Advertisement

Responsive Advertisement

வாழ்க்கை என்ற புத்தகம் - 1 - ஜே.கிருஷ்ணமூர்த்தி


மனித இனத்தின் கதை உங்களுக்குள் இருக்கிறது. இத்தனை நூற்றாண்டுகளில் மனிதன் சேமித்து வைத்திருக்கும் விரிந்த அனுபவம், ஆழமாக வேரோடிய பயங்கள், பதற்றங்கள், கவலை, இன்பம் மற்றும் நம்பிக்கைகள் எல்லாம் இருக்கின்றன. 

அந்தப் புத்தகம் நீங்கள்தான். எந்தப் பதிப்பாளரும் இதை அச்சிடவில்லை. இதை விலைக்கு வாங்க முடியாது. இந்தப் புத்தகத்தைப் புரிந்துகொள்ள எந்த ஆய்வாளரிடமும் நீங்கள் போக முடியாது. ஏனென்றால் உங்களிடம் இருக்கும் புத்தகம்தான் அவரிடமும் உள்ளது. இந்தப் புத்தகத்தை கவனமாகவும் பொறுமையாகவும் படிக்காவிட்டால், நாம் வாழும் இந்த ஊழல்மயமான, தார்மீக நெறிமுறைகள் அற்ற சமுதாயத்தை நம்மால் மாற்ற முடியாது. சமுதாயத்தில் வறுமை போன்றவை பூதாகரமாக இருக்கின்றன. இந்த உலகம் குழப்பம், ஊழல், யுத்தம் - எல்லாவற்றையும் விட பெரிய குற்றம் யுத்தம்தான் - ஆகியவை நிரம்பியதாக உள்ளது. தீவிரமான மனநிலை உள்ள எந்த மனிதனும் இதைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்க முடியாது. நமது சமுதாயத்திலும் அதன் அமைப்பிலும் புரட்சிகரமான மாறுதல்கள் ஏற்படுத்த வேண்டுமானால் இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும். இந்தப் புத்தகம் நாமே தான். நாம், நமது பெற்றோர்கள், முன்னோர்கள் ஆகிய எல்லோரும் சேர்ந்து உருவாக்கியதுதான் இந்த சமுதாயம். எல்லா மனிதர்களும் சேர்ந்துதான் இந்த சமுதாயத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த சமுதாயம் மாறாவிட்டால் ஊழல் அதிகரிக்கும்; யுத்தங்கள் பெருகும்; மனித மனம் பெருமளவில் சீரழிந்து போகும். இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டுமென்றால் இது என்ன சொல்கிறது என்பதை கவனிக்கும் கலை தெரிந்திருக்க வேண்டும் இந்தப் புத்தகம் என்ன சொல்கிறது என்று விளக்கம் அளிப்பது இதை கவனிப்பது ஆகாது. ஒரு மேகத்தை கவனிப்பது போல இந்தப் புத்தகத்தை கவனியுங்கள். அந்த மேகத்தை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. காற்றில் ஆடும் ஒரு இலை, சூரியன் அஸ்தமிக்கும் அழகு ஆகியவற்றை கவனிப்பது போல் கவனியுங்கள். உங்களால் இவற்றையெல்லாம் மாற்ற முடியாது. ஆக, இப்புத்தகம் என்ன சொல்கிறது என்பதை கவனிக்கும் கலை உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அந்தப் புத்தகம் நீங்கள்தான். அது எல்லாவற்றையும் சொல்லிவிடும்.

கிரகிக்கும் கலை, உன்னிப்பாகப் பார்க்கும் கலை ஆகியவையும் தெரிந்திருக்க வேண்டும். உங்கள் உருவில் இருக்கும் இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது நீங்களும் அப்புத்தகமும் அங்கு இல்லை. படிப்பவர்-படிக்கப்படும் புத்தகம் என்ற பிரிவு இல்லை. இந்தப் புத்தகமே நீங்கள்தான்.

இன்னொரு கலையும் இருக்கிறது. கற்றுக்கொள்ளும் கலை.

- தொடரும்...

தமிழில்: அரவிந்தன்

கருத்துரையிடுக

0 கருத்துகள்