Advertisement

Responsive Advertisement

சமுதாய மேம்பாட்டில் ஆன்மிகத்தின் பங்கு - 3 - தவத்திரு குன்றக்குடி அடிகளார்


எந்த மனிதனிடம், சாந்தம், சத்தியம், புலனடக்கம், துணிவு, சமபுத்தி உள்ளனவோ, அந்த மனிதனே ஆன்மிகத்தில் சிறந்தவன். இத்தகைய மனிதரால், இவ்வுலகில் கோடிக்கணக்கான குலங்கள் வளரும்; வாழும். அவர்களின் உடலிலேயே இறைவன் குடி கொண்டு, அவர்களின் மூலம் தன் விருப்பத்தைக் கடவுள் நிறைவேற்றிக் கொள்ளுகின்றான். அதனால், எல்லாவற்றையும், உன்னைப் போலவே உன் ஆன்மாவைப் போலவே காண்க.

ஆன்மிகம் விலை மதிப்பிட முடியாத ஒரு செல்வம், ஆன்மிகத்தில் செழித்தவர்கள் முகத்தில் ஒரு பொலிவு புன்முறுவல் தோன்றும்; பரிவு வெளிப்படும்; பண்பாடு இருக்கும். ஒருவன் ஆன்ம சக்தி உடையவன் என்பதை அவனுடைய ஒவ்வொரு அசைவிலும் காணலாம். எடுப்பான தோற்றம் ஆன்மிகம் வழங்கும் கொடை. ஆன்மிக நலம் பொருந்தியவன் வழங்கும் சொற்கள் அவனுடைய ஆன்மா அன்பில் நனைந்திருக்கிறது, என்பதைப் புலப்படுத்தும்.

ஒவ்வொரு ஆன்மாவும் ஆன்ம சக்தியால் வளர முடியும். வாழ முடியும். சொற்கள், செயல்கள் இவையெல்லாம் உயர்ந்த ஆன்மாவை இனம் காட்டும் அடையாளங்கள். நமது ஆன்ம சக்தியை மற்றவர்களுக்கு உணர்த்தும் சாளரங்களே கண்கள். சொற்களே தூதர்கள். முகத்தால் அமர்ந்தினிது நோக்கி, இன்சொல் கூறி, ஈத்துவந்து மகிழ்தலையே திருவள்ளுவம் பாராட்டும்.

மருந்து மரம் தன் நன்மை நோக்காது, தனக்கு வரும் வெட்டுக்களையும் ஏற்றுக்கொண்டு, மற்றவர் நோய்க்கு மருந்து வழங்கும். இதுவே ஆன்மிகத்தின் பண்பு.

ஆன்மிகம் எப்போதும் அறிவைத் தேடும்; அன்பை வழங்கும்; வாழ்விக்கும். ஆன்மிகம் அருள் பழுத்த வாழ்வு சின்னங்களும், அடையாளங்களும் மட்டும் ஆன்மிகம் அல்ல. அவை ஆன்மிக வளர்ச்சிக்குத் துணை செய்யும் சாதனங்களாக அமையக் கூடும். அப்படி அமைந்தால் வரவேற்கத்தக்கதே. இன்று பெரு வழக்காக மதத்தின் பெயரில் நடைபெறும் சடங்குகள் ஆன்மாவைத் தொடுவது கூட இல்லை.

ஆன்மிகம் மனிதத்தின் விழுமிய பயன். ஆன்மிகத்தின் மறு பெயர்தான் மனித நேயம். ஆன்மிகம் ஆன்மநேய ஒருமைப்பாடுடையது. ஆன்மிகம் சன்மார்க்க நெறி; பொது நெறி. ஆன்மிகம் பகுத்தறிவுக்குப் புறம்பானதல்ல; ஆன்மிகம் ஞானம்; ஆன்மிகம் உலகந்தழீஇயது.

"எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் 
வேறொன்றறியேன் பராபரமே?"

என்றார் தாயுயுமானார். இதுவே ஆன்மிகத்தின் குரல். இந்த குரல் இன்று இந்தியாவிலேயே ஒலிக்கவில்லை. தமிழகத்திலேயே ஒலிக்கவில்லை. நாளும் திருக்கோயில்கள் பெருகி வளர்கின்றன; திருவிழாக்கள் நடக்கின்றன; குடமுழுக்கு விழாக்கள் நடக்கின்றன. ஆனால் இவையெல்லாம் மனிதநேயம், தாழ்வெனும் தன்மை நோக்கிச் சமயம் சாரும் இயல்பைத் தந்தனவா? வறுமை, சிறுமைகளிலிருந்து தப்ப வழி வகை கற்றுக் கொடுத்ததா?

மானுடப்பதம் தந்து வாழ்வளித்த வள்ளற்பெருமானாகிய இறைவனிடமே இரவலனாகத்தானே மனிதன் செல்கின்றான்? திருக்கோயிலிலும் போட்டா போட்டிகள் மரியாதைகள்! சாதிப்புன்மைகள்! பணத்தின் திருவிளையாடல்கள்!

எங்கே பழங்காலத் திருக்கோயில்களைச் சார்ந்து வளர்ந்த ஆன்மிகம்? நாயன்மார்களும், ஆழ்வார்களும் வளர்த்த ஆன்மிகம் எங்கே? சராசரங்கள் எல்லாம் சிவம் பெருக்கிய சீலம் எங்கே? "எந்நாட்டவர்க்கும் இறைவா?" என்ற உலகம் பொதுமை தழுவிய மாணிக்க வாசகரின் ஆன்மிகம் எங்கே? "தொண்டலால் உயிர்க்கு ஊதியம் இல்லை" என்றவாறு தொண்டு நெறியில் வளர்ந்த ஆன்மிகம் எங்கே?

"பலர் வைகுந்தத்திற்குப் போக நான் நரகத்திற்குப் போகச் சித்தமாயுள்ளேன்" என்று மதில் மேல் ஏறி, இறைவன் நாமத்தை எடுத்து ஒதிய இராமானுசரின் ஆன்மிகம் எங்கே? "சேர வாரும் செகத்திரே" என்று, வேறுபாடின்றி அனைவரையும் அழைத்த ஆன்மிகம் எங்கு போயிற்று? தேடுங்கள்!

ஆன்மாவின் வழி வாழக் கற்றுக் கொள்ளுங்கள்? எவ்வுயிரும் தம்முயிர் போல் போற்றும் பெருநெறி கடைப் பிடித்து ஒழுகுங்கள்! வல்லார்க்கும், வல்லமை இல்லாதாருக்கும், ஒரு சேர வாழ்வளியுங்கள்! உயிர்க்குலம் - திருக்குலம் வாழ, வளரத் தொண்டு செய்யுங்கள் இந்த மண்ணுலகத்திலேயே விண்ணுலகத்தைக் காணுங்கள்!

ஆன்மிகம் சமுதாயத்தைக் கூட்டுவிக்கும். ஆன்மிகம் சமுதாய மேம்பாட்டுக்குத் துணைசெய்யும் கடவுளை நம்பு பிரார்த்தனை செய்! கடவுளிடம் சர்வ வல்லமைமையைத் தந்தருளும்படி கேட்டுக் கொள்! ஆன்மிகத்தில் சிறந்த மனிதர்கள் சமாதானத்தின் காவலர்கள். ஆன்மிகவாதிகள் சமநிலை காண்பவர்கள், எல்லோரையும் வாழவைக்கும் ஆன்மிகம் வளர்க! வாழ்க! ஆன்மிகத்தில் வளர்ந்து சமுதாய மேம்பாட்டைக் காண்போமாக!

உடலுக்கு வலிமை; ஆன்மாவுக்குத் துணிவு.
உடலில் நோயின்மை; ஆன்மாவில் குற்றமின்மை. 
உடலுக்கு ஒழுங்குகள்; ஆன்மாவுக்கு ஒழுக்கம். 
உடலுக்குத் திறமை ஆன்மாவுக்கு அறிவு. 
உடலுக்கு உணவு; ஆன்மாவுக்கு பக்தி. 
உடல் உழைப்பு மக்களுக்கு ஆன்மாவின் உழைப்பு கடவுளுக்கு. 
உடலுக்குத் தனிமை, ஆன்மாவுக்கு மக்கள் திரளுடன் கூடுதல். 
உடலுக்கு சுயநலம்; ஆன்மாவுக்கு பிறர் நலம். 
-என்பன இயற்கையில் அமைந்த நியதிகள். இவற்றில் பல உடன்பட்டவை.

வலிழை-துணிவு; நலம்-குற்றமின்மை; ஒழுங்கு - ஒழுக்கம்; திறமை-அறிவு; மக்களுக்கு-கடவுளுக்கு இவை உடன்பாடுடையன. ஆனால் உடல் பெரும்பாலும் சுய நலத்தையே நாடும். நல்ல ஆன்மா பிறர் நலத்தையே போற்றும். உடல் பெரும்பாலும் ஆன்மாவை ஆட்டிப் படைத்துத் தனது ஆதிக்கத்திற்குள் வைத்துக்கொள்ள ஆசைப்படும். ஆன்மாவுக்கு அடங்கி நடக்கும் உடலே நல்லது. ஆன்மாவின் வழி வாழ்தலே வாழ்க்கை.

ஆன்மாவினாலேயே சமுதாயத்தைக் காண இயலும்; பேண இயலும். குறைவிலா நிறைவாக, அன்பில் பழுத்து உலகம் தழீஇ வாழ்தலே ஆன்மிகம். இந்த வழியில் இனி மேலாவது நடப்போமாக! 

இந்த ஆன்மிக வழியில் நடவாமல் இப்போது அசுர வழியில் போய்க்கொண்டிருக்கிறோம். அதன் விளைவு பாதுகாப்பும், உத்திரவாதமும் இன்மை! வறுமைக்கோடு துன்பங்கள்! துயரங்கள்! இனிமேலாவது நாளும் நமது ஆன்மாவின் தரத்தை, நலத்தை வளர்த்துக் கொள்வோம்! இம்மாநிலம் பயனுறும் வழியில் வாழ்வோமாக! ஒருவன் உலகத்தையே பெற்றாலும், தனது ஆன்மாவை இழந்து விடுவானாயின் என்ன பயன்?

இன்று ஆன்மாவை இழந்து, பொக்குகளாக, வெற்றர்களாக, வாழ்வோர் பலர். இவர்களை "இந்த வையகம் சுமப்பதுவும் வம்பு" என்றார் ஆண்டாள் நாச்சியார். சமுதாயம் தழீஇய ஆன்மிக வாழ்க்கையே வாழ்க்கை. சமுதாயத்தைப் பற்றியுள்ள துன்பங்கள் அனைத்தும் அகலத் தன்னந்தனியாகவும், கூட்டமாகவும், ஆன்ம வாழ்க்கை வாழ்வோம்! 

வளர்க ஆன்மிகம்!! வளர்க சமுதாயம்!!

கடவுளே கூட வான் பழித்து, இம்மண்ணிற்கு வந்தது மனிதனோடு கூடிவாழத்தான்! அதில் ஒரு தனி இன்பம். அந்த இன்பம் நிறைந்த வாழ்க்கைக்குத்தான் ஆன்மிகம் என்று பெயர்.

- 22-10-94 அன்று மதுரை வானொலியில் ஒலிப்பரப்பான உரை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்