Advertisement

Responsive Advertisement

தெளிந்த மனம் - க.ஜெயராமன்


புத்தர் தமது சீடர்களுடன் ஓர் ஊரிலிருந்து மற்றோர் ஊருக்குச் சென்றார். வழியில் அவர் ஓர் ஏரியைக் கடந்தார். ஒரு சீடரிடம், "எனக்குத் தாகமாக உள்ளது. சிறிது நீர் கொண்டு வா" என்றார்.

ஏரியை அடைந்த சீடன் அதில் சிலர் துணிகள் துவைப்பதையும், ஒரு மாட்டுவண்டி இறங்கிச் செல்வதையும் கண்டான்.

வண்டி ஏறிச் சென்றதில் ஏரி நீர் கலங்கியதோடு, வண்டிச் சக்கரத்தில் ஏறியிருந்த சேறும், அழுக்கும் நீரோடு கலந்து அதை மாசுபடுத்திவிட்டன.

கலங்கிய நீரை எப்படி குருவுக்குக் குடிக்கக் கொடுப்பது என எண்ணி, திரும்பிச் சென்று புத்தரிடம் இதைப் பற்றிக் கூறினான் சீடன்.

சீடனை அதே ஏரியிலிருந்து குடிக்க நீர் கொண்டு வருமாறு புத்தர் மீண்டும் கூற, சீடனும் ஏரிப்பக்கம் சென்றான்.

நீர் குழம்பியிருப்பதால் அது பருகுவதற்கு ஏற்றதல்ல என்று எண்ணிய சீடன் ஒரு மணிநேரம் வரை அங்கு காத்திருந்தான்.

சேறு அழுக்கெல்லாம் கீழே படிந்து நீர் அப்போது தெளிந்திருப்பதைக் கண்டான். 

பாத்திரத்தில் நீர் முகந்து புத்தரிடம் கொண்டு வந்து கொடுத்தான்.

நீரையும் சீடனையும் பார்த்த புத்தர், "மகனே, குழம்பியிருந்த நீரை நீயா தெளிவாக்கினாய்? அதை அப்படியே விட்டு விட்டதால் அது சிறிது நேரத்தில் தானாகவே தெளிந்துவிட்டதைப் பார்த்தாயா!

"உன் மனமும் அப்படித்தான். குழம்புகிறதா? விட்டு விடு. நீ எந்த முயற்சியும் செய்யாதே. அது தானாக அடங்கி விடும். அதுதான் அதன் இயல்பு" என்றார்.

புத்த பகவானின் இந்த உபதேசத்தைச் சரியாக உணர்ந்து, வாழ்வின் எல்லா நிகழ்வுகளையும் ஒரு சாட்சியாகப் பார்க்கப் பழகினால் மனம் தெளிவு பெறும். பின் வாழ்வே ஓர் ஆனந்தப் பூந்தோட்டமாகும். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்