Advertisement

Responsive Advertisement

"வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானம்மா"…

பயணங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் புதிய அனுபவங்களைத் தருகின்றன. இன்றும் அப்படித்தான் ஒரு அனுபவம் கிடைத்தது. காலையில் அலுவலகம் செல்ல வேண்டி ரயிலில் ஏறினேன். கூட்டம் குறைவாக இருந்ததால் காலியாக இருந்த ஒரு இருக்கையில் அமர முடிந்தது.

என் எதிரில் ஒரு வயதானவர் செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்தார். திடீரென்று ஒரு நிமிடம் பத்திரிகையை மூடினார். பாக்கெட்டில் இருந்த மொபைலை எடுத்து யூடியூபில் ஏதோ தேடினார். அது ஒரு பாடல். அதை இயக்கி விட்டு கண்களை மூடினார். நான்கு ஐந்து நிமிடங்கள் அந்தப் பாடல் முடியும் வரை அப்படியே அமைதியாக உட்கார்ந்திருந்தார். பாடல் முடிந்ததும் மொபைலை அணைத்துவிட்டு மீண்டும் செய்தித்தாளில் மூழ்கிவிட்டார்.

நான் ஓரளவுக்குப் புரிந்துகொண்டேன். அவர் படித்த செய்தி அவருக்குள் ஒரு கொதிப்பை ஏற்படுத்தியிருக்கும். அதை நிவர்த்தி செய்ய அந்தப் பாடலைக் கேட்டு பின் மனம் அமைதியடைந்திருக்கும். ஆனால் அவர் கேட்ட அந்தப் பாடல் என்னுள் ஏதோ செய்துவிட்டது. "சே, என்ன பாடல் இது! இதுபோன்று ஒரு பாடல் இக்காலத்தில் வருவதற்கு வாய்ப்பே இல்லை" என்று நினைத்தேன்.


ஆம், "இன்று நீ நாளை நான்" திரைப்படத்தில் வரும் "பொன்வானம் பன்னீர் தூவும்" என்ற பாடல்தான் அது. இசை வேறு யாருமில்லை, நம்ம இளையராஜாதான். பாடலுக்கு வரிகள் கவிஞர் வைரமுத்து, குரல் இளமையான ஜானகி. என்ன ஒரு பாடல்! ராஜாவுக்கு எப்படி இப்படி ஒரு பாடலை உருவாக்க தோன்றியது? என்ன ஒரு கற்பனையின் உச்சம்.

இளையராஜா - வைரமுத்து கூட்டணியில் எத்தனையோ முத்துக்களில் இதுவும் ஒன்று.

படத்தின் கதை ஒரு நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. இது சமூகத்தில் பொருந்தாத உறவாக, முறைதவறிய உறவாகப் பட்டு அந்தக் காலத்தில் மிகுந்த சர்ச்சைக்கு உட்பட்டது. நாம் கதைக்குள் செல்ல வேண்டாம். அந்தப் பாடல் தந்த அனுபவத்தைப் பகிரவே இந்தப் பதிவு.

பெண்ணுள் ஏற்படும் விரக தாபத்தை வரிகளில் வைரமுத்து வடித்திருக்க, ஜானகி அம்மாவும் குரலில் எப்படி நம்முள் அந்த பாதிப்பை கொடுக்கிறார்கள். பாடல் முடிந்ததும் என் கண்கள் குளமாயின.

இளமையான குரலில் ஜானகியின், பாடல் ஆரம்பத்தில் தொடங்கும் "ஆஆஆ" என்ற ஹம்மிங் ஆகட்டும் நடுவில் வரும் "லல்லல்லா" ஆகட்டும் கூடவே வரும் குழலோசையோடு வரும் கைதட்டல் ஆகட்டும் - இசையில் கற்பனையின் உச்சம் என்றே சொல்லலாம். அதிகமான வாத்திய கருவிகள் இல்லை ஒரு மிருதங்கம் மற்றும் தபேலா அவ்வளவுதான். வரிக்கு வரி தாளத்தை மாற்றி ஒரு ஏக்கத்தை நம்முள் உருவாக்கி வார்த்தைகள் நன்கு புரியும்படி கொடுத்திருப்பார். இப்பொழுது வரும் பாடல்களுக்கு வரிகள் இருக்கின்றதா என தெரியாத அளவிற்கு இசையின் ஆதிக்கம் இருக்கும்.  

"இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானம்மா" என்ற வரிக்கான உச்சரிப்பு ஆகட்டும், "மழை செய்யும் கோளாறு கொதிக்குதே பாலாறு" வரிக்கு கொடுக்கும் அழுத்தம் ஆகட்டும் - உண்மையில் இளையராஜா எப்படி ஜானகியிடம் இதுபோன்று பாட வேண்டும் என்று கேட்டிருப்பார்? அம்மாவும் அதை எப்படி மேம்படுத்திப் பாடியிருப்பார்கள்!  நினைத்து பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது.

இந்த இரண்டு வரிகளும் படத்தின் கதையை விளக்கிவிட்டன. இளம் வயது விதவைக்கு ஏற்படும் விரக தாபத்தைக் குறிக்க "இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை" என்ற ஒரே வரியில் வைரமுத்து சொல்லியிருப்பார்.

இந்தப் பாடலும், இதே போன்று மற்றொரு பாடலான "பன்னீர் புஷ்பங்கள்" படத்தில் வரும் "ஆனந்தராகம்" பாடலும் எத்தனையோ பாட்டுப் போட்டி நிகழ்ச்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு எத்தனையோ பேர் பாடியிருந்தாலும், அசல் போல் வராது.

நிறைய இசை விமர்சகர்கள் இந்தப் பாடலைப் பற்றி விரிவாகச் சொல்லியிருப்பார்கள். ஆனால் இது ஒரு விமர்சனம் அல்ல. ரயிலில் அந்த வயதானவர் மூலம் கிடைத்த ஒரு அனுபவத்தின் பதிவு இது. சில நேரங்களில் பயணங்கள் நமக்கு இப்படியான அற்புதமான கணங்களைத் தருகின்றன. இன்றைய அந்த கணம் என்னுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.

இசை என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல. அது மனிதனின் உணர்வுகளைத் தொட்டு, அமைதியைத் தரும் ஒரு சக்தி. அந்த வயதானவர் அதை உணர்ந்திருந்தார். நானும் இன்று அதை அனுபவித்தேன். இதுதான் இசையின் மகத்துவம்.

-S.B.


கருத்துரையிடுக

0 கருத்துகள்