Advertisement

Responsive Advertisement

அப்புசாமி வாத்தியார்... - S.ராஜேஷ்


அந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஒரு சிறிய பள்ளி.

நீண்ட நாட்களாக அப்புசாமி வாத்தியார்தான் தலைமையாசிரியர்.

90களில் தலைக்கு மேல் கைவைத்து காது தொட்டால் தான் பள்ளியில் சேர்க்கப்படும் முறை நிலவிய காலம்.

அந்த பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை எப்போதும் குறைவுதான். அந்த வகுப்பு மாணவர்களை தக்க வைத்து கொள்ள நமது அப்புசாமி வாத்தியார் ஒரு யுக்தியை கையாள்வார்.

அப்படிதான் 5ம் வகுப்பு மாணவன் சுகிர்தன்....

இந்த வருடம் 5ம் வகுப்பு.

வழக்கமாக 5ம் வகுப்பு தேர்வுகள் முடிந்தன. சுகிர்தனும் நன்கு பாடம் படித்து அடுத்த வருடம் 6ம் வகுப்பு என மகிழ்ச்சியாக அன்று மாலை வீடு செல்ல காத்திருந்தான்.

அப்போது அப்புசாமி வாத்தியார் வந்தார். "சுகிர்... வகுத்தல் கணக்கு தெரியுமா"

"ஆம்... வகுக்க தெரியும்" என சுகிர் பதில் அளித்தான்.

வாத்தியார், ஒரு சாக்கு துண்டு எடுத்து கான்கிரீட் தரையில் ஒரு வகுத்தல் கணக்கு போட்டு அதை வகுத்து காட்ட சொன்னார்.

சுகிர், வேகமாக போட ஆரம்பித்து கொஞ்சம் யோசித்து நின்றான்.

வாத்தியார் சுகிர் நுனி மூக்கின் மீது கிள்ள ஆரம்பித்தார்.

வாத்தியார் கைநகத்தின் கூர்மை தாங்காமல் சுகிர் கண்கள் கலங்கி கண்ணீர் கொப்பளிக்க ஆரம்பித்தது.

சிறிது நேரத்திற்கு பிறகு சுகிர் சுதாரித்து வகுத்தல் கணக்கை சரியாக முடித்தான்.

அப்புசாமி வாத்தியாரும் "குட்" என கூறி சுகிர்தனை தேற்றினார்.

சுகிர், பள்ளி கல்லூரி முடித்தான்.

அப்புசாமி வாத்தியாருக்கு வயதாகிவிட்டது.

தான் சேமித்து வைத்த வைப்புத்தொகையை பெற கிளை அஞ்சலகம் அலைந்து அலைந்து ஒரு வழியாக துணை அஞ்சலகம் வந்து காத்திருந்தார் இன்றாவது தனது கணக்கு முடிக்கப்படுமா என வருத்தத்தோடு...

போஸ்ட்மாஸ்டர் வந்தார்...

சிறிது நேரத்தில் கணக்கு முடிக்கப்பட்டு அப்புசாமி வாத்தியார் கையில் தரப்பட்டது.

வாத்தியார் கையில் பணம் பெருக்கி தரப்பட்டது. போஸ்ட்மாஸ்டர் கண்ணில் மூக்கின் நுனி கிள்ளாமல் கண்ணீர் பெருகிக்கொண்டிருந்தது அப்புசாமி வாத்தியார் ஏதும் செய்யாமல் நின்று கொண்டிருந்தார் கூரான நகத்தோடு.....

S.ராஜேஷ்,
திருவள்ளூர் தபால் நிலையம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்