இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), வரும் 2028 மார்ச் மாதத்தில் தனது அடுத்த முக்கிய விண்வெளிப் பயணமாக "வீனஸ் ஆர்பிட்டர் மிஷன்" (VOM) விண்கலத்தை விண்ணில் செலுத்தத் திட்டமிட்டுள்ளது. பூமியின் சகோதரி கிரகம் என்று அழைக்கப்படும் வீனஸின் அதாவது வெள்ளி கிரகத்தின் மர்மங்களை ஆராய்வதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம்.
பூமியைப் போலவே வீனஸும் கிட்டத்தட்ட அதே அளவு மற்றும் எடையைக் கொண்டிருந்தாலும், அதன் வெளிப்புறச் சூழல் மிகக் கடுமையானது. வீனஸின் மேற்பரப்பு வெப்பநிலை சுமார் 450°C ஆகும். நம் பூமியின் சராசரி வெப்பநிலையை விட பத்து மடங்கு அதிகம். அதன் வளிமண்டலம் பெரும்பாலும் கார்பன் டை ஆக்சைடு வாயுவால் ஆனது, மேலும் சல்பூரிக் அமில மேகங்கள் கிரகத்தை எப்போதும் சூழ்ந்திருக்கும். பூமியைப் போல காந்தப்புலம் இல்லாததால், சூரியனில் இருந்து வரும் ஆபத்தான சூரியக் கதிரின் தாக்கம் நேரடியாக வீனஸ் கிரகத்தை பாதிக்கிறது.
இஸ்ரோவின் இந்த வீனஸ் ஆர்பிட்டர் மிஷனில் பல அதிநவீன அறிவியல் கருவிகள் அனுப்பப்பட உள்ளன. அவற்றில், வீனஸின் மேற்பரப்பு வரைபடம் தயாரிக்க உதவும் Synthetic Aperture Radar, மேற்பரப்பு வெப்பநிலையை ஆய்வு செய்ய Thermal Camera, மேகங்களின் நகர்வுகளைப் பதிவு செய்ய Cloud Monitoring Camera, மற்றும் வளிமண்டல வாயுக்களைக் கண்டறிய Spectropolarimeter போன்ற கருவிகள் முக்கியமானவை.
இந்த மிஷனின் முக்கிய இலக்குகளாக என்னென்ன சொல்லப்பட்டிருக்கிறதென்றால், வீனஸின் மேற்பரப்பு, பாறை அமைப்புகள் மற்றும் அதன் நிலத்தடி அம்சங்களை விரிவாக ஆராய்வது, கிரகத்தின் வளிமண்டல இயங்குபாடு மற்றும் மேகங்களின் தன்மையை ஆய்வு செய்வது. மேலும் காந்தப்புலம் இல்லாத ஒரு கிரகம், சூரிய வீச்சால் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வது.
இந்தத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் தகவல்கள், வீனஸ் (வெள்ளி) கிரகத்தைப் பற்றிய நமது புரிதலை அதிகரிப்பதோடு, பூமியுடன் ஒப்பிட்டு கிரகங்கள் எப்படி உருவாகி, பரிணாமம் அடைந்தன என்பதைப் பற்றியும் புதிய புரிதல்களை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
வீனஸ் ஆர்பிட்டர் மிஷன், இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக அமையும். இது வீனஸ் (வெள்ளி) கிரகத்தின் ரகசியங்களை வெளிச்சமிட்டுக் காட்டுவதோடு, நமது பூமியின் எதிர்காலத்தையும் புரிந்துகொள்ள உதவும்.
- S.B.


0 கருத்துகள்