கலிஃபோர்னியாவில் உள்ள டெத் வேலி தேசியப் பூங்காவில் இருக்கும் ரேஸ்ட்ராக் ப்ளேயா (Racetrack Playa) என்ற வறண்ட ஏரிப்படுகையில், தானாக நகர்ந்து செல்லும் பாறைகள் பல ஆண்டுகளாகப் புதிராக இருந்துவந்தன. இந்த நகர்வுப் பாறைகள் தங்களுக்குப் பின்னால் தடங்களை விட்டுச் செல்கின்றன. 1915-ல் முதன்முதலாகக் கண்டறியப்பட்ட இந்த நிகழ்வுக்குப் பல விளக்கங்கள் கூறப்பட்டன. அவை பலத்த காற்று, காந்தப்புலங்கள், வேற்றுகிரகவாசிகள் மற்றும் பேய்களின் நடமாட்டம் எனப் பலவகையாக இருந்தன.
புதிருக்குக் கிடைத்த விடை
2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், இந்த 100 ஆண்டுகளுக்கும் மேலான மர்மத்துக்கு ஒரு ஆராய்ச்சி இறுதியான விடையைக் கொடுத்தது. ஸ்க்ரிப்ஸ் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் ஓஷியானோகிராபி, நாசா மற்றும் பிற நிறுவனங்களின் ஆதரவுடன் நடத்தப்பட்ட இந்த ஆய்வை ரிச்சர்ட் டி. நோரிஸ் மற்றும் அவரது சகோதரர் ஜேம்ஸ் எம். நோரிஸ் தலைமையிலான குழு மேற்கொண்டது.
அவர்களின் ஆய்வின்படி, இந்த பாறைகளின் நகர்வு குளிர்காலத்தில் அரிதாக ஏற்படும் சில சூழ்நிலைகளின் கலவையால் நிகழ்கிறது. முதலில், வறண்ட ஏரிப்படுகையில் ஒரு மெல்லிய நீர்ப்படலம் உருவாக வேண்டும். பின்னர், இரவுநேர வெப்பநிலை உறைந்து மெல்லிய பனிப்படலம் உருவாகும் அளவுக்குக் குறைவாக இருக்க வேண்டும். பகல் நேரத்தில், சூரிய ஒளி பனி உருகி, பெரிய மிதக்கும் பனிப் பாளங்களாக உடைகிறது. இந்தப் பாளங்கள் மெல்லிய காற்றால் தள்ளப்பட்டு, பாறைகளை மெதுவாக நகர்த்துகின்றன. இதன் காரணமாகவே பாலைவனத் தரையில் அந்தத் தடங்கள் உருவாகின்றன. இந்த ஆய்வு PLOS ONE என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டது.
2011-ல் சகோதரர்கள் நோரிஸ், தங்கள் ஆராய்ச்சிக்காக 'ஸ்லிதெரிங் ஸ்டோன்ஸ் ரிசர்ச் இனிஷியேட்டிவ்' என்ற திட்டத்தைத் தொடங்கினர். அவர்கள் ரேஸ்ட்ராக் ப்ளேயாவுக்கு அருகில் ஒரு வானிலை நிலையத்தை அமைத்ததுடன், தங்கள் சொந்தமான 15 பாறைகளை அந்தப் பகுதியில் வைத்து, அவற்றின் மீது ஜி.பி.எஸ் கண்காணிப்புக் கருவிகளைப் பொருத்தினர்.
டிசம்பர் 4 முதல் டிசம்பர் 20, 2013 வரையிலான காலக்கட்டத்தில், அவர்கள் அமைத்த டைம்-லேப்ஸ் கேமராக்கள் பாறைகள் நகர்வதைப் பதிவுசெய்தன. அந்தப் பாறைகள் நிமிடத்திற்கு 15 அடி (3-5 மீட்டர்) வேகத்தில் நகர்ந்தன. பதிவுசெய்யப்பட்ட வரலாற்றில், பாறைகள் நகர்வதைக் கண்ணால் கண்டது இதுவே முதன்முறை.
ரிச்சர்ட் நோரிஸ், "அறிவியலுக்குச் சிலசமயம் அதிர்ஷ்டமும் ஒரு காரணி. ஐந்து அல்லது 10 ஆண்டுகள் எதுவும் நகராமல் இருக்கும் என்று நினைத்தோம். ஆனால், நாங்கள் திட்டத்தைத் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே அது நடக்கும் சரியான நேரத்தில் தற்செயலாக அங்கு இருந்தோம்" என்று கூறினார்.
ரேஸ்ட்ராக் ப்ளேயாவில் உள்ள பாறைகள் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நகர்கின்றன. அவை விட்டுச் செல்லும் பெரும்பாலான தடங்கள் மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் வரை நிலைத்திருக்கும். பாறைகளின் அடிப்பகுதி கரடுமுரடாக இருந்தால், நேரான தடங்களும், மென்மையான அடிப்பகுதி கொண்ட பாறைகள் சீரற்ற தடங்களையும் உருவாக்குகின்றன.
விக்கிபீடியா தகவலின்படி, இந்தப் பாறைகள் டோலோமைட் மற்றும் சையனைட் வகையைச் சேர்ந்தவை. அவற்றின் எடை சில கிலோகிராம் முதல் நூற்றுக்கணக்கான கிலோகிராம் வரை இருக்கும்.
நல்லவேளை கண்டுபிடித்தார்கள் இல்லையென்றால் நம் மந்திர தந்திர வாதிகள் அங்கே கடை விரித்திருப்பார்கள்.
-S.B.




0 கருத்துகள்