Advertisement

Responsive Advertisement

அனுமன் கடலைத் தாண்டுவது போன்ற நம்ப முடியாத நிகழ்ச்சிகள் வேண்டுமா? - அ.ச.ஞானசம்பந்தன்

அனுமன் கடலைத் தாண்டுவது, விச்வரூபம் எடுப்பது, சின்னஞ்சிறிய உருவம் கொள்வது போன்ற இவ்வளவு நம்ப முடியாத நிகழ்ச்சிகள் வேண்டுமா? இயற்கை இறந்த நிகழ்ச்சிகளைக் கவிஞர்கள் ஏன் பாடுகிறார்கள்?

இயற்கை இறந்த நிகழ்ச்சி என்பதே ஒரு பொருள் இல்லாத சொல். இயற்கை என்றால் என்ன? நீங்களாக ஒரு முடிவுக்கு வந்துவிட்டீர்கள். நம்முடைய காலத்திலேயே யோகப் பயிற்சியின் மூலம் The power of the mind என்று அமெரிக்காவில் ஒரு நீண்ட படம் எடுத்து டி.வி.யிலே போட்டுக் காட்டினார்கள். மனவலிமையை அறிந்து கொள்வதற்காக ஆர்வாடிஸ்காவில் இருந்தும், பிரிட்டனில் இருந்தும் ஒரு கூட்டம் திபெத்துக்கு வருகிறது. 

சாதாரணப் பெளத்த துறவிகள் எத்தனை மாபெரும் செயல்களைச் செய்கிறார்கள் என்பதனை வீடியோப் படமாகக்கூட எடுத்து வைத்திருக்கிறார்கள். மாபெரும் வீரர்கள், ஒரு கையை நீட்டி அத்தனை பேரையும் வென்று விடுவார்கள். அவர்களை ஒன்றுமே பண்ண முடியவில்லை. அடுத்த படியாகப் பனிக்கட்டியிலே வெற்றுடம்போடு போய் உட்காருகிறார்கள். ஒண்ணுமே பண்ணவில்லை. இ.ஸி.ஜி. (BCG) எடுக்கிறார்கள். திடீரென்று ஃப்ளாட்டாக வருகிறது. அந்தப் படத்தைப் போட்டுக் காண்பிக்கிறார்கள். ஹார்ட் நின்று போச்சு, இதுவும் நடக்கிறது. BP பார்க்கிறார்கள். 120/90 திடீரென்று 230க்கு உயர்கிறது. இதெல்லாம் இன்றைக்கும் நடக்கிறது. இயற்கை இறந்தது என்று ஒன்றும் கிடையாது. மனிதனுடைய ஆற்றல், நீங்கள் நினைக்கிறது போல் சாதாரண ஆற்றல் இல்லை. இறைவன் என்றைக்கு நம்மைப் படைத்தானோ அன்றைக்கே தனக்குரிய முழு ஆற்றலையும் நமக்குத் தந்திருக்கிறான். நாம் பயன்படுத்துவதில்லை. அவ்வளவுதான். 

பலகோடி நியூரான்கள் இருக்கின்றன நம் மண்டையில். நாம் உபயோகப்படுத்துவது ஒரு பர்சன்ட்தான். ஐன்ஸ்டின் கூட 12 பர்சென்ட்தான் உபயோகப் படுத்தினார் என்கிறார்கள். அதிகமாக உபயோகப்படுத்த ஆரம்பித்தால், கந்துக மதக்கரியை அடக்குவது, தண்ணீரில் நடப்பது என்றெல்லாம் செய்யலாம். ஒன்றும் அதிசயம் இல்லை. இயற்கை இறந்தது என்று பட்டம் கொடுக்கிறதே சரியில்லை.

இயற்கைதான் உதவுகிறது. இயற்கையின் உதவி கொண்டுதான் இதையெல்லாம் செய்கிறார்கள். உங்களுடைய ஆற்றலை வளர்த்துக் கொள்வீர்களானால் நீங்களும் செய்யலாம். இதைக் கவிச் சக்கரவர்த்திதான் முதன் முதலிலே கண்டுபிடித்தான்.

அந்த அப்பாவி சுக்கிரீவன் கூற்றாக,
வேறுள குழுவையெல்லாம் மானுடம் வென்றதம்மா
என்று சொல்வதன் மூலம் இயற்கை இறந்தது என்று ஒன்றும் கிடையாது என்று கம்பன் தெரிவிக்கிறான். யோகப் பயிற்சி உடையவர்களே இன்றைக்குச் செய்கிற காரியத்தை அனுமன் செய்கிறது என்ன பெரிய காரியம்! ஆகவே பெரிதாக வளர்வதும், சிறியதாகக் குறுகுவதும் சாதாரண, அணிமா, லகிமா, மகிமா என்று சொல்வார்கள், அஷ்டமா சித்திகள். அது சாதாரண சமாசாரங்கள். அதை விளம்பரப்படுத்துவதற்காகச் செய்யவில்லை. தேவை ஏற்படும்போது இன்றைக்குக்கூட இதைப் பெரியவர்கள் உபயோகப்படுத்துகிறார்கள். என்னுடைய சிறு அனுபவத்தில் பார்த்திருக்கிறேன்.

இன்னொரு நாட்டிலே வாழ்ந்த ஒரு யோகி ஒரே நேரத்தில் ஓர் இடத்தில் இருந்த ஒரு கலெக்டர் அவர் மனைவி ஆகியோரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது 450 மைலுக்கு அப்பால் கதிர்காமத்திலிருந்தும் பேசிக் கொண்டிருந்தார். இதைக் கண்ணாலே பார்த்திருக்கிறேன். அதனாலே இயற்கை இறந்தது என்று ஒன்றும் கிடையாது. அனுமன் செய்தது சாதாரணச் செயல். இராமன் என்ற பெருமானுடைய தொண்டனாகி விட்டவனுக்கு இது என்ன பிரமாதமான செயல் - கடலைத் தாண்டுவது!

கருத்துரையிடுக

0 கருத்துகள்