Advertisement

Responsive Advertisement

கண்ணன் கதை - 5 - பி.என்.பரசுராமன்


வசுதேவர் கண்ணனுடன் கிளம்பினார். உடனே சிறைக் கதவுகள் தாமே திறந்து கொண்டன. வெளியே மழைத்தூறல். இருள் மயம். ஆதிசேஷன், குடையாக மழையிலிருந்து அவர்கள் நனையாமல் தடுத்தான். ஆதிசேஷனது மணிகள் பாதையில் வெளிச்சம் காட்டின.

யமுனையில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. கண்ணனைக் காண்பதில் அவ்வளவு குதூகலம் போலும் யமுனைக்கு. கண்ணனின் பால லீலைகள் தனது கரையில்தான் நடக்கப் போகின்றன என்கிற குதூகலமோ? ‘யமுனா தீர விஹாரி’ என்றும், ‘தூயபெருநீர் யமுனைத் துறைவன்’ என்றும் கண்ணனைப் போற்றிப் பாடும்போதெல்லாம், தன்னையும் சேர்த்துப் பாடப் போகிறார்கள் என்பதை உணர்ந்த மகிழ்ச்சியோ? தெரியவில்லை.

கண்ணனுடன் ஆற்றைக் கடந்த வசுதேவர், யசோதையின் வீட்டில் நுழைந்தார். எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். குழந்தை பிறந்து மயக்கத்தில் ஆழ்ந்திருந்த யசோதையின் பக்கத்தில் கண்ணனை விட்டுவிட்டு அவளின் பெண் குழந்தையைத் தூக்கிக் கொண்டு திரும்பினார் வசுதேவர்.

சிறைச்சாலைக்கு வந்ததும் பெண் குழந்தை பெருங்குரல் எடுத்து அழ ஆரம்பித்தது. கம்சனின் முடிவை அறிவிப்பது போன்ற அந்த அழுகுரல், அவனை அங்கே வரவழைத்தது. ‘என்னைக் கொல்லும் குழந்தை பிறந்து விட்டது!’ என்றவாறு வேகமாக வந்த கம்சன், தேவகியிடம் இருந்த குழந்தையைப் பிடுங்கினான்.

தேவகி கெஞ்சினாள். ‘‘அண்ணா! இதுவரை ஏழு குழந்தைகளைப் பறிகொடுத்துவிட்டேன். அதனால் புத்திர சோகத்தால் பரிதவிக்கும் என்னைப் பார்! இந்தக் குழந்தையையாவது தயவுசெய்து விட்டு விடு!’’ என்று பதறினாள்.

இதுவரை குழந்தைகளைப் பறிகொடுத்தபோது இல்லாத பதற்றம், இப்போது மட்டும் தேவகிக்கு ஏன் ஏற்பட வேண்டும்? ஒருவேளை இது பெண் குழந்தை என்பதாலா? பரம் பொருளையே பிள்ளையாகப் பெற்ற தேவகி, ஒருக்காலும் இவ்வாறு நினைக்க மாட்டாள். பிறகு? மகான்கள் இதற்கு அற்புதமான ஒரு விளக்கம் சொல்வர்.

இதுவரை ஏழு குழந்தைகளைப் பறிகொடுத்தது வசுதேவர், கம்சனுக்கு அளித்த சத்தியத்தைக் காப்பாற்றவே! அதற்காக தேவகி தியாகம் செய்தாள். ஒன்றைத் தியாகம் செய்வதானால், விருப்பு வெறுப்பு இல்லாமல் முழுமனதோடு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அதற்கு பலன் இல்லாமல் போய்விடும். இப்போது கம்சன் கொல்ல வருவது அடுத்தவள் பெற்ற குழந்தையை! அதை தேவகியின் குழந்தையாக எண்ணி அவள் எதிரிலேயே கொல்லப் போகிறான். அது மகாபாவம். அதனால், ‘கம்சா! என் குழந்தை உயிருடன் இருப்பதற்காக, அடுத்தவள் குழந்தையைப் பலி கொடுப்பதா? வேண்டாம்! அதனால் இந்தக் குழந்தையைக் கொல்லாதே!’ என்ற அடிப்படையிலேயே தடுத்தாள்.

கம்சன் அதைப் பொருட்படுத்த வில்லை. அதைக் கொல்லும் முயற்சியில் ஈடுபட்டான். ‘‘என்னைக் கொல்ல வந்த இதை நான் கொன்றுவிட வேண்டும்!’’ என்று குழந்தையின் இரண்டு கால்களையும் பிடித்து அதன் தலையை கல்லில் அடிக்க ஓங்கினான். அப்போது அவனே எதிர்பார்க்காத ஆச்சரியம் நடந்தது.

- தொடரும்…
நன்றி - சக்தி விகடன் 25-06-2006

கருத்துரையிடுக

0 கருத்துகள்