“இயந்திரங்களுக்கு ஆண் யார் பெண் யார் என்று தெரியாது; அவை உன் வலிமையை மட்டுமே பார்க்கும்” – இது சாதாரண ஒரு வாக்கியம் அல்ல. 36 ஆண்டுகள் இந்தியாவின் ரயில்வே சக்கரங்களை ஓட்டிய சுரேகா யாதவின் வாழ்நாளைப் பிரதிபலிக்கும் மந்திர வார்த்தை.
1965-இல் மகாராஷ்டிராவின் சிறிய கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தாள் சுரேகா. சிறுவயதிலிருந்தே வயலில் உழைப்பதையும், படிப்பையும் ஒரே நேரத்தில் செய்துவந்தாள். பெற்றோர் எளியவர்களாக இருந்தாலும், “பெண் குழந்தை என்பதால் படிப்பை நிறுத்திவிடக்கூடாது” என்ற முற்போக்கு சிந்தனையுடன் கல்வியை ஊக்குவித்தார்கள்.
அந்தப் படிப்புதான் அவளுக்குப் பின்னர் வாழ்வினை மாற்றக்கூடிய மிகப்பெரிய வாய்ப்பினை தந்தது.
மின்சாரப் பொறியியலில் பட்டம் பெற்ற பிறகு வேலை தேடிக்கொண்டிருந்த சுரேகா, இந்திய ரயில்வேயின் உதவி ஓட்டுநர் (Assistant Driver - அசிஸ்டண்ட் டிரைவர்) பணிக்கான செய்தித்தாள் விளம்பரத்தைப் பார்த்தாள். தேர்வு செயல்முறையை வெற்றிகரமாக முடித்தாள். ஆனால் பயிற்சிக்குச் சென்ற நாள், அவள் அதிர்ந்து நின்றாள். இந்த ரயில்வே உலகில் பெண்களுக்கு இடமே இல்லை என்று. சுற்றுமுற்றும் ஆண்கள் மட்டுமே இருந்தனர்.
ஒரு பெண்ணும் இல்லாத வகுப்பறையில் நின்றபோதும், அவள் மனதில் ஒரே சிந்தனை –
“நான் விலகினால் இந்த வாய்ப்பு வேறொருவருக்கே போகும். பெண்ணாய் இருந்தாலும் நான் தேர்வு செய்யப்பட்டிருக்கிறேனே, அந்த வேலையை நான் தான் செய்வேன்.”
அந்த உறுதியான முடிவு, இந்திய ரயில்வே வரலாற்றில் ஒரு பெரிய சகாப்தத்தை உருவாக்கியது.
ரயில் ஓட்டுனர் என்பது ஒன்றும் சாதாரண வேலை கிடையாது. ஒவ்வொரு கணமும் சிக்னல், வேகம், பாதை, மின்கம்பி, துணை ஓட்டுனர் – அனைத்தையும் ஒரே நேரத்தில் கவனிக்க வேண்டிய திடீர் முடிவெடுக்கும் பொறுப்பு.
சுரேகா வெள்ளத்தில் மூழ்கிய பாதைகளிலும், மலைச்சரிவுகளிலும், தண்டவாளத்தில் பல நாட்களுக்கு நீளும் பயணங்களிலும் ரயிலை நிதானமாக ஓட்டினாள்.
பெரும்பாலான குடும்ப நிகழ்ச்சிகளைத் தவறவிட்டாள். ஆனால் குடும்பமும், ஆண் சக ஊழியர்களும் அவளுக்கு உறுதியான ஆதரவு அளித்தனர். “என் கூட்டாளிகள் என்னை பெண் என்று ஒருபோதும் வேறுபடுத்திப் பார்க்கவில்லை. அவர்கள் எனை எப்போதும் தங்களுள் ஒருவராகவே ஏற்றுக் கொண்டார்கள்” என்று பெருமையுடன் சொல்கிறாள்.
1996-இல் லோகோ பைலட் பதவிக்கு உயர்ந்தாள். அதன் பிறகு அவள் மட்டுமல்ல, அவள் திறந்த கதவின் வழியாக இன்று 2000க்கும் மேற்பட்ட பெண்கள் ரயில் ஓட்டுநர்களாக உள்ளனர். சுரேகா தன் அனுபவங்களைப் பகிர்ந்து, பலருக்குப் பயிற்சியாளராகவும், ஊக்கமளிப்பவராகவும் இருந்தார்.
36 ஆண்டுகள் பணி நிறைவு செய்த நாளில், அவள் ஓட்டியது இந்தியாவின் புகழ்பெற்ற ராஜ்தானி எக்ஸ்பிரஸ். மும்பை நிலையத்தில் அவளுக்கான வாழ்த்துச் சப்தம் – மேள தாளங்கள், நடனங்கள், மலர்மழை – எல்லாம் ஒன்றாக ஒலித்தது.
அன்று சுரேகா சொன்ன வார்த்தைகள் பல பெண்களுக்கு வாழ்வின் மந்திரமாகின:
“நான் 60 வயது வரையும் ரயில் ஓட்டுவேன் என்று கனவு கூட கண்டதில்லை. எனக்கு நினைவில் நிற்கப்போவது அந்தச் சிக்னல் விளக்குகள் தான். அவை எப்போதும் எனக்கு சரியானப் பாதையைக் காட்டின.”
ஒரு எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து, பெண்கள் இந்த வேலையைச் செய்ய முடியாது எனக் கருதப்பட்ட உலகத்தை வென்று, ஆயிரக்கணக்கான பெண்களுக்கு வழிகாட்டியாகி விட்டார்.
சுரேகா யாதவின் கதை, ஒவ்வொரு பெண்ணின் இதயத்திலும் ஓசையெழுப்பும் ஊக்கக் கதை.
- S.B.
Courtesy - BBC Marathi



0 கருத்துகள்