Advertisement

Responsive Advertisement

புலிகளின் புதல்வர்கள் - கவிஞர் பா.விஜய்


இரண்டாயிரம் ஆண்டுகள் முன்னதாக தர்மவர்ம சோழனால் கட்டப்பட்ட திருவரங்கப் பெருங்கோயில் பெருமாளின் நாமத்தை காவிரிக்கரை காற்றில் உச்சரித்தபடி வைணவப் பொருளினை ஓதிக்கொண்டிருந்தது. கடல் போன்ற காவிரியின் கரங்கள் திருவரங்கக் கோபுரங்கள் நான்கினையும் தன்னுள் மூழ்க வைத்தபடி, முகப்பினை மட்டும் சற்று வெளியுலகிற்குக் காட்டிக் கொண்டிருந்தது. காவிரிப் பெருக்கின் மேல் கொஞ்சமாய் தெரிந்த கோபுரங்களின் உச்சியில் வெள்ளைப் புறாக்கள் அமர்ந்திருந்தன. அதே பொழுது காவிரிக் கரை ஓரம் ஒழுகும் உறையூரில் விழாக்கோலம்.

புறாவின் கருவைப்  போன்ற வரகு அரிசியானது பெரிய பெரிய பித்தளை உருளைப் பாத்திரங்களில் கொதித்துக் கொண்டிருந்தது. தளதளவென கெட்டிப் பட்டிருந்த பசும்பாலினை குடங்குடமாகக் கொண்டுவந்து வரகு அரிசி வெந்து கொண்டிருந்த பாத்திரங்களில் பக்குவம் கெடாமல் பொசிந்து, அரசமரக் கழிகளால் கிண்டிக் கொண்டிருந்தனர் நெய்தல் இனத்தவர்கள். கருமையோடு செம்மை கலந்த தேகமுடைய நெய்தல் பெண்களின் வலுவான கரங்கள் மரக் கழிகளைத் துடுப்புபோல் துழாவ, மறுபுறம் நின்றபடி தலைகீழா கவிழ்த்தாலும் வழியாத கெட்டி மலைத்தேனை அந்த அகண்ட பாத்திரங்களில் ஊற்றிக் கொண்டிருந்தனர் மறவர்கள். பால் இறுகக் காய்ந்து தேனில் ஊறிய வரகு அரிசியும் கொதிக்கத் துவங்கியதும் வெளிவரும் நறுமணத்தை மிஞ்ச, போட்டி போட்டது அருகருகே வேம்புக்கட்டைகளை விறகுகளாய் அடுக்கி எரிந்துகொண்டிருந்த அடுப்பின் மேல் இருந்த முயல்கறி. கொழுத்த முயல்களின் சூட்டிறைச்சி ஒருபுறம் சுடச்சுட பதமாகிக் கொண்டிருக்க, கரிகாலனுடன் யானை மீது ஏறிவந்த பெருங்கூட்டம் கைகளில் வாழை குமுகு மர இலைகளைப் பிடித்தபடி, நாக்கு சப்புக் கொட்ட பார்த்திருந்தனர். உறையூரே விழாக்கோலம் பூண்டிருந்தது.

திருக்கோழி, நிகழபுரி, உறந்தை, கோழியூர் எனவும் வழங்கப்பட்ட உறையூரில் கரிகாலன் களிறுகள் சூழ நுழையும் முன்னமே பின்வாசல் வழி பிடறியில் கால் இடறிவிழ, ஓடியிருந்தனர் ஆட்சியை அபகரித்தவர்கள். மீண்டது சோழ சாம்ராஜ்யம். மீண்டும் வந்துவிட்டான் என்று ஐவகை நில மக்களும் புளகம் அடைந்தனர். கரிகாலன் தன்னைச் சோழர்களின் தலைவனாக அறிவித்துக் கொண்டதோடு, தன் மாமன் பிடாத்தலையரின் ஆலோசனைப்படி இயங்கவும் துவங்கினான். உறையூர் தலைநகர் வசந்தவிழாக் காலம் போல் வரிசை குலுங்க சிலிர்த்தது.

தன்னோடு காயப்பட்டு களம் கண்டவர்களோடு  வந்தமர்ந்து போர்ச்சோறு உண்டான் மன்னன். போருக்கு முன்னரும் போர் வெற்றிக்குப் பின்னரும் ரத்தக் காயத்திற்கு சித்தமானவர்களுடன் போர்ச்சோறு உண்பது தமிழக மன்னர்களின் வழக்கமாக இருந்தது. போர் விருந்து தெரு முழுக்க பொங்கி வடித்தனர். அனைத்து இல்லங்களிலும் ராஜ அன்னம் படைக்கப்பட்டது. அரிசியாலான உணவை ராஜ அன்னம் என்றழைத்தனர் அன்றைய மக்கள்.

பெரும்பாலும் தமிழர்கள் வயிறு புடைக்க உண்பவர்கள். பலவகையான பதார்த்தங்களையும் வகைவகையாய் ஆக்கி உண்ண வைத்துப் பார்த்தனர் பெண்கள். புலால் உண்ணல் கூட, சமண மதம் தென்னகத்தில் பரவத் துவங்கிய பிறகே மிகப்பெரிய அளவில் குறைந்திருக்கிறது. அதற்கு முன்னர் எல்லோருமே புலால் உண்டிருக்கின்றனர். மான்கறியும் முயல்கறியும் மிகப் பிரதான விருந்தாக இருந்துள்ளன. அதுவும் மானின் தொடைப் பகுதியை எடுத்து நெய்விட்டு, ஒரு நீளக்கம்பியில் செருகி வாட்டி எடுத்து, அடுக்கி வைத்து உண்பதில் பெரும் ஆர்வம் காட்டியிருக்கின்றனர் (இன்றைய கபாப் சிக்கன் போல!). அத்தோடு மது வகையறாக்களுக்கும் குறை ஒன்றும் இருந்திருக்கவில்லை. உள்ளூர் பானங்களையும் கள்ளையும் நிறையக் குடித்தது போக, அயலகச் சரக்குகளும் பெருமளவில் நீர்ப்பாசனம் செய்யப்பட்டிருக்கிறது.

பண்டைக் காலத்தில் வேளாளர்களும் பார்ப்பனர்களும் கூட மது, மாமிசத்தை வெறுத்திருக்கவில்லை. சிறந்த உணவாக பலர் அதைக் கொண்டிருந்தனர். புலன் அழுக்கற்ற அந்தணன் என்று போற்றப்பட்ட கபிலர் வரலாறு இதைக் கூறுகிறது. இது மாறோக்கத்து நப்பசலையார் என்பவர் கபிலர் பற்றிச் சொன்னது. இத்தோடு கபிலர் போன்ற பெரும் புலவர்களும், ஔவையார் போன்ற பெண் புலவர் பெருமக்களும் கூட மது அருந்தி, மாமிசம் உண்டு வாழ்ந்திருக்கிறார்கள். ஊனும் கறியும் துவையலும் சோறும் அள்ளி உண்ணும் கை தன் கை என்று கபிலர் தன் கரங்களின் மென்மை குறித்து புறநானூற்றின் 14ம் பாடலில் பளிச்சிடுகிறார். கொஞ்சம் கள் கிடைத்தால் கூட அதை விரும்பி எனக்கே தருவான். எலும்பும் சதையும் கலந்த விருந்தை எமக்களிப்பான் என அதியமான் நெடுமானஞ்சியை புகழும் ஔவையார், தன் விருப்ப உணவை புறநானூற்றின் 235ம் பாட்டில் பதிவு செய்கிறார்.

உறையூரோடு சேர்த்து இன்றைய ஆற்காட்டுப் பகுதி இருந்தது (இதற்கு அன்று அத்திக்காடு என்று பெயர். அத்தி மாலை அணிந்த சோழர்களின் மற்றொரு தலைநகரமாக இது இருந்துள்ளது. தாலமி குறிப்பிடும் ஆர்கோடஸ் இதுதான். சோழ நாடோடிகள் என்று தாலமி குறிப்பிடும் சோழ நாடோடிகள் பலர் ஆற்காட்டைக் கொண்டு ஆட்சி செய்தனர்.) அந்த ஆற்காட்டுப் பகுதியில் இருந்த சோழ நாடோடிகளையும் இணைத்துப் பிணைத்து பிரம்மாண்டமானதொரு ராஜ்யத்தைக் கட்டமைக்கிறார் கரிகாலன். அயல்வெளி வர்த்தகமே வளர்ச்சியளிக்கும் என்றதொரு பொருளாதாரக் கொள்கையை வெளிப்படுத்த முன்வரும் கரிகாலன் நாணய வர்த்தகத்திற்கு வழிவகுக்கும் பொருட்டும் சர்வதேசச் சந்தையில் போக்குவரத்தை அதிகப்படுத்தும் முதல் நடவடிக்கையாக தலைநகரை புகாருக்கு இடம்பெயர்க்கிறார்.

கரிகாலன்தான் சோழ மன்னர்களின் வரிசையில் ஒரு பறவைப் பார்வையை தமிழகத்தில் காண்கிறார். காவிரிப்பூம்பட்டினத்தை மேம்படுத்தி உயர்த்தினால் தமிழகத்தின் மொத்த வாணிகத்தையும் உயர்த்த முடியும் என்று நம்பும் கரிகாலனின் கவனம் முழுக்க காவிரிப்பூம்பட்டினத்தை நவீன வடிவமாக்கத் துவங்குகிறது.

ஒரே நேரத்தில், அயல்தேசப் படகுகள் உள்வந்து வெளிச்செல்ல, பிரம்மாண்ட துறைமுகம், அடுக்கு அமைப்புகள் கொண்ட நிரந்தரக் கலங்கரை விளக்கம், ராஜவீதி உள்ளிட்ட வணிக வீதிகள், பொருள் கொள்முதல் கிடங்குகள், அயலக வியாபாரிகள் வந்து தங்க வசதியான உயர்தர சத்திரச் சாவடிகள், மாளிகைகள் எழுப்பப்படுகின்றன. ஆடல்-பாடல் கேளிக்கை நிகழ்வுகள் இரவு, பகலாக நடைபெற ஏற்பாடு. நாள் அங்காடி, இரவு அங்காடி என இருவகை அங்காடிகள். பகல் முழுக்க இயங்கும் கடைத்தெரு, இரவிலும் இயங்கும் கடைத்தெருக்கள். இதுபோக, பொதுமகளிர் வீதி என பெரும்வசதி செய்து தரப்படுகிறது வாணிபம் செய்ய வருவோருக்கும் போவோருக்கும்.

இன்று, சர்வதேசத் தரத்தில் விமான நிலையம் கட்டப்படுவதுபோல, உயர்தரத்தில் எழுப்பப்படுகிறது காவிரிப்பூம்பட்டினம் ஒரு பெரும் தலைநகரமாய்.

கரிகாலனின் வாழ்நாளில் ஒவ்வொரு தினமும் ஒரு புதிய திசையைத் தீர்மானித்துக் கொண்ட அரிய பொழுது, திருமங்கை ஆழ்வாரின் பாசுரங்களில் இடம்பெற்ற நாங்கூரைச் சேர்ந்த வேளிர் குலப் பெண்ணான எழிலியை திருமணம் செய்து கொள்கிறார் கரிகாலன். நச்சினார்க்கினியரின் மரபு வழிச் செய்தி இதைக் கூறுகிறது. கரிகாலனுக்கு ஆண் வாரிசுகளாக நலங்கிள்ளி, மாவளத்தான், பெண் வாரிசாக நற்சோனை என்ற மகளும் பிறக்கின்றனர். கரிகாலனின் தனிப்பட்ட வாழ்க்கை மிகச் சுருக்கமாய் எழுதப்பட்டிருக்க, அரசியல் வாழ்க்கை அகண்டு விரிகிறது. சோழர்கள் பெரும் நிலத்தை அபகரித்துக் கொண்ட பாண்டிய சேரர்களோடு சேர்த்து மொத்தம் 11 கூட்டணி மன்னர்களை உடைத்து வெல்லும் திட்டம் ஒன்றை உருவாக்குகிறார் கரிகாலன்.

வென்னிப்போர், தமிழக யுத்த ஆவணங்களில் முதல் பிரம்மாண்டமானதொரு யுத்தமாக பதிவு செய்யப்படுகிறது. இன்று தஞ்சையில் இருந்து 15 கல் தொலைவில் உள்ள கோயில் வென்னியில்தான் அந்தப் பெரும் யுத்தம் நிகழ்ந்திருக்க வேண்டும். கரிகாலன் பெருவாழ்வில் மாபெரும் திருப்பத்தை வென்னிப்போர் ஏற்படுத்துகிறது. பட்டினப்பாலை எனும் பெரும் இலக்கியம் முழுக்க கரிகாலப் பெருவளத்தானின் சரித்திரச் சுவடுகளை சுமக்கும் ஆவணம்.

பட்டினப்பாலை நவிலும் கரிகாலன் நடத்திய வென்னிப்போர் மிகக் கொடூரமான யுத்தமாகவே இருந்திருக்க வேண்டும். கரிகாலனுக்கு மிகப்பெரிய பலமே யானைப்படைதான். மதம் பிடிக்கவிருக்கும் நிலைக்கு கள் அருந்த வைக்கப்பட்ட யானைகளின் முன்னிரு புறமும் நீண்ட பட்டரைக் கத்திகளை (இன்று மரம் அறுக்கப் பயன்படும் நீண்ட வாள்) மரப் பிணைப்புகள் பொருத்தி கட்டிவிடுவார்கள். வெறியூட்டப்பட்ட யானைகள் பெருந்திரளாக வேலும் வாளும் ஏந்திவரும் எதிரிப் படை அணிவகுப்பினுள் சாரைசாரையாய் காட்டுத்தனமாய்  பிளிறி ஓடும். அவ்விதம் ஓடும் யானைகளின் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த நீண்ட வாட்களின் இருமருங்கிலும் உடல் கிழிந்து விழுவர் பலர்.  எதிர்நின்று யானைகளின் கால்களில் நசுங்கி அழிவர் பலர். துதிக்கையால் வீசி அடிக்கப்பட்டு இறப்பர் பலர். ஒரு யானை குறைந்தது 100 மறவர்களையாவது குத்திக் கிளறி எறியும். 1,000 யானைகள் நடந்த களம் எப்படியிருக்கும்? மனிதக்குருதியும் சதையும் சரிந்த குடலும் மரண ஓலமும் இரண்டாம் உலக யுத்தத்தின் கொடூரத்தை நினைவுபடுத்துகின்றன. நிலவேட்கை,  நிலவெறி உலகெங்கிலும் ஆட்சிபுரிந்த அனைவரையுமே ஆட்கொண்டிருந்திருக்கிறது. நமது புறநானூறும் பெருநராற்றுப் படையும் பட்டினப்பாலை உள்ளிட்ட பலநூறு இலக்கியங்களும் வீரம் வீரம் என்று வீராவேசம் பேசுவதெல்லாம் பெருமிதமாய் இருந்தாலும், உள்ளூர ஓர் உண்மை வலி இருக்கத்தான் செய்கிறது. ஆம்... தமிழ் மண்ணில் ஓடிய ரத்தமும் கண்ணீரும் அறுக்கப்பட்ட கழுத்துக்களும் மாங்கல்யமும் வேறு யாருடையதும் அல்ல... தமிழர்களுடையதுதான்.

தமிழர்களின் 1,300 ஆண்டுகால யுத்தமுமே சகோதரச் சண்டைகள்தான். பங்காளி யுத்தங்கள்தான். சோழராய், சேரராய், பாண்டியராய், பல்லவராய் பெயரளவில் பிரிந்திருந்தாலும் இனமாய் தமிழர்கள் ஒன்றுபடாததன் சாசனமே 1,300 ஆண்டுகால யுத்த சரித்திரம். வெறிகொண்ட நிலவேட்கையே தமிழனை தமிழனே வதம் செய்வதற்கான பெரும் காரணமாக இருந்திருக்கின்றது. புறநானூறு பூரிக்கின்ற புடைப்பெல்லாம் ஓர் இனத்துக்குள் நடந்த ரத்தவெறி ஆட்டத்தைப் பற்றியதுதான் என்று திடமாய் முன்வைக்கிறேன்.

தமிழ் மன்னர்களின் 1,300 ஆண்டுகால ஒன்றுமையின்மைதான், பிற இனத்தவர்கள் முதல் முகலாயர்கள் வரை நம்மை 700 ஆண்டுகளாய் அடிமைச்சாதியாய் கருமாற்றம் செய்யக் காரணம். யுத்தம் யுத்தம் என வெறி பிடித்து அலைந்த தமிழ் மன்னர்கள் பிற நாட்டவரை, பிற இனத்தவரைக் கொன்று குவித்த வரலாற்றை விட, தன் இனம் சேர்ந்தவனை வேரறுத்து, குலநாசம் செய்து கொன்று குவித்த சரித்திரமே அதிகம்.

உருண்ட தலைகள் தமிழருடையது. உருட்டிய கைகள் தமிழருடையது. இதற்குப் பெயராக நாம் பெருமைப்பட்டு சூட்டிக் கொண்டது தமிழர் வீரம். ஒன்றாக இணைந்து ஆட்சி நடத்தத் தெரியாத அறியாமைக்கு இன்னொரு அழகான இடுகுறிப்பெயர் இது. தென்தேசம் மட்டுமாவது ஒன்றாக ஒரு புள்ளியில் நின்றிருந்தால் 6,000 மைல் தாண்டிவந்து ஆங்கிலேயன் தமிழனுடைய தலைமுடியைக் கூட வெட்டிப் பார்த்திருக்க முடியாது.

(கவிஞர் பா.விஜய் அவர்களின் புலிகளின் புதல்வர்கள் வரலாற்று காவியத்தின் ஒரு அத்தியாயம்.)

கருத்துரையிடுக

0 கருத்துகள்