Advertisement

Responsive Advertisement

25 வயதில் இளம் எம்.எல்.ஏ 'மைதிலி தாக்குர்'.! பாஜகவில் சேர்ந்த ஒரே மாதத்தில் வரலாற்று வெற்றி!!


பீகாரில் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் ஜேடியு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் பீகாரில் ஆட்சியமைத்துள்ளது.

இந்த பரபரப்பான தேர்தல் களத்தில், தர்பங்கா மாவட்டத்தில் உள்ள அலிநகர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளரான 25 வயதான பாடகி மைதிலி தாக்குர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளர் பினோத் மிஷ்ராவைவிட 11,730 வாக்குகள் அதிகமாகப் பெற்று தனது அரசியல் வாழ்க்கையில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.


பீகாரில் மிகவும் பிரபலமான மைதிலி மற்றும் போஜ்புரி நாட்டுப்புறப் பாடகியான மைதிலி தாக்குர், கடந்த அக். 14 ஆம் தேதி பாஜகவில் இணைந்தார். அதன்பின்னர், அவருக்கு அலிநகரில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.

பாஜகவின் அடிப்படை உறுப்பினராக சேர்ந்த ஒரே மாதத்தில் எம்.எல்.ஏ. ஆகும் அதிர்ஷ்டம் மைதிலி தாக்குருக்கு அடித்துள்ளது.

மைதிலி தாக்குர் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றது ஒரு அரசியல் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. இளம் வயது, மாபெரும் மக்கள் செல்வாக்கு, மற்றும் கலாச்சார அடையாளமாக விளங்கும் இவர், வெற்றி பெற்றதன் மூலம் பீகாரின் அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார்.


சிறு வயதிலேயே மைதிலி, போஜ்புரி மற்றும் இந்தி பாடல்களைப் பாடத் தொடங்கினார். இவரது பாடல்கள் சமூக ஊடகங்களில் (குறிப்பாக யூடியூபில்) கோடிக்கணக்கான பார்வைகளைப் பெற்று பெரும் புகழைத் தேடித் தந்தன.

இதில் என்ன சிறப்பு என்றால், தற்பொழுது புழக்கத்தில் இல்லாத மைதிலி மற்றும் அங்கிகா மொழியின் பாரம்பரிய இசைக்கு இவர் புத்துயிர் அளித்துள்ளார். மேலும், இவர் பீகார் அரசின் 'ஸ்வச் பாரத்' தூதுவராகவும் நியமிக்கப்பட்டவர்.

தேசிய அளவிலான பல இசைப் போட்டிகளில் பங்கேற்று பாராட்டுகளைப் பெற்றுள்ளார். இவர் ஒரு சிறந்த சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவராகவும் (Social Media Influencer) அறியப்படுகிறார்.

மைதிலி தாக்குர் தனது 25 வயதில் எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம், பீகார் சட்டமன்றத்தில் இளம் வேட்பாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இதற்கு முன்னர், 2005 ஆம் ஆண்டு 26 வயதில் சுயேச்சை வேட்பாளர் தௌசீப் ஆலமும், 2015 ஆம் ஆண்டு ரகோபூரிலிருந்து 26 வயதில் ஆர்.ஜே.டி.யின் தேஜஸ்வி யாதவும் இளம் வேட்பாளர்கள் என்ற பெருமையைப் பெற்றிருந்தனர்.

தற்போது, அவர்களை முறியடித்து, தனது 25 வயதில் சட்டப்பேரவைக்குள் நுழைகிறார் மைதிலி தாக்குர். இவரது இந்த வெற்றி, எதிர்கால அரசியல் தலைமுறைக்கு ஒரு புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது.

-S.B.

கருத்துரையிடுக

0 கருத்துகள்