மெல்லியதாக இருள் கவிழ்ந்த மாலை நேரம். ஆயர்பாடி அடங்கி விட்டது. குடிசைகளில்கூட அகல் விளக்குகள் அணைக்கப்பட்டன. தொழுவங்களில் மாடுகள் தலை அசைக்கும்போது எழும் மணியோசை கேட்டது. அருகில் பாயும் யமுனையாற்றின் சலசலப்பு. வீடுகளில் தூளிகளில் கிடந்த குழந்தைகளின் அழுகுரல். தொடர்ந்து பெண்களின் தாலாட்டு. கோவர்த்தன மலையின் மறுபுறம் பயமற்றுத் திரிந்த விலங்குகளின் குரல்கள். நன்றாக இருட்டியதும் ஆயர்பாடியே தூங்கி விட்டது.
‘இதுதான் நல்ல நேரம். நான் கண்ணனைக் காண வருகிறேன்’ என்பது போல் ஆகாயத்தில் சந்திரன் வந்தான். கோகுலத்தின் வீதிகளில் நிலா வெளிச்சம். ஆனால், வீட்டுக்குள் எல்லாம் இருட்டு. ஒரே ஒரு வீட்டில் மட்டும் உள்ளேயும் வெளியேயும் வெளிச்சம்.
அது யசோதையின் வீடு. கண்ணனைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்தாள் யசோதை. பிள்ளைக்கு நிலா காட்ட அல்ல. தேய்ந்து வளரும் நிலாவுக்கு, தேயாத நிலவான தன் மகன் கண்ணனின் முக மண்டலத்தைக் காட்டுவதற்காக.
தன் முகத்துச்சுட்டி தூங்க
தூங்கத் தவழ்ந்துபோய்
பொன்முகக் கிண்கிணியார்ப்பப்
புழுதியளைகின்றான்
என் மகன் கோவிந்தன்
கூத்தினை இளமா மதீ
நின்முகம் கண்ணுளவாகில்
நீ இங்கே நோக்கிப் போ
-பெரியாழ்வார்
‘சந்திரனே! உன் முகத்தில் இரண்டு கண்கள் இருந்தால், அவற்றைப் பெற்ற பலனடைய, நீ வந்து என் பிள்ளையைப் பார்த்து விட்டுப் போ!’ என்று யசோதையின் பெருமிதம் சந்திரனுக்குக் கட்டளை இடுகிறது.
பலப்பல சொல்லியும் சந்திரன் இறங்கி வரவில்லை. சற்று வேகத்தைக் கூட்டினாள் யசோதை. ‘‘சந்திரனே! சிறுபிள்ளை என்பதால் என் மகனை அசட்டை செய்கிறாயா? உண்மையிலேயே இவன் சின்னப்பிள்ளைதானா என்று மஹாபலியிடம் கேட்டுப் பார்!’’ என்கிறாள்.
சந்திரன் யோசனையில் ஆழ்ந்தான். ‘ஸ்வாமி சாதாரண மனிதனாகத் தன்னைக் காட்டிக் கொண்ட ராமாவதாரத்தில் கூப்பிட்ட உடன் வராததற்காக சமுத்திரராஜன் என்ன பாடு பட்டான்? இதுவோ முழுமையான அவதாரம். நமக்கு எதற்கு வம்பு? போய்ப்பார்த்து விடுவோம்!’ என்று தீர்மானித்து, ஆயர்பாடியை நோக்கி இறங்கினான்.
சிறிய கிராமமான கோகுலத்தில் சந்திரன் திடுமென்று வந்து இறங்கினால்... யசோதையால் பார்க்க முடியுமா என்ன? அவள் மயக்கம் போட்டு விழுந்தாள்.
பழம் போல் கண்ணன் கையில் வந்து சேர்ந்தான் சந்திரன். சந்திரன் இவ்வாறு நிலை பெயர்ந்தால் மகாபிரளயமே உருவாகும்.
அடுத்த விநாடி... கண்ணன் விஸ்வரூபம் எடுத்து, பிரபஞ்சம் முழுவதும் பரவிப் பிரளயத்தைத் தடுத்தான். அப்போது ஒரு சிறிய பொம்மை மாதிரி சந்திரனைத் தன் திருக்கரத்தில் தாங்கி நின்றான். பிறகு சந்திரனை மறுபடியும் வானவெளிக்கு அனுப்பிவிட்டு, ஒரு சில நொடிகளில் குழந்தை வடிவம் ஆனார் ஸ்வாமி.
இவ்வளவும் யசோதை வீட்டு நிலா முற்றத்தில் நடந்தன. ஆனால், எதையும் பார்க்க முடியாமல் அவள் மயங்கி விழுந்தி விட்டாளே!
யசோதையின் மயக்கம் தெளிந்தது. ‘இந்த நிலா இன்றைக்கு, மிகவும் குளிர்ச்சியாக இருக்கிறது. நானே மயக்கம் போட்டேன் என்றால், கண்ணனின் கதி என்ன ஆகும்? போதும்! போதும் நிலவைப் பார்த்தது! உள்ளே போய்த் தூங்கலாம்!’ என்று தீர்மானித்து கண்ணனை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு உள்ளே போனாள். கண்ணனும் சாதுவாக ஒன்றும் தெரியாதவன் போல, யசோதையின் தோளில் தலையைச் சாய்த்துக் கொண்டான். அந்த கண்ணன் நம் உள்ளத்திலும் நுழையட்டும்! நலங்களை யெல்லாம் வழங்கட்டும்!
- தொடரும்…
நன்றி - சக்தி விகடன் 25-06-2006


0 கருத்துகள்