நட்பின் மேன்மையை விளக்கும், 'கிம்' மற்றும் 'டிம்' என்கிற இரண்டு மேனாட்டு நண்பர்களின் கதை மிகவும் உருக்கமானது. கிம் மற்றும் டிம் இருவரும் ஒரே ஊரில், ஒரே தெருவில் பக்கத்துப் பக்கத்து வீடுகளில் ஒரே ஆண்டில், ஒரே மாதத்தில் பிறந்தவர்கள். ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில், ஒரே பெஞ்சில் அருகருகே அமர்ந்து பாடம் கற்றவர்கள். இணைபிரியாத தோழமையோடு கல்லூரிப் படிப்புவரை கற்று, அந்த நாட்டின் ராணுவப் படைப்பிரிவில் ஒன்றாகப் பணியாற்றத் தொடங்கினர்.
ராணுவத்திலும் ஒரே குழுவில் இருவரும் பணியாற்றி வந்தனர். அப்போது அவர்களது நாட்டிற்கும் அண்டை நாட்டிற்கும் சண்டை மூண்டது. கிம்மும் டிம்மும் தங்களது படைக்குழுவோடு போர்க்கள எல்லையில் சண்டையில் பங்கேற்றனர். எல்லையில் இருபுறமும் பதுங்கு குழிகள் அமைத்து இருநாட்டுப் படைகளும் கடுமையாகச் சண்டையிட்டு வருகின்றன. துரதிர்ஷ்டவசமாக, கிம் எதிரிநாட்டு எல்லைக்குள் சென்றுவிட்டான்; பலத்த காயம் வேறு; அங்கிருக்கும் பதுங்கு குழிக்குள் குற்றுயிரும் கொலை உயிருமாகக் கிடந்து கிம் முனகும் முனகல் சத்தம், எல்லைக்கு இந்தப்பக்கமாகப் பதுங்கு குழிக்குள் இருக்கும் நண்பன் டிம்முக்கு நன்றாகவே கேட்கிறது.
"நண்பா! டிம்! நான் இங்கு உன்னைக் காணவேண்டுமென்று துடித்துக் கொண்டிருக்கிறேன்!. வா நண்பா! வந்து என்னை மீட்டுக்கொண்டு செல்!" என்று கிம் அழைக்கும் முனகலோசை டிம்முக்குக் கேட்கிறது. தனது குழுவின் தளபதியிடம் அனுமதி கேட்கிறான் டிம், "எப்படியாவது எதிரிநாட்டின் எல்லைக்குள் சென்று உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் என் நண்பனை மீட்டு வருகிறேன்! அனுமதி தாருங்கள்!". தளபதி அனுமதி மறுக்கிறார், " நீ அங்கு சென்றால், எதிரிப்படை உன்னையும் பிடித்துக் கொன்றுவிடும். நமக்கு இழப்பு இரட்டிப்பு ஆகிவிடும்; அதனால் போகாதே!" என்று தடுக்கிறார்.
நட்பின் வேகம் பொங்கிப் பிரவாகம் எடுக்க, தளபதியின் கால்களில் விழுந்து, "தயவு செய்து அனுமதி கொடுங்கள்!. நிச்சயம் என் நண்பனை உறுதியுடன் மீட்டுக்கொண்டு வருகிறேன்! இது எனது நட்பின்மீது ஆணை!" என்று கெஞ்சுகிறான் டிம். "சரி. தொலைந்து போ! என்று வேண்டா வெறுப்புடன் அனுமதிக்கிறார் தளபதி.
எதிரிப்படையின் கண்களில் மண்ணைத் தூவி, எல்லைதாண்டி நுழைந்த டிம், உயிர் நண்பன் கிம் இருக்கும் பதுங்கு குழியைக் கண்டுபிடிக்கிறான். நண்பன் வந்துவிட்டதைத் தனது இரண்டு கண்களால் கண்ட கிம் ஆனந்தக் கண்ணீரை மாலைமாலையாக உகுத்து டிம்மை ஆரத் தழுவுகிறான். "வந்து விட்டேன் கிம்! இனி ஆபத்தில்லை! நாம் பாதுகாப்பாக நம்மிடத்திற்குச் சென்று விடுவோம்!" என்று ஆறுதலாக டிம் கூறியதைக் கேட்டுக்கொண்டே உயிர் துறக்கிறான் கிம். உயிரிழந்த நண்பனது உடலைச் சுமந்துகொண்டு, தனது படை தங்கியுள்ள பகுதிக்கு வந்து சேர்கிறான் டிம். பார்க்கிறார் தளபதி. "இதற்காகத்தான் உன்னை அங்கே போகாதே என்று சொன்னேன். சிக்கியிருந்தால் உன்னையும் அவர்கள் கொன்று போட்டிருப்பார்கள்!. பார் உன் நண்பனையாவது காப்பாற்ற முடிந்ததா?" என்று கேட்டார்.
டிம் பதில் சொன்னான். "நான் அங்கு சென்று என் நண்பனை உயிரோடு இங்கு கொண்டுவந்து சேர்க்க முடியவில்லை. நண்பன் செத்து விட்டான்; ஆனால் எப்படியாவது தனது உயிர் நண்பன், உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் தன்னை நிச்சயம் காண வருவான் என்று அவன் என் மீது கொண்டிருந்த நம்பிக்கையைச் சாகடிக்காமல் நான் காப்பாற்றியிருக்கிறேன். நண்பன் வந்து விட்டான் என்கிற நம்பிக்கையோடுதான் அவன் உயிர் துறந்திருக்கிறான். நண்பர்கள் செத்துப்போகலாம்!; ஆனால் அவர்கள் ஒருவர்மீது ஒருவர் கொண்டுள்ள நம்பிக்கை என்றுமே செத்துப் போகக்கூடாது".
என்னே அமரத்துவமான நட்பின் நம்பிக்கை வரிகள்!.
வெளிநாட்டில் மட்டுமா இதைப்போன்ற அமரத்துவமான நட்பின் கதைகள் இருக்கின்றன? இங்கே நமது தமிழ் வரலாற்றில், இறுதிவரை, காணாமலேயே நட்புப் பூண்டு, நிறைவாக மரணத்தில் ஒன்றிணைந்த கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பிற்கு ஈடு இணை இந்த உலக வரலாற்றில் வேறு எதுவுமுண்டோ?.
முகநூல், வாட்ஸ்அப், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், மெசெஞ்சர் என நட்புப் பதாகை தாறுமாறாகப் பறந்து கொண்டிருக்கிற இன்றைய சமூக ஊடகக் காலத்தில், ஒருவரை ஒருவர் காணாமலேயே நட்புக் கொண்டிருந்த வரலாறு ஆச்சரியத்திலும் ஆச்சரியம்தான். அதுவும் ஒருவர் ஒரு நாட்டின், சோழ சாம்ராஜ்யத்தின் ராஜா! இன்னொருவரோ பாட்டுமட்டுமே இயற்றத் தெரிந்த ஏழைப்புலவர். இருவரும் ஒரே நாட்டினரும் அல்லர்; ஒருவர் சோழ நாடு. மற்றவர் பாண்டியநாட்டில் பிசிர் என்னும் சிற்றூர். இணைத்து வைக்க எந்த இணைய வசதியும் இல்லாத காலத்தில் எப்படிக் காணாமலேயே நட்பில் இணைந்திருந்தார்கள்?. மானம் காக்க வடக்கிருந்து உயிர் துறப்பது என முடிவெடுத்தபின், தன்னை அடக்கம் செய்யப்போகும் இடத்திற்கு அருகிலேயே, தன்னுடைய உயிர்நண்பர் பிசிராந்தையாருக்கும் ஓரிடம் தயார் செய்து வையுங்கள்! என்று கோப்பெருஞ்சோழன் கட்டளையிட்டது எந்த உள்ளுணர்வின் அடிப்படையில்?. நூற்றுக்கணக்கான கல் தொலைவுகளுக்கு அப்பாலிருந்த பிசிராந்தையார் சரியான நேரத்திற்கு அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தது எந்த உள்ளுணர்வின் அடிப்படையில்?.
எல்லாம் நட்பு என்னும் நல்லுணர்வு செய்யும் மாயம்தான்.
நன்றி - மாலைமலர் 22-09-2024

0 கருத்துகள்