Advertisement

Responsive Advertisement

சைவமா? வைணவமா? (பகுதி 3) - சத்குரு பதில்!


ஒரு சமயம் தத்துவ மீன் ஒன்று இருந்தது. என்ன? தத்துவம் பேசும் மீனா? ஆம். ஒரு தத்துவ மீன்தான். எல்லோரும் தத்துவம் பேசுபவர்கள்தான். உங்களையே எடுத்துக் கொண்டால் நீங்களும் ஒரு பெரிய தத்துவவாதிதான். தெருவில் செல்லும் ஒரு குடிகாரனை நிறுத்தி நீ ஏன் குடிக்கிறாய் என்றால் அவன் குடிப்பதற்காக ஒரு பெரிய தத்துவ விளக்கத்தையே சொல்வான். ஒரு திருடனிடம் ஏன் திருடுகிறாய் என்றால் அவனிடமும் ஒரு தத்துவ விளக்கம் இருக்கும். இந்த உலகத்தில் ஒவ்வொருவரிடமும் தான் வாழ்க்கையில் செய்யும் எல்லா முட்டாள்தனங்களுக்குமே சரியான தத்துவ விளக்கம் இருக்கும். எந்த ஒரு தத்துவமும் இல்லாமல் உங்களால் உங்கள் முட்டாள்தனங்களைத் தொடர முடியாது. உங்களிடம் தத்துவம் இல்லையென்றால் உங்கள் முட்டாள்தனமும் நிலைத்து இருக்காது. ஒவ்வொரு கணத்திலும் விழிப்புணர்வுடன் இருப்பீர்கள். ஒவ்வொரு கணத்திலும் நான் ஏன் இதைச் செய்ய வேண்டும்? என்று சிந்திப்பீர்கள். ஆனால் தத்துவம் உங்களிடம் இருக்கும் போதெல்லாம் உங்களால் முடிவில்லாமல் முட்டாள்தனங்களைத் தொடரமுடியும்.

ஒரு நாள் தத்துவ மீன் ஒரு இடத்தில் மிகவும் சோகமாக பெரும் வருத்தத்துடன் உட்கார்ந்து இருந்தது. அந்த வழியில் சென்ற மற்றொரு மீன் "தத்துவவாதியே, ஏன் இப்படி உட்கார்ந்து இருக்கிறாய்? நீ மிக்க துயரத்தில் இருக்கிறாய். உன் துயரத்துக்கு என்ன காரணம்?” என்று அதனிடம் கேட்டது. தத்துவ மீன் "எனக்குத் தொல்லை கொடுக்காதே. நான் உண்மையாகவே சிக்கலில் இருக்கிறேன்” என்றது. "உனக்கு என்ன சிக்கல், என்னிடம் சொல்”. தத்துவமீன் சொன்னது: "நான் செல்லும் இடமெல்லாம் மக்கள் சமுத்திரங்களைப் பற்றிப் பேசுகின்றார்கள். நான் சமுத்திரத்தைப் பார்க்க விரும்பி எல்லாத் திசைகளிலும் பயணம் செய்தேன். ஆனால் என்னால் சமுத்திரத்தைக் காண முடியவில்லை. அது எங்கே இருக்கிறது?.”

இதில் பிரச்சினை என்னவென்றால் அந்த மீனும் சமுத்திரத்தின் ஒரு பகுதியாக இருப்பதுதான். அதுதான் சிக்கல். அது சமுத்திரத்திற்கு வெளியே இருந்தால் அருகில் சென்று சமுத்திரத்தைப் பார்த்திருக்கலாம். இப்போது அதுவே சமுத்திரத்தின் ஒரு பகுதியாக இருப்பதால் அதனால் சமுத்திரத்தை உணரமுடியவில்லை. இப்போது தெய்வீகத்துடனான உங்கள் பிரச்சினை, கடவுளுடனான உங்கள் பிரச்னை என்னவென்றால் நீங்கள் அதையே சுவாசிக்கிறீர்கள், அதையே சாப்பிடுகிறீர்கள், அதிலேயே நடக்கிறீர்கள். எனவே அது உங்களுக்குத் தெரியவில்லை. உங்கள் உணரும் தன்மை ஐம்புலன்களுக்கு உட்பட்டு இருப்பதால் அதற்கு ஒரு ஒப்பீடு, ஒரு பின்னணி தேவைப்படுவதால் அதை உங்களால் உணரமுடியவில்லை. எப்படி உணர்வது என்றும் தெரியவில்லை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்