Advertisement

Responsive Advertisement

AI (செயற்கை நுண்ணறிவு) யின் அசுர வளர்ச்சியால் எந்தெந்த வேலைகள் எதிர்காலத்தில் பாதுகாப்பாக இருக்கும்? - கோமான் ஶ்ரீ பாலாஜி


இன்றைய காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) வேகமாக வளர்ந்து வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு மனிதர்கள் மட்டுமே செய்ய முடியும் என்று நினைத்த பல வேலைகளை, இன்று AI எளிதாகச் செய்து காட்டுகிறது. ஏன் இந்தக் கட்டுரையின் இலக்கண, வாக்கியப் பிழைகளை அதுதான் சரி செய்து கொடுத்தது. AI என்றதும் அது ஏதோ IT, கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்டது என்று எண்ண வேண்டாம். எழுதுதல், கணக்கிடுதல், மருத்துவம், சட்ட ஆலோசனை போன்ற பல துறைகளில் அது நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. இது ஒருபுறம் இருக்க, AI-யின் இந்த வளர்ச்சியால் எந்தெந்த வேலைகள் எதிர்காலத்தில் பாதுகாப்பாக இருக்கும்? 

இந்தக் கேள்விக்கு ஒரு குறிப்பிட்ட தொழிலைச் சொல்ல முடியாது. ஆனால், ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால், மனிதர்களின் தனித்துவமான திறன்களை அதிகமாகப் பயன்படுத்தும் வேலைகள்தான் பாதுகாப்பாக இருக்கும். ஏனெனில், AI எவ்வளவு வலிமையானதாக இருந்தாலும், சில விஷயங்களில், சில சமயங்களில்  மனிதர்களின் பங்கு இன்றியமையாததாகவே இருக்கும்.

மருத்துவர், ஆசிரியர், சமூகப் பணியாளர், குடும்ப ஆலோசகர் போன்றோரின் வேலைகளை AI-யால் முழுமையாகச் செய்ய முடியாது. ஒரு மருத்துவர் சிகிச்சை அளிப்பதோடு மட்டுமல்லாமல், நோயாளிக்கு நம்பிக்கையையும், தைரியத்தையும் அளிக்கிறார். ஒரு ஆசிரியர் பாடம் நடத்துவதோடு, மாணவரின் மனநிலையை அறிந்து, அவர்களின் பலம் மற்றும் பலவீனங்களுக்கு ஏற்ப ஊக்கப்படுத்துகிறார். இங்கே மனிதர்களின் உணர்ச்சி, கருணை, நம்பிக்கை ஆகியவை மிகவும் முக்கியம். இந்த உணர்வுகளை எந்தவொரு செயற்கை நுண்ணறிவு இயந்திரத்தாலும் முழுமையாகப் பிரதிபலிக்க முடியாது.

AI-க்கு ஒரு பிரச்சனை, அதனை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்த தகவல் கொடுக்கப்பட்டால், அது அந்த பிரச்சினைக்கான சரியான தீர்வுகளைத் தரும். ஆனால், திடீர் அவசர சூழல்களில் மனிதர்களின் அறிவும், அனுபவமும் மிக அவசியம். உதாரணமாக, தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினர், அவசர மருத்துவச் சேவை வழங்குபவர்கள் போன்றோர் சில விநாடிகளில் முடிவெடுக்க வேண்டியிருக்கும். அதேபோல், வணிகத் தலைவர்கள் மற்றும் மேலாளர்கள், சந்தையின் திடீர் மாற்றங்கள், அரசியல் சூழல் போன்றவற்றைச் சமாளிக்க வேண்டும். இவை அனைத்தும் நிச்சயமற்ற சூழல்கள் (uncertain environments). இத்தகைய சூழல்களில் நாம் தான் முன்னிலையில் இருந்து செயல்பட முடியும்.

AI, ஓவியம், கதை, இசை, வடிவமைப்பு போன்ற பலவற்றை உருவாக்க முடியும். ஆனால், அது உருவாக்குவது அனைத்தும் ஏற்கனவே அதனுள் உள்ள தரவுகளின் (data) அடிப்படையில்தான். உண்மையான புதுமை, கற்பனை வளம் செறிந்த மற்றும் கலாச்சாரத்துடன் இணக்கமான படைப்புகள் மனிதர்களின் தனிப்பட்ட அனுபவங்களிலிருந்து வருகின்றன. எழுத்தாளர்கள், இசைக்கலைஞர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள், வடிவமைப்பாளர்கள் எனப் படைப்பாற்றல் மிக்கவர்கள் மக்களைக் கவர்வது அவர்களின் தனித்துவமான பார்வையால்தான். எனவே, கலை மற்றும் படைப்பாற்றல் சார்ந்த துறைகளுக்கு எப்போதும் மனிதர்கள் தேவைப்படுவார்கள்.

AI-யின் வளர்ச்சியால் பல கேள்விகள் எழுகின்றன. உதாரணமாக, தானியங்கி (automatic) வாகனம் (தற்போது அமெரிக்காவில் புழக்கத்தில் இருக்கிறது) திடீரென ஒரு விபத்தில் சிக்கினால் யார் பொறுப்பு? ஒரு மருத்துவ AI பரிந்துரைக்கும் சிகிச்சைக்கு யார் ஒப்புதல் அளிப்பது? இத்தகைய சூழல்களில், சட்ட நிபுணர்கள், நீதிபதிகள், அரசியல் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் (policy makers) போன்றோர் மனிதர்களின் மதிப்பீடுகளின் அடிப்படையில் தான் முடிவெடுக்க முடியும். AI ஆலோசனை வழங்கலாம், ஆனால் அதன் விளைவுகளுக்குப் பொறுப்பேற்க மனிதர்கள் எப்போதும் தேவைப்படுவார்கள்.

மின்சார வேலை, பிளம்பிங் (plumbing), தச்சு வேலை (carpentry), இயந்திரப் பழுதுபார்ப்பு (mechanics) போன்ற வேலைகளை முழுமையாகத் தானியக்கமாக்க (automation) முடியாது. ஒவ்வொரு வீடு, கட்டிடம், இயந்திரம் எனப் பலவற்றிலும் பலவேறுபட்ட சிக்கல்கள் இருக்கலாம். அங்கேயே உடனடித் தீர்வு அளிப்பதற்கு, நிகழ்நேர முடிவெடுக்கும் திறன் (on-the-spot judgment) தேவைப்படும். இதனால், இந்தத் தொழில்கள் எப்போதும் பாதுகாப்பாகவே இருக்கும்.

மாற்றம் ஒன்றுதான் மாறாதது. ஒரே திறமையைக் கற்றுக்கொண்டு வாழ்நாள் முழுவதும் அதை வைத்து ஓட்ட முடியாது. தொழில்நுட்பம் வேகமாக மாறுவதால், தொடர்ந்து கற்றுக்கொண்டு, புதிய கருவிகளைப் பயன்படுத்தக் தெரிந்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக, ஒரு செய்தியாளர் AI-யின் உண்மைச் சரிபார்ப்பு (fact-checking) கருவிகளைப் பயன்படுத்தலாம். ஒரு பங்குச் சந்தையாளர் (share marketer), AI பகுப்பாய்வுகளைக் கொண்டு புதிய உத்திகளை (strategy) உருவாக்கலாம். 

AI-ஐ ஒரு எதிரியாகப் பார்க்காமல், ஒரு துணையாகப் பயன்படுத்தும் மனநிலை கொண்டவர்களுக்கு எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கும்.

மேலும், சமூகத் தலைமைப் பொறுப்புகளையும் AI-யால் எளிதாக மாற்ற முடியாது. மக்கள் இயந்திரங்களை அல்ல, மனிதர்களையே பின்பற்றுவார்கள். அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், மதத் தலைவர்கள், மேலாளர்கள் எனப் பலரும் மக்களை ஊக்குவிப்பதும், ஒன்றிணைப்பதும் அவர்களின் முக்கியமான பணியாகும். இது நம்பிக்கையின் (trust) அடிப்படையில் நடைபெறும், அதை AI-யால் உருவாக்க முடியாது.

AI பல வேலைகளை எளிதாக்கும் என்பது உண்மைதான். ஆனால், மனிதர்களின் தனித்துவமான பண்புகளான மனிதர்களுடனான தொடர்பு, படைப்பாற்றல், சிக்கலைத் தீர்க்கும் திறன், பொறுப்புணர்வு, கைவினைத் திறன், கற்றுக்கொள்ளும் மனப்பான்மை, தலைமைப் பண்பு ஆகியவற்றைக் கொண்ட வேலைகளை AI-யால் முழுமையாக மாற்ற முடியாது. AI நம்மை மாற்றப்போவதில்லை, மாறாக, நம்மை இன்னும் அதிகமாக மனிதர்களாக இருக்கச் செய்கிறது. மனிதர்கள் தனித்துவமாகச் செயல்படக்கூடிய துறைகளில் AI-ஐ ஒரு கருவியாகப் பயன்படுத்தும்போது, நம் திறமைகள் மேலும் மேம்படும். ஆகவே பயப்படாமல் மேற்கொண்டு ஆவதைப் பார்ப்போம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்