பெருங்கடலில் உருவாகும் குறைந்த அழுத்த வானிலை அமைப்புகள் காரணமாக, கடல் அலைகள் கடற்கரை மணலை இடம் மாற்றுவதே இக்கற்குறிகள் தற்காலிகமாக வெளிப்படுவதற்கு முக்கியக் காரணமாகும்.
இந்த வரலாற்று வெளிப்பாடு, ஹவாய் பூர்வகுடி மக்களிடமும், தொல்லியல் ஆய்வாளர்களிடமும், பொதுமக்களிடமும் மிகுந்த ஆர்வத்தையும் கவனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
-S.B.




0 கருத்துகள்