'உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான்!; தப்பைச் செய்தவன் தண்டனை பெறுவான்!' என்று பழமொழி இருக்கிறதே! பின் எப்படித் தீமை செய்தவர்களுக்கும் நன்மை செய்யுங்கள்! என்று கூறுகிறீர்கள்? என்று நீங்கள் கேட்கலாம். பெரும்பெரும் குற்றங்களைச் செய்த குற்றவாளிகளுக்கு, அரசுமுறை சார்ந்து அவர்களுக்கு நீதி வழங்கும்போது, குற்றங்களுக்கேற்ற தண்டனைகள் வழங்குவதென்பது இயல்பான நடைமுறை. ஆயினும் தனிப்பட்ட முறையில் நமக்கு மற்றவர் இழைக்கும் தீமைகளுக்கும் கடுமையான தண்டனைகளை வழங்கியே ஆகவேண்டும் என்று நினைக்காமல் அவர்கள் நாணப்படும்படியாக நன்மையையே தண்டனையாக வழங்கவேண்டும் என்பது ஆன்றோர் வாக்கு.
"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்"
இந்தக் குறளில் வள்ளுவர், நமக்குத் தீமை செய்தவர்களுக்குக் கட்டாயம் தண்டனை வழங்கியே ஆக வேண்டும்! என்றுதான் உறுதியாகக் கூறுகிறார்; 'ஒறுத்தல்' என்ற சொல்லுக்குத் 'தண்டித்தல்' என்று பொருள். ஆனால் அப்படித், தண்டனையாக வழங்கும் செயல் தீமைக்குத் தீமை என்றில்லாமல், தீமைக்கு நன்மை என்கிற பாங்கில் இருக்க வேண்டும். 'நாம் செய்த தீமைக்குத் தீமையைத் தண்டனையாக வழங்காமல் நன்மையை வழங்குகிறானே!' என்று தண்டனைக்குரியவன் நாணும்படியாக அந்த நன்மையும் இருக்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். இதுவே சான்றாண்மைக் குணமுடையவர்களின் செயல் என்று அடையாள முத்திரையையும் குத்திக் காட்டுகிறார்.
"இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு"
கெடுதல் செய்தவர்களுக்கும் நன்மையே செய்வதுதான் சான்றோர் எனப்படும் நல்லவர்களுக்கு அடையாளமாகும். இப்படிச் செய்வதன்மூலம், நன்மையைப் பெற்ற கெட்டவர்கள் நாணத்தினால் வெட்கித் தலைகுனியும் தண்டனையை அனுபவிப்பார்கள் என்பது வள்ளுவர் கருத்து. நன்னயம் செய்வதுகூடப், பலவேளைகளில் தண்டனைகள் போலாகித், தீயவர்கள் திருந்துவதற்கு வாய்ப்பை வழங்கிவிடும்.
தமிழில் நாணப்படுதல், வெட்கப்படுதல் என இரண்டுசொற்கள் ஒரே பொருளில் வருகின்றன. பழிபாவங்களைச் செய்ய நாணப்படுதல் அல்லது வெட்கப்படுதல் என்பது அறமுணர்ந்த சான்றோர்களின் குணமாகும். ஆனால் பெண்களின் நற்குணங்களைக் கூறவந்த சான்றோர், அச்சம், மடம், நாணம், பயிற்பு ஆகிய நான்கும் நிச்சயமாகப் பெண்களிடத்தில் அமைந்திருக்க வேண்டும். இந்த நால்வகைக் குணங்களே பெண்களுக்கு அணிகலன்கள் போன்றவை என்கின்றனர். அப்படியானால் பெண்களிடத்தில் இருக்கின்ற நாணப்படுதல் என்னும் குணம் அவர்களின் அழகுக்கு அழகு சேர்க்கின்ற நேர்முறை நோக்கம் கொண்ட குணமாகும். இதைத் திருவள்ளுவரும் ஒரு குறளில் வெகு அழகாகத் தெளிவுபடுத்திக் காட்டுகிறார். 'நாண் உடைமை' அதிகாரத்தில்,
"கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற"
என்னும் குறளில், பழிதரும் தீயச்செயல்களைச் செய்வதற்கு வெட்கப்பட்டு நாணுவதே நாணம் ஆகும். பெண்கள் நாணம் கொள்வது என்பது வேறு என்கிறார்.
ஒரு செயலால் தமக்குத் தனிப்பட்ட முறையிலோ அல்லது பொது நிலையில் மற்றவர்களுக்கோ பழிபாவம் ஏற்படுமானால் அந்தச் செயலைச் செய்வதற்கு அஞ்சி, அதனைச் செய்யாமல் விட்டுவிடுவது நாணம் ஆகும். சமுதாயத்தால் அறமற்ற தீயச்செயல்கள் என்று ஒதுக்கிவைக்கப்பட்ட செயல்களைச் செய்யக்கூடாது; கட்டாயத்தின்பேரில் அவற்றைச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டாலும் அதற்காக நாணமும் வெட்கமும் பட்டு விலகி விட வேண்டும்.
"புகழ் எனின் உயிரும் கொடுக்குவர்
பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்"
எனவரும் புறநானூற்று வரிகள், இன்னும் இந்த உலகம், பழிச்செயல்களுக்கு அஞ்சுகிற நாணமுடைய பெருமக்களால்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது என்கிறது. தனிமனித குண விசேஷங்களைப் பொதுமைப்படுத்திப் பார்க்கிற பரந்த அறிவுப் பார்வையை இதில் காணலாம்.
"எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை என்றால்
இங்குள்ள எல்லாரும் நாணிடவும் வேண்டும்!"
என்கிற பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை வீச்சு, சமுதாயத்தில் ஒருமனிதன் வறுமையின் காரணமாகப் படிப்பற்றவனாக இருந்தாலும், அதற்கான பொறுப்பை ஒட்டுமொத்தச் சமுதாயமும் ஏற்று, நாணப்படவேண்டும் என்கிறது. இங்கே எல்லாரும் கல்விகற்று அமர நிலை எய்திட வேண்டும் என்கிற மகாகவியின் கனவை நனவாக்க அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது. உழைப்பும் முன்னேற்றமும் கல்வியறிவும் தனிமனித முயற்சி சார்ந்தது என்றாலும், அவற்றிற்கான இலக்குகளை அடைவதற்கான முன்னெடுப்புகளை ஒட்டுமொத்தச் சமூகமும் ஒன்றிணைந்து எடுக்க வேண்டும்.
இந்தச் சமூகத்தில், தம்முடைய ஒரு செயலால் தமக்கோ, அல்லது பிறருக்கோ தீங்கு வந்து விடுமென்றால் அதனைச் செய்யாமல் விட்டுவிடவேண்டும். அப்படி மீறித் தீச்செயல்களைச் சிலர் செய்தால் அவர்களாக அதற்கு வெட்கி நாணப்படும்படி, அவர்களுக்கு நற்செயல்களைச் செய்து திருத்த முயற்சி செய்ய வேண்டும்.
ஒரு கிராமத்தில் பக்கத்துப் பக்கத்து வீடுகளில் நடந்த ஒரு சம்பவம் சுவாரஸ்யமானது. அந்தக் காலத்திலும் சரி, இந்தக் காலத்திலும் சரி, கிராமங்களில் வீடுகள்தோறும் வீட்டுத் தோட்டங்கள் போட்டுக் காய்கறிகள் பயிர் செய்வதும், ஆடுமாடுகள் கோழிகள் வளர்ப்பதும் வழக்கம். அப்படி ஒரு வீட்டில் மூன்று கோழிகளை ஒருவர் வளர்த்து வந்தார்.
- தொடரும்...
நன்றி - மாலைமலர் 15-09-2024

0 கருத்துகள்