Advertisement

Responsive Advertisement

இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் : மனித நேயத்திற்கு பேரழிவு ஆரம்பம்!


2023, அக்டோபர் 7-ஆம் தேதி, மேற்கு ஆசிய அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நாளாகப் பதிந்துவிட்டது. அன்று, ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் புகுந்து திடீர் பயங்கரவாத தாக்குதலைத் தொடுத்தனர். அந்தத் தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்; 251 பேர் பணயக்கைதிகளாகக் கடத்தப்பட்டனர். 'யாராலும் தாக்க முடியாது; எங்களின் இரும்பு அரணை ஒன்றும் செய்ய முடியாது' என்று இஸ்ரேல் இதுவரை கொண்டிருந்த நம்பிக்கை தகர்ந்தது. இந்தச் சம்பவம், நீண்ட காலமாக மறைந்திருந்த ஹமாஸ்-இஸ்ரேல் மோதலை முழுமையான போராக மாற்றியது.

இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகள் மற்றும் ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் மூலம் சிலர் மீட்கப்பட்டனர். ஆனால், சிலரின் உடல்களை மட்டுமே மீட்டுக் கொண்டுவர முடிந்தது. தற்போதைய நிலவரப்படி, இன்னும் 50 பேர் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ளனர். இதில் 25 பேருக்கு மேற்பட்டோர் ஏற்கெனவே கொல்லப்பட்டிருப்பதாகச் சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. பணயக்கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழிக்கும் நோக்கிலும் இஸ்ரேல் தனது ராணுவத் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.


ஹமாஸ் உறுப்பினர்கள் பதுங்கியிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் இடங்களில், இஸ்ரேல் டிரோன் மற்றும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. ஆனால், இந்தத் தாக்குதல்களில் பொதுமக்கள் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. உணவு, தண்ணீர், மருந்து போன்ற உதவிகளுக்காகக் காத்திருந்த பொதுமக்கள் கூட தாக்குதலுக்கு இலக்கானதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால், "காசாவில் இன அழிப்பு நடக்கிறதா?" என்ற கேள்வி எழுந்தது. இதைக் குறித்து ஐ.நா. விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இருப்பினும், இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்தவில்லை. கடந்த சில நாட்களாக தரைவழித் தாக்குதலையும் வலுப்படுத்தியுள்ளது. இஸ்ரேலியப் படைகள் காசா பகுதிக்குள் ஊடுருவி முன்னேறி வருகின்றன. தரைப்படைகள் நுழைவதற்கு முன்பே, வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்களால் காசாவை 150 முறைக்கு மேல் தாக்கியதாக இஸ்ரேலிய ராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது. இந்தத் தாக்குதல்களில் பல அடுக்குமாடிக் குடியிருப்புகள் முற்றிலும் சிதைந்துள்ளன.


தாக்குதல்கள் அதிகரிக்க, காசாவில் உள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அகதிகளாக வெளியேறி வருகின்றனர். சிலர் வாகனங்களிலும், பலர் கால்நடையாகவும் வெளியேறுகிறார்கள். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் எனப் பலரும் உயிரைக் காத்துக்கொள்ளப் போராடி வருகின்றனர். கடந்த சில நாட்களில் நடந்த தாக்குதல்களில் மட்டும் பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் பலியானதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

2023, அக்டோபர் 7-ஆம் தேதி தொடங்கி இதுவரை, காசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65,000-ஐ தாண்டியுள்ளது. இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சர்வதேச அமைப்புகள் தொடர்ந்து மனிதாபிமான அக்கறைகளை முன்வைத்தாலும், போர் நிற்பதற்கான எந்தச் சாத்தியமும் இன்னும் தெரியவில்லை.


சமீபத்தில், கத்தாரில் பதுங்கியிருந்த ஹமாஸ் தீவிரவாதிகளை இஸ்ரேல் கொன்றது. வெளிப்படையாக மற்றொரு நாட்டின் எல்லைக்குள் நுழைந்து தாக்குவது தவறு என்று விமர்சிக்கப்பட்டபோது, "நாங்கள் நாட்டைப் பிடிப்பதற்கோ அல்லது பொதுமக்களைக் கொல்வதற்கோ செல்லவில்லை. ஹமாஸ் தீவிரவாதிகளைத்தான் கொன்றோம். அமெரிக்கா எப்படி ஒசாமா பின்லேடனை பாகிஸ்தானில் கொன்றதோ, அதுபோலத்தான் இதுவும்" என்று இஸ்ரேல் விளக்கமளித்தது.

இந்த மோதல் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் நிலைப்பாட்டை முழுவதுமாக அசைத்துள்ளது. அமெரிக்கா, ஈரான், துருக்கி, கத்தார் உள்ளிட்ட பல நாடுகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ தங்கள் பங்களிப்பைச் செலுத்தி வருகின்றன. அமெரிக்கா இஸ்ரேலுக்கு முழு ஆதரவு அளிக்க, சில அரபு நாடுகள் ஹமாஸுக்கு அரசியல் மற்றும் பொருளாதார ஆதரவை வழங்குகின்றன. இதனால், காசா போரின் பின்விளைவுகள் பிராந்திய அரசியலை மட்டுமல்லாது உலகப் பொருளாதாரத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. ஏற்கெனவே ரஷ்யா-உக்ரைன் போர் முடிவில்லாமல் நீடிக்கிறது.

ஹமாஸ்-இஸ்ரேல் மோதல் இப்போது இரு தரப்புக்கும் 'வாழ்வா சாவா' என்ற போராக மாறியுள்ளது. ஹமாஸ் தனது நிலைப்பாட்டை விட்டுக்கொடுப்பதற்கான வாய்ப்பு குறைவு. அதே சமயம், இஸ்ரேல் ஹமாஸை முற்றிலும் ஒழிக்கத் தீர்மானித்துள்ளது. இதனால், பொதுமக்களே அதிகபட்ச பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர். காசா நகரின் சாலைகளில் எங்கும் இடிந்த கட்டிடங்கள், அழுகுரல்கள், இடம்பெயர்ந்தோர் முகாம்கள் என ஒரு மனிதாபிமானப் பேரழிவு உருவாகி வருகிறது.


போரின் முடிவு எப்படியிருக்கும் என்பது இன்னும் தெரியவில்லை, தீவிரவாதம் ஒரு தீர்வல்ல. ஆனால், ஒரு விஷயம் மட்டும் தெளிவாகத் தெரிகிறது – இந்த போருக்குப் பிறகு மத்திய கிழக்கின் அரசியல் வரைபடம் மாறாமல் இருக்காது.

-S.B.

கருத்துரையிடுக

0 கருத்துகள்