இந்திய தேசிய காங்கிரஸின் பொதுச் செயலாளரும் தகவல் தொடர்புப் பொறுப்பாளருமான ஜெய்ராம் ரமேஷ், அமெரிக்காவின் ராணுவ ஒப்பந்தங்கள் குறித்து சமீபத்தில் இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டு, அதன்மூலம் ராஜதந்திர உறவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜெய்ராம் ரமேஷ் பகிர்ந்த அமெரிக்கப் போர்த் துறையின் (US Department of War) பொது அறிவிப்புகள் பின்வருமாறு:
மே 7, 2025 அறிவிப்பு: ரேதியான் (Raytheon) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மேம்பட்ட நடுத்தர தொலைவு வான்-இலக்கு ஏவுகணைகள் (AMRAAM) கனடா, தைவான், பல்கேரியா, ஹங்கேரி, போலந்து, ஸ்வீடன், செக் குடியரசு, தென் கொரியா, குவைத், ஜப்பான், பின்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி, நெதர்லாந்து, நார்வே, பெல்ஜியம், ஆஸ்திரேலியா, துருக்கி, ஸ்பெயின் மற்றும் லிதுவேனியா ஆகிய நாடுகளுக்கு வழங்குவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன.
செப்டம்பர் 30, 2025 அறிவிப்பு: ரேதியான் ஏவுகணைகள் வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கத்தார், ஓமன், சவுதி அரேபியா, இஸ்ரேல், துருக்கி, மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த இரண்டு அறிவிப்புகளையும் ஒப்பிட்டுப் பேசிய ரமேஷ், "ராஜதந்திரச் சூழல் எவ்வளவு விரைவாக மாறுகிறது, எவ்வளவு விரைவாக நமக்கு ராஜதந்திர பின்னடைவுகள் குவிகின்றன!" என்று கவலை தெரிவித்தார்.
அமெரிக்க ராணுவத் துறையின் (முன்னாள் பாதுகாப்புத் துறை - Department of Defence) சமீபத்திய ஆயுத ஒப்பந்த அறிவிப்பில் பாகிஸ்தானும் AIM-120 AMRAAM ஏவுகணைகளை வாங்குபவர்களில் பட்டியலிடப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் செய்தித்தாளான 'தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன்' செய்தி வெளியிட்டிருந்தது.
அந்த அறிவிப்பில், "இந்த ஒப்பந்தம் இங்கிலாந்து, போலந்து, பாகிஸ்தான், ஜெர்மனி, பின்லாந்து, ஆஸ்திரேலியா, ருமேனியா, கத்தார், ஓமன், கொரியா, கிரீஸ், சுவிட்சர்லாந்து, போர்ச்சுகல், சிங்கப்பூர், நெதர்லாந்து, செக் குடியரசு, ஜப்பான், ஸ்லோவாக்கியா, டென்மார்க், கனடா, பெல்ஜியம், பஹ்ரைன், சவுதி அரேபியா, இத்தாலி, நார்வே, ஸ்பெயின், குவைத், பின்லாந்து, ஸ்வீடன், தைவான், லிதுவேனியா, இஸ்ரேல், பல்கேரியா, ஹங்கேரி, மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கான வெளிநாட்டு ராணுவ விற்பனையை உள்ளடக்கியது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்த வேலைகள் மே 2030-க்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது." என்று அறிவிப்பினை செய்தியாக வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் மற்றும் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோர் கடந்த செப்டம்பரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை வாஷிங்டனில் சந்தித்த சில வாரங்களிலேயே இந்த ஒப்பந்தத் திருத்தம் அறிவிக்கப்பட்டதால், பாகிஸ்தான் ஊடகங்கள் இது AIM-120 போன்ற புதிய தலைமுறை மேம்பட்ட ஏவுகணைகளை வழங்குவதற்கானது என்று ஊகித்தன.
இந்த ஊகங்கள் மற்றும் செய்திகள் குறித்து எழுந்த சலசலப்புக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கான அமெரிக்கத் தூதரகம் வெள்ளிக்கிழமை (10-10-2025) அன்று ஒரு விளக்க அறிக்கையை வெளியிட்டது.
விளக்கம்: ஊடக அறிக்கைகளில் கூறப்படுவது போல், செப்டம்பர் 30 அன்று போர்த் துறை அமைச்சகம் மேற்கொண்ட ஒப்பந்தத் திருத்தம் புதிய ரக ஏவுகணைகளை வழங்குவதற்கானது அல்ல.
உண்மை நிலை: இந்த ஒப்பந்தத் திருத்தம், பாகிஸ்தானுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள ஆயுதங்களுக்கான பராமரிப்பு மற்றும் உதிரிபாகங்கள் வழங்குவது தொடர்பானது மட்டுமே என்று அமெரிக்கத் தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது.
பாகிஸ்தான் கடந்த 2007-ஆம் ஆண்டில் தனது F-16 போர் விமானங்களுக்காக 700 AMRAAM ரக ஏவுகணைகளை வாங்கியிருந்தது. அதுவே பாகிஸ்தானின் மிகப்பெரிய சர்வதேச ஆயுதக் கொள்முதல்களில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மை இப்படியிருக்க எதிர்க்கட்சிகள் என்னவெல்லாம் சொல்கின்றன.
-S.B.


0 கருத்துகள்