Advertisement

Responsive Advertisement

நல்லவர்களை ஆதரிப்போம்! - பி.என். பரசுராமன்


அறவழி காட்டும் நல்லவர்களுக்கு உதவுவதும், அவர்களைப் பாதுகாப்பதும் முக்கியமானது; அதை மறுத்து எதிர்வினை புரிந்தால்... விளைவது என்ன என்பதை விளக்கும் கதை இது:

குலபூஷணன் எனும் மன்னர், மதுரையை அரசாண்ட நேரம் அது. முறையோடு அரசாண்டு வந்தார். அக்காலத்தில், ஞான அனுபவம் பெற்ற உத்தமர்கள் பலர், அறநெறிகளை சொல்லி, எடுத்துக்காட்டாக மதுரையில் வாழ்ந்து வந்தனர்.

அந்த அறநெறியாளர்களுக்கு எல்லாம், அரசே உதவி செய்து, வாழ வழிவகுத்தது. நாளாவட்டத்தில், அந்த அறநெறியாளர்களிடம் ஏனோ, மனவெறுப்பு மூண்டது, மன்னருக்கு; வெறுப்பை வெளிக்காட்டினார்.

அவர்களுக்கு செய்து வந்த உதவிகள், அடியோடு நிறுத்தப்பட்டன. மன்னரின் வெறுப்பு, மக்களுக்கும் தெரிந்தது.

அறநெறியாளர்களுக்கு, மிகுந்த அளவில் தொல்லைகள் செய்யத் துவங்கினர், தீயவர்கள். அல்லல் தாங்காத, அறநெறியாளர் அனைவரும், நாட்டைவிட்டு வெளியேறி விட்டனர்.

நல்லவர்களை விரட்டி விட்டால், நாடு வாழுமா... மன்னருக்கு தொல்லைகள், வரிசைகட்டி வந்தன. தன் பிரச்னைகளை தீர்த்துக்கொள்ள முனையும்போது, தீயவர்களின் கொட்டம் அதிகமானது. மழைவளம் குன்றியது. செய்வதறியாது திகைத்தார், மன்னர்.

'உலகைக் காக்கும் உமாபதியே... மதுரைக்கு வந்து மணிமகுடம் சூட்டிக்கொண்ட மகாதேவா... அல்லல் தீர, அடியேனுக்கு வழிகாட்டு...' என்று, மனம் உருக வேண்டினார்.

மன்னரின் வேண்டுகோளுக்கு, மலைமகள் கணவர், கனவில் தோன்றி, 'மன்னா... முறை தவறினாய் நீ... அறவழி காட்டுபவர்களை, அல்லல்படுத்தினாய். தீயவர்களின் தொல்லையால், அறநெறியாளர்கள் நாட்டை விட்டு வெளியேறக் காரணமானாய். 'அவர்களையெல்லாம் உடனே வரவழை. நல்வழிப்படு... ஆட்சி முறை தவறினால், மழை வளம் குன்றும்...' என்று கூறி, மறைந்தார்.

விழித்தெழுந்த மன்னர், நாட்டை விட்டு வெளியேறிய அறநெறியாளர்களுக்கு, நடந்ததை அறிவிக்க செய்து, உடனடியாக அவர்கள் நாடு திரும்ப வழி செய்தார்.

அறநெறியாளர்களின் வருகையாலும், அவர்களின் உபதேசங்களாலும், நல்வழிப்பட்டனர், மக்கள். ஒளி வந்தால், தானே விலகும் இருளைப்போல, தீயவர்களின் கொட்டம் தானாகவே ஒடுங்கியது.

மன்னரும், பழையபடியே நாட்டை நன்முறையில் அரசாண்டார்.

அறவழி காட்டுபவர்களை ஆதரிப்பதும், பாதுகாப்பதும், நம் கடமை. அவ்வாறு செய்தால், தீமைகளை எதிர்த்து போராட வேண்டியதில்லை; தீமைகள் தாமாகவே விலகும்!

நல்லவர்களை ஆதரிப்போம்; நாமும் உயர்வோம், நாடும் உயரும்!

நன்றி - வாரமலர் 2019

கருத்துரையிடுக

0 கருத்துகள்