ஸ்வாமியே செய்த பால் அபிஷேகம்!
‘இன்று கண்ணன் வந்தால், எப்படியும் பிடித்துவிட வேண்டும்!’ என்று எண்ணினாள் கோபிகை ஒருத்தி.
பால், தயிர், வெண்ணெய் போன்றவற்றை வைத்திருக்கும் உறியில் ஒரு மணியைக் கட்டினாள். ‘யாராவது வந்து கை வைத்தால், இந்த மணி ஒலிக்கும். இதிலிருந்து அவன் தப்ப முடியாது!’ என்று தனது வேலைகளைப் பார்க்கத் தொடங்கினாள். பொறி, புலன்களை வென்றவர்க்கே சுலபத்தில் அகப்படாத ஸ்வாமி, இந்தப் பொறியிலா அகப்படுவார்!
கண்ணன், கோஷ்டியுடன் அந்த வீட்டுக்குள் நுழைந்தான். உறியைப் பார்த்தான். கை எட்டாத உயரத்தில் உறி! அங்கிருந்த பலகைகளை எடுத்து அடுக்கினர். அந்தப் பலகைகளின் மேல் ஒருவன் ஏறி நிற்க, அவன் தோள் மேல் அடுத்தவன் ஏற, ஏணி ஒன்று உருவானது. உறியை நெருங்கிய கண்ணனின் கண்களில், மணி தென்பட்டது.
விஷயம் புரிந்தது. கண்ணன், ‘பளிச்’சென்று மணியின் நாக்கை ஒரு கையால் பிடித்தான். மணி மௌனமானது. மறு கையால் பானையின் கீழ்ப்பகுதியை உடைத்தான். அருவி போல் பாலும் தயிரும் கொட்டின. அள்ளி அள்ளி அனைவரும் குடித்தனர். உறிஞ்சிக் குடிக்கும் அந்த ஓசை கூட வெளியில் கேட்கவில்லை.
வெளியே தன் வேலையை முடித்து விட்டு, ‘யப்பாடா... மணி சத்தம் கேட்கவில்லை!’ என்ற எண்ணத்தில் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளே நுழைந்தாள் கோபிகை. அங்கு ஒரு கும்பல் பால், தயிர், வெண்ணெய் ஆகியவற்றைக் காலி செய்து கொண்டிருந்தது. நிமிர்ந்து பார்த்தாள். மணி அடிக்காதது எதனால் என்று புரிந்தது.
அதற்குள் நண்பர்களின் தோளில் இருந்த கண்ணன் ‘தொப்’பென்று கீழே குதித்தான். தன் வாயிலிருந்த பாலை, அப்படியே கோபிகையின் முகத்தில் உமிழ்ந்தான். முகத்தைத் துடைத்துவிட்டுப் பார்த்தபோது கண்ணனும் அவன் நண்பர்களும் அங்கு இல்லை. தான் கட்டிய மணியைப் பரிதாபமாகப் பார்த்தாள் கோபி.
இங்கு சாமர்த்தியமாகத் தப்பிய கண்ணன் அடுத்த இடத்தில் அகப்படப் போகிறான். என்ன சொல்லி அங்கே சமாளிக்கிறான் என்று பார்ப்போம்!
- தொடரும்…
நன்றி - சக்தி விகடன் 25-06-2006

0 கருத்துகள்