Advertisement

Responsive Advertisement

அமெரிக்க H-1B விசா கட்டண உயர்வு: இந்திய தொழில்நுட்பத் துறைக்கு ஒரு புதிய அத்தியாயம்


அமெரிக்காவில் பணிபுரிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் H-1B விசா விண்ணப்பக் கட்டணம் ஒரு லட்சம் அமெரிக்க டாலராக (சுமார் ரூ. 88 லட்சம்) உயர்த்தப்பட்டுள்ளது. உள்நாட்டு வேலைவாய்ப்புகளைப் பெருக்கும் நோக்கத்துடன் எடுக்கப்பட்ட இந்த முடிவை அமெரிக்கா நியாயப்படுத்தியுள்ளது. மலிவான வெளிநாட்டு ஊழியர்களுக்குப் பதிலாக அமெரிக்கர்களைப் பணியமர்த்த வேண்டும் என்பதே இதன் முக்கியக் குறிக்கோள் என வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

அமெரிக்காவில் பல தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் வெளிநாட்டவர்களில், குறிப்பாக இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால், இந்த அறிவிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கட்டண உயர்வுக்கான காரணங்கள்:

வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், சில புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன:

கணினி அறிவியல் படித்த அமெரிக்கர்களுக்கு இடையே வேலையின்மை விகிதம் 6.5% முதல் 7.5% வரை அதிகரித்துள்ளது. இது உயிரியல் அல்லது வரலாறு படித்தவர்களைவிட இரு மடங்கு அதிகம்.

2000 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில், அமெரிக்காவில் STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) துறைகளில் வெளிநாட்டினருக்கான வேலைவாய்ப்பு இரு மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால், அதே காலகட்டத்தில் அமெரிக்கர்களுக்கு 44.5% மட்டுமே வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் செயல்படும் சில தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் H-1B விசாக்களை வழங்கிவிட்டு, அதே நேரத்தில் ஆயிரக்கணக்கான அமெரிக்க ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளன. உதாரணமாக, ஒரு மென்பொருள் நிறுவனம் 2025-ல் 5,189 H-1B விசாக்களை வழங்கி, 16,000 அமெரிக்கர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. மற்றொரு நிறுவனம் 27,000 அமெரிக்கர்களைப் பணிநீக்கம் செய்துவிட்டு, 25,075 H-1B விசாக்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதில் 71 முதல் 72% விசாக்கள் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்திய நிறுவனங்கள் மற்றும் ஊழியர்கள் மீதான தாக்கம்:

அமெரிக்காவில் H-1B விசா வைத்திருக்கும் ஊழியர்களில் 71% (சுமார் 2,83,397 பேர்) இந்தியர்கள். அக்டோபர் 2024 முதல் செப்டம்பர் 2025 வரை, இந்திய நிறுவனங்களான டிசிஎஸ் (5,500+), காக்னிசன்ட் (3,700), இன்ஃபோசிஸ் (2,004), எல்டிஐ மைண்ட் ட்ரீ (1,807), எச்.சி.எல். டெக் (1,728) ஆகியவை அதிக அளவில் H-1B விசாக்களைப் பெற்றுள்ளன. இந்த விசா கட்டண உயர்வால், மைக்ரோசாஃப்ட், அமேசான், மெட்டா போன்ற பெரிய நிறுவனங்கள் தங்கள் வெளிநாட்டு ஊழியர்களை உடனடியாகத் தாயகம் திரும்புமாறு அறிவுறுத்தியுள்ளன. 

இன்றைய (21-9-2025) வெள்ளை மாளிகை அறிக்கையில், ஏற்கெனவே எச்1பி விசா வைத்திருப்பவர்களும், தற்போது நாட்டுக்கு வெளியே இருப்பவர்களும் மீண்டும் நுழைய ஒரு லட்சம் டாலர் வசூலிக்கப்பட மாட்டாது. எச்1பி விசா வைத்திருப்பவர்கள், எப்போதும்போல நாட்டைவிட்டு வெளியேறி மீண்டும் நுழையலாம். நேற்றைய அறிவிப்பால், அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.

புதிய கட்டண அறிவிப்பு, புதிதாக விசா விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே என்று விளக்கம் அளித்துள்ளது. 

இந்திய வல்லுநர்களின் கருத்துகள்:

இந்த விசா கட்டண உயர்வு பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்தியாவின் முக்கியத் தொழில்நுட்பத் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் இதுகுறித்து தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

ஜோஹோ நிறுவனரான ஸ்ரீதர் வேம்பு: தனது எக்ஸ் தளத்தில், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் தாயகம் திரும்புமாறு அறிவுறுத்தியுள்ளார். "இன்றைய இந்தியா திறமைசாலிகளுக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்குகிறது. மீண்டும் வாழ்க்கையை கட்டமைக்க 5 ஆண்டுகள் ஆகலாம், ஆனால் அது உங்களை வலிமைப்படுத்தும். பயத்தில் வாழாமல் துணிச்சலாக முடிவெடுங்கள்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் நிதி ஆயோக் சிஇஓ அமிதாப் காந்த்: "H-1B விசா கட்டண உயர்வு அமெரிக்காவின் புதுமைப் பயணத்தைச் சிதைக்கும்; ஆனால் இந்தியாவின் புதுமையை வேகப்படுத்தும். உலகளாவிய திறமையாளர்கள் இப்போது பெங்களூரு, ஹைதராபாத், புனே, குருகிராம் போன்ற நகரங்களுக்கு இடம் பெயர வாய்ப்புள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

இன்ஃபோசிஸ் முன்னாள் நிர்வாகி மோகன்தாஸ் பை: புதிய விண்ணப்பதாரர்கள் இந்த அதிக கட்டணத்தைச் செலுத்த மாட்டார்கள். இதனால் அமெரிக்க நிறுவனங்கள் அதிக வேலைகளை இந்தியாவுக்கு மாற்றுவார்கள். அடுத்த 6 முதல் 12 மாதங்களுக்குள் 'ஆப்ஷோரிங்' (Offshoring) அதிகரிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

ஸ்னாப்டீல் இணை நிறுவனர் குனால் பஹல்: விசா நிராகரிக்கப்பட்டதால், அவர் இந்தியாவுக்குத் திரும்பி வந்ததாகவும், அதுவே அவரது வாழ்க்கையை மாற்றியதாகவும் கூறினார். "புதிய விதிமுறைகள் பல திறமையான நிபுணர்களை இந்தியாவுக்குத் திரும்பச் செய்யும். இது இந்தியாவிற்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பு" என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் எதிர்காலம்:

இந்த H-1B விசா கட்டண உயர்வு திறமையான இந்திய நிபுணர்கள் தாயகம் திரும்புவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். இது இந்தியாவின் தொழில்நுட்பம் மற்றும் ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழலுக்குப் பெரிய பலமாக அமையும். இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. உலகளாவிய நிறுவனங்கள் தங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களை இங்கு அமைத்து வருகின்றன.

ஒரு காலத்தில் வெற்றிக்கான ஒரே பாதையாக அமெரிக்கா கருதப்பட்டது. ஆனால் 2025-ல் இந்தியா, திறமையான பட்டதாரிகளுக்கு வளமான வாய்ப்புகளை உருவாக்கும் தளமாக உருவெடுக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனால் ஒரேயொரு கவலை தான், ஏற்கனவே வேலை பார்த்து தாயகம் திரும்பும் இவர்களை பணியமர்த்த தான் நிறுவனங்கள் ஆர்வம் காட்டும், தற்சமயம் படித்து முடித்த புதிய பட்டதாரிகளுக்கு எங்கும் வேலை கிடைக்காத ஒரு நிலைமை வரலாம். எதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

-S.B.

கருத்துரையிடுக

2 கருத்துகள்