உலகத்தையே சுமப்பவனை, தான் சுமப்பதால், ‘எங்கே பூமிக்கு பாரம் அதிகமாகி விடுமோ!’ என்ற எண்ணத்தில், மிக மிக மெதுவாக நடக்கிறாள் தேவகி.
அவள் தூங்கும்போது கனவில், ‘என் ஸ்வாமியை இவள் சுமக்கிறாள். புண்ணியசாலியான இவளை நான் சுமக்க வேண்டும்!’ என்று தன் முதுகில் தேவகியைச் சுமந்து செல்கிறான் கருடன். ‘உள்ளத்தில் நான் சுமக்கும் என் கணவனை இவள் சுமக்கிறாள். எனவே, இவளை நான் பராமரிக்க வேண்டும்!’ என்று லட்சுமிதேவி, தேவகிக்குப் பணிவிடை செய்கிறாளாம்.
ஓய்வு நேரத்தில், துணியில் பலவித வண்ண ஓவியங்களை வரைந்தாள். அப்பழுக்கு இல்லாத பக்தி கொண்ட உத்தமமான பக்தர்கள் எல்லாம் கண்ணன் நினைவுகளில் தங்களை மறந்திருக்க, கண்ணன் அவதரிப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கினான்.
‘சர்வ மங்கல வடிவினரான ஸ்வாமி, அவதரிக்கும் நள்ளிரவு நெருங்கியது. சுபக்கிரகங்கள் தாமாக ஒன்று கூடின. அஷ்டமியும் ரோகிணியும் இணைந்த வேளை. திசைகள் எல்லாம் மின்னின. துந்துபி முழங்கியது. தேவர்கள் பூமழை பொழிந்தனர். உலகம் ஆனந்தக் கடலில் மூழ்கியதைப் போல, எல்லோர் உள்ளங்களிலும் குதூகலம் பொங்கியது. கம்சனின் சிறைச்சாலையில் ஸ்ரீ கிருஷ்ணன் என்னும் அற்புதம் உதயமானது’ என்கிறார் பரீட்சித்து மன்னனுக்கு ஸ்ரீமத் பாகவதத்தை சொல்லி வந்த சுகாச்சார்யார்.
சிறிய வடிவம். தாமரைக் கண்கள். நான்கு திருக்கரங்கள். அவற்றில் சங்கு, சக்கரம், கதாயுதம், பத்மம். திருமார்பில் ஸ்ரீ வத்ஸம். கழுத்தில் கௌஸ்துப மணி. மேனியில் பீதாம்பர ஆடை. தலையில் வைடூரியங்கள் இழைத்த கிரீடம். உடலில் குண்டலம், தோள்வளை ஆகிய ஆபரணங்கள். சுருண்ட கறுத்த தலைமுடி. நீர் குடித்த மேகம் போல திருமேனி ஆகியவற்றுடன் கண்ணன் அவதரித்தான்.
வசுதேவரும் தேவகியும் கண்ணில் நீர் மல்கக் கைகூப்பித் துதித்தனர். ‘‘ஸ்வாமி... சங்கு சக்கரம் தாங்கிய திருக்கரங்களை மறைத்து சாதாரணக் குழந்தையாகக் காட்சி அளியுங்கள். தாங்கள், அவதாரம் செய்துள்ள தெய்வம் என்பதைக் கம்சன் அறியக் கூடாது!’’ என வேண்டினாள் தேவகி.
கம்சனிடம் உள்ள பயத்தால் மட்டும் தேவகி இப்படிச் சொல்லவில்லை. வேறோர் அற்புதமான காரணமும் உண்டு.
‘‘தெய்வமே! உங்களது இந்த தரிசனம் எனக்குப் புதிதல்ல. எப்போதும் என் இதயத்தில், நான் கண்டு தரிசிக்கும் வடிவம்தான். ஆனால், இப்போது அழியக்கூடிய என் உடம்பில் இருந்து, அழிவற்ற தெய்வமான நீங்கள், ஒரு சாதாரணக் குழந்தையாக அவதரித்திருக்கிறீர்கள். இனி நான் தியானிக்க உட்கார்ந்தால், ‘இது என் பிள்ளைதானே?’ என்ற மயக்கமும் அலட்சியமும் தோன்றிவிடும். அதனால் சாதாரணக் குழந்தையாகக் காட்சி தாருங்கள், போதும்!’’ என வேண்டினாள். இந்த வேண்டுகோளை கண்ணன் நிறைவேற்றினான்.
பிறகு அவர்களிடம் தன்னை கோகுலத்தில் உள்ள யசோதையின் பக்கத்தில் விட்டுவிட்டு அவளின் பெண் குழந்தையை எடுத்து வருமாறு கட்டளையிட்டான் கண்ணன்.
- தொடரும்…
நன்றி - சக்தி விகடன் 25-06-2006
.jpg)

0 கருத்துகள்