Advertisement

Responsive Advertisement

பூனை குறுக்கே போனால் எல்லாக் காரியமும் கெட்டு விடுமா?


கேள்வி:
பூனை குறுக்கே போனால் எல்லாக் காரியமும் கெட்டு விடுமா? பூனைக்கு அவ்வளவு சக்தியா?

சோ: பூனை காரியத்தை கெடுக்கும் என்பதில்லை. சகுன சாஸ்திரம் என்பது பெரியது. ராமாயணம், மஹாபாரதம் எல்லாம் படித்தீர்களானால் அதில் நிறைய வரும். பூனை குறுக்கே போகும்போது அது நமக்கு எச்சரிக்கை செய்கிறது. டேய்! இது நடக்கப் போகிறது! ஜாக்கிரதை! என்ற எச்சரிக்கைதானே தவிர, பூனைக்கும் காரியத்திற்கும் சம்பந்தம் இல்லை. கிரஹ நிலைகளினால் இதெல்லாம் நடைபெறுகிறது. 

கிரஹ நிலைகள் எல்லாம் மனிதனை பாதிக்கச் செய்கிறது. ஏதாவது நடக்கும்போது, இந்த மாதிரி நடக்கப் போகிறது என்று, மேலும் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அது நடந்துதான் தீர வேண்டும் என்று விதி இருந்தால், நீங்கள் இதை உதாசீனம் செய்வீர்கள், காரியமும் கெட்டுப் போகும். அது நடக்காது என்று விதி இருந்தால், நீங்கள் ஒழுங்காக ஜாக்கிரதையாக இருப்பீர்கள்.

இன்னொன்று - உங்களுக்கு தெய்வ அனுக்கிரகம் பரிபூர்ணமாக இருந்தால், இந்த கிரஹ நிலைகள் எல்லாம் உங்களைப் பாதிக்காது. அதாவது தெய்வ நம்பிக்கை உங்களுக்கு இருக்க வேண்டும். அதனால் தெய்வ அனுக்கிரகம் உங்களுக்குக் கிட்டியிருந்தால் கிரஹ நிலைகள், கிரஹ கோளாறுகள் உங்களை எதுவும் செய்யாது. இந்த ஞானசம்பந்தர் இருந்தாரே, அவருக்கு மதுரையிலிருந்து ஒரு அழைப்பு வருகிறது. ராணியிடமிருந்தும் அமைச்சர்களிடமிருந்தும். மதுரை மன்னன் கூன் பாண்டியன் என்று பெயர், அவனுக்கு சமண மதத்தின் மீது பற்று ஏற்பட்டு விடுகிறது. சமணர்களை எல்லாம் ஆதரிக்கிறான். அவன் இதுபோல் செய்ததால் நாட்டில் சைவம் க்ஷீண திசைக்குச் செல்ல ஆரம்பித்தது. நிறைய பேர் சைவத்திலிருந்து சமண மதத்திற்கு மாறினார்கள். இதைப் பார்த்த ராணி மங்கையர்க்கரசி தேவிக்கும் அமைச்சர் குலச்சிறையாருக்கும் மிகவும் வருத்தம். ஏனெனில் இவர்கள் இருவரும் தீவிர சைவ பக்தர்கள்.

இதனால் இவர்கள் இருவரும் ஞானசம்பந்தருக்குச் சொல்லியனுப்பி, எப்படியாவது அரசரை மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். சரியென்று ஞானசம்பந்தரும் மதுரைக்குப் புறப்படுகிறார். அப்போது அவருடன் திருநாவுக்கரசர் இருக்கிறார். அவர்தான் அப்பர் சுவாமிகள்! அவர் வயதானவர்!

சம்பந்தரோ சிறு பையன்! திருநாவுக்கரசருக்கு சம்பந்தர் மேல் மிக்க மரியாதை உண்டு! அவர் சம்பந்தரிடம், ‘நீங்கள் இப்போது போக வேண்டாம். ஏனெனில் அந்தச் சமணர்கள் மிகவும் வஞ்சனை செய்யக் கூடியவர்கள். அவர்களை எதிர்த்து எதுவும் செய்ய நீங்கள் இப்போது கிளம்ப வேண்டாம். நேரம் சரியில்லை. கிரஹ நிலைகள் எல்லாம் தவறாக இருக்கிறது. போகாதீர்கள்’ என்கிறார்.

அப்போது சம்பந்தர் சொல்கிறார், ‘சிவனுடைய பாதத்தைப் பற்றி நான் நிற்கிறேன்! அப்படி இருக்கும்போது கிரஹங்கள் எல்லாம் என்னை என்ன செய்ய முடியும்? நல்லதுதான் செய்யும். மூங்கிலின் அழகைப் போன்ற தோளை உடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவன், விஷத்தை உண்ட கழுத்தைக் கொண்டவன், மிக நல்ல வீணை வாசித்து, அந்த பரமசிவன் என் உள்ளத்தில் குடியிருப்பதால் இந்த கிரஹங்கள் ஞாயிறு - திங்கள் - செவ்வாய் - புதன் எல்லாம் எனக்கு தீமையே செய்யாது; நல்லதே செய்யும்’ என்று பாடுகிறார்.

வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி  சனி பாம்பிரண்டுமுடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே!

அதாவது ‘இப்படிப்பட்ட சிவன் அவன் என் உள்ளத்திலேயே இருக்கிறான்! அதனால் இந்த கிரஹங்கள் எனக்கு நல்லதுதான் செய்யுமே தவிர கெடுதல் செய்யாது’ என்று பாடுகிறார்.

காஞ்சி மஹா ஸ்வாமிகள், ‘இந்த கிரஹக் கோளாறுகள் நீங்குவதற்கு இதை பாராயணம் செய்தால் போதும். ஒரு கிரஹ தோஷமும் நம்மை அண்டாது’ என்றார். இதைச் சொன்னவர் சம்பந்தர்! அவ்வளவு பெரிய மகான்! அதனால் அதற்கு அவ்வளவு பெரிய சக்தி உண்டு. அப்படிப்பட்டவர்களுக்கு கிரஹ நிலைகள், ராகு காலம், யமகண்டம் போன்றவை ஒன்றும் செய்யாது. நம்மைப் போன்றவர்களுக்கு, அரை குறை ஆசாமிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதற்காக, ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

நன்றி - துக்ளக் 2014 (எங்கே பிராமணன் தொடரிலிருந்து...)

கருத்துரையிடுக

0 கருத்துகள்