Advertisement

Responsive Advertisement

கண்ணன் கதை - 8 - பி.என்.பரசுராமன்


மகான்கள் தரிசித்த மாதவன்!

கண்ணனை மடியில் கிடத்தி ஆடையால் மூடி பாலூட்டிக் கொண்டிருந்தாள் யசோதை. கண்ணன் திடீர் திடீரென்று யசோதையின் முகத்தைப் பார்த்துக் கன்னங்கள் குழிய, பொக்கை வாய் திறந்து சிரிக்கிறான். யசோதையும் சிரித்தாள்.

‘குருவாயூரப்பா! நீயும் உன் தாயும் மட்டும் இப்படிச் சந்தோஷப்பட்டால் போதுமா? அதில் எனக்கும் ஒரு பங்கு வேண்டாமா? எனது வாத நோய் போக்கி, என்னையும் சிரிக்க வை!’ என நாராயணீயத்தில், பட்டத்திரி வேண்டுகிறார்.

அதோ! கண்ணன் தூங்கத் தொட்டில் தயாராகிவிட்டது. கண்ணனைத் தூங்க வைப்பது அடுத்த கட்டம். அழகான அந்தத் தொட்டிலைப் பெரியாழ்வார் அமைத்துத் தருகிறார். அதுவும் இந்த உலகத்தில் தயாரிக்கப்பட்ட தொட்டில் அல்ல. பிரம்ம லோகத்தில் இருந்து வந்தது.

மாணிக்கங்கட்டி வயிரமிடை கட்டி
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச்
சிறு தொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக் குறளனே தாலேலோ!
வையம் அளந்தானே தாலேலோ!
(பெரியாழ்வார்)

இந்த உலகம் பிரம்மனின் சிருஷ்டி. உலகம் முழுவதிலும் நீக்கமற நிறைந்திருப்பவன் ஸ்வாமி மட்டுமே. அவன் உலகத்துக்குள் அடக்கம். ஆனால், உலகமோ அவனுக்குள் அடக்கம். இந்த இரண்டு தத்துவங்களையும் காட்டவே, ஸ்வாமி, வாமனனாக வந்து, பிறகு உலகளந்த பெருமாளாக நின்றான். இது பெரியாழ்வார் நினைவுக்கு வந்தது போலும்! ‘அப்பனே! உனது சாமர்த்தியங்களை எல்லாம், ஏழை யசோதை ஆட்டும் தொட்டிலிலே காட்டி விடாதே! குறளனாக (வாமனனாக) நீ வந்ததும் தெரியும். நெடு(ம்)மாலாகி நீண்டு வளர்ந்ததும் தெரியும். அது பழைய கதையாகவே இருக்கட்டும், இங்கே வேண்டாம்!’ என்று வேண்டிக் கொள்கிறார்.

வைகுண்டம் என்னும் தொட்டிலை விட்டு உலகம் என்னும் தரைக்கு இறங்கியது, அதாவது கிருஷ்ணாவதாரம் எடுத்தது யசோதையின் தொட்டிலில் கிடந்து ஆடுவதற்காக மட்டுமா என்ன? தொட்டிலில் இருந்த கண்ணன் கீழே இறங்கித் தவழ ஆரம்பித்தான்.

கால்களில் கொலுசுகள். கிண்கிணிகள் கட்டிய அரைஞாண் இடுப்பில். கைகளில் காப்பு. தலையின் பக்கவாட்டுகளில் ஒதுங்கி, அழகு மிளிரும் தலைமுடி. அதன் மீது ஒரு மயில் இறகு. இந்தக் கோலத்தோடு கை, கால்களை வேகமாக கண்ணன் அசைக்கும்போது கொலுசுகள், கிண்கிணிகள், காப்புகள் ஆகியவை ‘கல்கல்’ என்று ஒலிக்க கண்ணன் தவழ்ந்தான்.


பலராமனுடன் கண்ணன் தவழ்வதைப் பார்க்க ஆயர்பாடியில் உள்ள அனைவரும் கூடி விட்டனர். கூட்டத்தைப் பார்த்த குழந்தைகளுக்கு உற்சாகம் பிறந்தது. இருவரும் வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்தனர். தலை முடி கலைந்தது. ஆபரணங்கள் நழுவின. ‘எல்லோரும் பார்க்கிறார்களே!’ என்று வெட்கத்துடன் குழந்தைகள் சிறு பற்கள் தெரியச் சிரித்தனர்.

கண்ணனும் பலராமனும் மெள்ள மெள்ள நடக்க ஆரம்பித்தனர். அது சாதாரணக் குழந்தைகளின் நடை போல் இல்லை. யானைக்குட்டிகளின் கம்பீரத்துடன் விளங்கியது. அதை பதிவு செய்திருக்கிறார் பெரியாழ்வார். வாய்விட்டுச் சொல்லிப் பாருங்கள்! அந்த நடை அப்படியே தெரியும்.

தொடர் சங்கிலிகை சலார் பிலாரென்னத்
தூங்கு பொன்மணி ஒலிப்ப
படுமும்மதப் புனல் சோரவாரணம்
பைய நின்று ஊர்வது போல்
உடன் கூடிக் கிண்கிணி ஆரவாரிப்ப
உடைமணி பறை கறங்க
தடந்தாளிணை கொண்டு சார்ங்கபாணி
தளர் நடை நடவானோ?

குட்டி யானை நடக்கும்போது அதன் காலில் கட்டியுள்ள இரும்புச் சங்கிலிகள், ‘சலார் பிலார்’ என்று சத்தம் எழுப்பும். அதுபோல கண்ணன் நடக்கும்போது, பாதச் சலங்கைகளின் ஓசை கேட்கிறது.

யானையின் கழுத்து மணிகள் போல் அவன் கழுத்து மணிகளும் ‘டாண் டாண்’ என்று ஓசை எழுப்புகின்றன. யானையின் தலையில் இருந்து வழியும் மதநீர் போல, கண்ணன் நடந்து, விழுந்து, எழுந்து போவதால் அவன் உடம்பில் வியர்வை பெருகி வழிகிறது.

ஒரே ஒரு வேறுபாடு. பிரமாண்டமான உடம்புடன் யானை, நான்கு கால்களால் நடந்து காட்டும் கம்பீரத்தை, சிறிய உடம்புடன் இரண்டு கால்களால் நடந்து காட்டினான் கண்ணன். மற்றொரு வேறுபாட்டையும் காட்டுகிறான் அவன்.

கண்ணன் திடீரென்று சறுக்கி விழுந்தான். மறுபடியும் தானே எழுந்து நடந்தான். ‘என்ன அதிசயம் இது? இதைப் பார்க்க வேண்டும்!’ என்று ஆகாயத்தில் கூடினர் மகரிஷிகள். ஒவ்வொரு முறையும் கண்ணன் விழுந்து எழும்போது, மொத்த ரிஷிகளும் நமஸ்காரம் செய்து கொண்டே இருந்தனர். ஏன்? சேற்றில் கண்ணன் பாதம் பதித்து நடக்கும்போது அந்தச் சேற்றில் ஏதோ ஒன்று தெரிகிறது. என்ன அது?


ஒரு காலில் சங்கு ஒரு காலில் சக்கரம்
உள்ளடி பொறித்தமைந்த
இரு காலும் கொண்டு அங்கங்கு
எழுதினாற்போல்
இலச்சினை பட நடந்து

(பெரியாழ்வார்)

என்னதான் மனித வடிவம் எடுத்து வந்தாலும் தெய்வம், தன் பாதரேகைகள், சங்கு, சக்கரம், தாமரை, கலசம், குடை போன்ற தெய்விகச் சின்னங்களை மறைக்க முடியாது. கண்ணன் நடந்த சேற்றில் அவ்வளவும் இருந்தன. ஆகாயத்தில் இருந்த முனிவர் கூட்டம் அவற்றைப் பார்த்துவிட்டு, ‘‘ஆஹா! இந்த கண்ணன் எங்கள் வாசுதேவனே!’’ என்று அவன் திருவடிகளுக்கு வந்தனம் செலுத்தினர்.

சிறகு முளைத்த பறவை, கூட்டில் இருக்குமா? நடக்கத் தொடங்கிய கண்ணன், வீட்டில் இருப்பானா? கிளம்பிவிட்டான். அவனைச் சுற்றி ஒரு பட்டாளமும் போனது. இந்தப் பட்டாளம் எங்கு போகிறது?

- தொடரும்…
நன்றி - சக்தி விகடன் 25-06-2006

கருத்துரையிடுக

0 கருத்துகள்