Advertisement

Responsive Advertisement

வாழ்க்கை என்ற புத்தகம் - 4 - ஜே.கிருஷ்ணமூர்த்தி


ஒழுங்கு என்றால் என்ன என்று நாம் கண்டறிய வேண்டும். உங்களுக்குப் படிக்கத் தெரிந்தால் ஒழுங்கு என்ன என்பதை இந்தப் புத்தகம் உங்களிடம் கூறும். அதைப் படியுங்கள். பிறகு அடுத்த பக்கத்தைப் புரட்டுங்கள். ஒழுங்கில்லாமல் வாழ்வது என்றால் என்ன என்பது தெரியும். இந்தப் புத்தகம் கூறும் ஒழுங்கின்மையை அறிவுபூர்வமாகவோ சொற்களின் துணையுடனோ அல்லாமல் உண்மையாகவே புரிந்து கொள்ள வேண்டும். அதை மொழிபெயர்க்காதீர்கள். அறிவுபூர்வமான கருத்தாக்கமாக மாற்றாதீர்கள். முறையாக அதைப் படியுங்கள். உங்களிடத்தில் முரண்பாடுகள் இருப்பதையும் அவற்றின் இயல்பைப் புரிந்து கொண்டால்தான் அவற்றுக்கு ஒரு முடிவு கட்ட முடியும் என்றும் அது கூறுகிறது. இந்துக்கள், முஸ்லிம்கள், யூதர்கள், அராபியர்கள், கம்யூனிஸ்ட்கள், கம்யூனிஸ்ட் அல்லாதவர்கள் பௌத்தர்களில் பல்வேறு பிரிவினர், இந்துக்களிலும் கிறிஸ்தவர்களிலும் பல்வேறு பிரிவுகள் என்றெல்லாம் பிரிவுகள் இருக்கும்வரை முரண்பாடு இருக்கும். எங்கு பிரிவு உள்ளதோ அங்கு மோதல் இருந்துதான் தீரும். மோதல் என்பது ஒழுங்கின்மை. ஒழுங்கின்மையின் இயல்பைப் புரிந்துகொண்டால், அந்தப் புரிந்துகொள்ளலின் ஆழத்தால் ஒழுங்கு எனறால் என்ன என்பது புரிந்துவிடும்.

ஒழுங்கு என்பது ஒரு பூ இயல்பாய் மலர்வது போன்றது. அந்த ஒழுங்கு, அந்தப் பூ, ஒரு நாளும் உதிர்ந்து போகாது. எங்கு பிரிவு இருக்கிறதோ அங்கு மோதல் இருக்கும் என்பதைக் கூறும் இந்தப் புத்தகத்தை ஒருவர் நிஜமாகவே படித்தால் அவர் வாழ்வில் எப்போதும் ஒழுங்கு இருக்கும்.

உங்களையே மையமாகக் கொண்டு நீங்கள் செயல்பட்டு வந்தால் அங்கு முரண்பாடு இருந்தே தீரும் என்கிறது இந்தப் புத்தகத்தின் அடுத்த அத்தியாயம். உங்களையே மையமாக வைத்து, சுயநலத்தோடு, தன் முனைப்போடு, பரந்த இந்த உலகை நான் என்ற சின்னஞ்சிறு அம்சத்திற்குள் குறுக்கி நாம் செயல்பட்டால் ஒழுங்கு குலைந்து போகும். நான் என்பது சிந்தனையில் உருவான மிகச் சிறிய விஷயம். என் பெயர், வடிவம், மன அமைப்பு தன்னைப்பற்றி அது உருவாக்கி வைத்திருக்கும் ஒரு படிமம் ஆகியவற்றையெல்லாம் சேர்த்து 'நான் இன்னார்' என்று நம் சிந்தனை அடையாளப் படுத்திக் கொள்கிறது. ஒருவரது செயல்கள் அவரையே சுற்றி அமைந்திருக்கும்போது அங்கு மோதலும் ஒழுங்கின்மையும் இருந்தே தீரும். எப்படி என்று நீங்கள் கேட்கும்போது நீங்கள் ஒரு வழிமுறையைப் பற்றிக் கேட்கிறீர்கள் என்கிறது இந்தப் புத்தகம். அந்த வழிமுறையை நீங்கள் பின்பற்றினால் அது தன்னை மையமாகக் கொண்ட இன்னொரு செயலாக மாறுகிறது. இதையெல்லாம் நான் உங்களுக்குச் சொல்லவில்லை. இந்தப் புத்தகம் சொல்கிறது. இந்தப் புத்தகத்தை உங்களுக்காக நான் மொழிபெயர்த்து சொல்லவில்லை. நாம் ஒன்றாக இந்தப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறோம். நீங்கள் ஒரு பிரிவை, குழுவை, மதத்தை சேர்ந்தவராக இருப்பது வரையிலும் நீங்கள் மோதலை உருவாக்கிக் கொண்டுதான் இருப்பீர்கள். இதை உங்களால் ஜீரணிக்க முடியாது. ஏனென்றால் நீங்கள் ஏதோ ஒரு விஷயத்தை நம்புகிறீர்கள். நீங்கள் கடவுளை நம்புகிறீர்கள். வேறொருவர் நம்புவதில்லை. இன்னொருவர் புத்தரை நம்புகிறார். வேறொருவர் இயேசுவை நம்புகிறார். இஸ்லாமோ வேறொரு கடவுளைக் கூறுகிறது. எனவே, நம்பிக்கை மனிதனுக்கும் மனிதனுக்கும் நடுவில் உள்ள உறவில் பிளவை ஏற்படுத்துகிறது. உண்மையைப் பற்றி மட்டுமே கவலைப்படும் போது அங்கு நம்பிக்கைக்கு இடம் இருக்காது. உங்கள் புத்தகத்தில் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறதோ அதுதான் உண்மை. அடுத்தபடியாக, இந்தப் புத்தகத்தை நீங்கள் எப்படிப் படிக்கிறீர்கள்?

- தொடரும்...

தமிழில்: அரவிந்தன்

கருத்துரையிடுக

0 கருத்துகள்