கார்க்கி ஒவ்வொரு நாட்டு இலக்கியங்களைப் பற்றியும் நன்கு தெரிந்து வைத்திருந்தார். பிறநாட்டு இலக்கியங்களைப்பற்றி அந்தந்த நாட்டு எழுத்தாளர்களிடமே விமர்சனம் செய்வார். பாராட்டிப் புகழவும் செய்வார். ஒருமுறை இத்தாலி நாட்டு எழுத்தாளர்கள் கார்க்கியின் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் உலக இலக்கியம் பற்றியும், ரஷ்ய இலக்கியம் பற்றியும் கார்க்கியுடன் நீண்ட நேரம் விவாதித்தனர். பின்பு கார்க்கி அவர்களிடம் இத்தாலிய இலக்கியத்தின் ஜனநாயகம் பாரம்பரியம் பற்றியும், அதன் பரம்பரையாக வரும் இலக்கிய மாண்பு பற்றியும் நீண்ட சொற்பொழிவாற்றினார். இலக்கியம் பற்றிய அந்த இத்தாலிய எழுத்தாளர்களின் தவறான பார்வையைக் கடுமையாக விமர்சனம் செய்தார். இறுதியில் அவர்களிடம் “உங்கள் தாய்மொழியான இத்தாலியில் தொன்றுதொட்டு வந்துள்ள இலக்கியச் செல்வங்களை இன்னும் அதிகமாக நீங்கள் படித்தால் அனைவருக்கும் நல்ல பயன்கிடைக்கும்” என்று கார்க்கி கூறி அனுப்பினார்.
குடும்ப வாழ்க்கை
கார்க்கி தனது சொந்த வாழ்க்கையில் சிறந்த கணவராகவும் மதிப்பிற்குரிய தந்தையாகவும் வாழ்ந்தார். அவர் பெரும்பாலும் கோபமேபடமாட்டார். கோபம் வந்தால் அதைக் கட்டுப்படுத்தவே முடியாது. தன் மனதில் பட்டதை நேருக்கு நேர் நின்று தைரியமாகச் சொல்வார். மகத்தான தலைவர் லெனினுக்கு முன்னால்கூட அவர் தனது கருத்தை அழுத்தமாய்க் கூறுவார். சமயங்களில் லெனினுடைய முடிவுகளுக்கு முரண்பட்ட கருத்துக்களைக் கூட அவரிடம் அழுத்தமாய்க் கூறுவதற்குத் தயங்கியதேயில்லை.
ஒருமுறை, ரஷ்யாவின் இருபதாம் நூற்றாண்டின் மகாகவி என்று புரட்சிக்கு முன்பு முதலாளித்துவ விமர்சகர்களால் பாராட்டப் பெற்ற சாலியாபினுக்கு சிறப்பு விழா மாஸ்கோவில் கொண்டாடப்பட்டது. அந்த விழாவுக்குக் கார்க்கியும் அழைக்கப்பட்டிருந்தார். அந்த விழாவில் முழுக்கப் பெரும் வணிகர்களும், பிரபுக்களும், அவரின் வாரிசுகளும் கலந்துகொண்டனர். கவிஞர் சாலியாபினைப் பற்றி அனைவரும் வானளாவப் புகழ்ந்தனர். இறுதியாக கார்க்கி பேசினார். மேடையில் கம்பீரமாக அமர்ந்திருந்த சாலியாவினைப் பார்த்து கார்க்கி “சாலியாபின், நீர் ஒரு சிறந்த அறிவாளி! ஆனால் உமது அறிவுத் திறனெல்லாம், கவிதை ஆற்றல் எல்லாம் சொகுசு வர்க்கத்தினரான பெரும் வணிகர்களின் அருமை மனைவிகளின் பட்டாடையிலும் பகட்டுத் தோற்றத்திலும் ஆழ்ந்து அமிழ்ந்து பாலைவனத்தில் இறைத்த நீராகி விடுகிறது. அன்பனே! இனிமேலாவது உன் கண்களைத் திறந்துபார். அனாதரமான, அடிமைப்பட்டுத் தவிக்கும் ஆத்மாக்களுக்கு ஜீவத்துடிப்பளிக்க உனது சொற்களைச் சீராக்கு. அன்றுதான் நீ உண்மையிலேயே மாபெரும் கவிஞனாவாய்” என்று கூறினார். கார்க்கியின் பேச்சுக்கெதிராக வணிகர்களும் பிரபுக்களும் ஆவேசமாகவும் கடுங்கோபத்தோடும் கூக்குரல் கிளப்பினார். ஆனால் கார்க்கியின் ஓங்காரக் குரலின் முன்னால் அவை ஒடுங்கிப் போய்விட்டன.
கார்க்கியிடம் சில அபூர்வப் பழக்கவழக்கங்கள் இருந்தன. உதாரணமாக அவர் பேனாவால் எழுதுவதை வெறுத்தார். அவர் தனது படைப்புகளைப் பென்சிலால்தான் எழுதினார். அதற்காக அவர் விதவிதமான பென்சில்களை உபயோகப்படுத்தினார். தனது பென்சில்களை அவர் எப்போதும் கூர்மையாகச் சீவி வைத்திருப்பார். அவர் மேஜை முழுவதும் பென்சில்களைப் பரப்பி வைத்திருப்பார். ஒவ்வொரு வார்த்தையின் தகுதிக்கும், அவசியத்துக்கும், முக்கியத்துவத்திற்கேற்ப பென்சில்களை மாற்றி எழுதுவார். ஆனால் அவர் தட்டெழுத்து (டைப்ரைட்டர்) எந்திரத்தை மிகவும் விரும்பினார்.
அவர் படிப்பது பெரும்பாலும் படுக்கையில்தான். அவர் பத்திரிகை படிப்பது மட்டும் நாற்காலியில் அமர்ந்து படிப்பார். கார்க்கிக்கு எப்போதும் மிகச் சிறிய பொருள்களின் மீது தான் அதிக ஆசை இருந்தது. சிறிய சிற்பங்கள் மீது அவருக்கு மிகவும் பிரியம். அவர் பல நாடுகளுக்கும் பெரும் தொகை அனுப்பிச் சிறிய சிற்பங்களை வாங்கித் தனது படுக்கை அறையில் வைத்திருந்தார். சீனாவிலிருந்து நான்கு மாத உழைப்பில் உருவான ஒரு தந்தச் சிற்பத்தைப் பெருந்தொகை கொடுத்து வாங்கினார். அதை அவர் கையிலெடுத்துப் பார்த்து ரசிப்பார். அந்தச் சீனச் சிற்பியின் உழைப்பையும் திறமையையும் பாராட்டினார். அந்தச் சிற்பத்தைத் தனது கலைக் கண்ணால் பார்த்துப் பார்த்துப் பூரித்துப் போவார். உலகின் ஓட்டத்திற்கு உழைப்புத்தான் ஜீவசக்தி என்ற கருத்தில் கார்க்கி உறுதியாக இருந்தார்.
உழைப்புத்தான் உலகின் ஜீவசக்தி என்ற கருத்தைச் சில எழுத்தாளர்களிடம் பேசும்போது கூறினார். கலாசாரப் பண்பாட்டுக்கும் உழைப்புக்குமிடையே நிலவும் பிரிக்க முடியாத உறவைப் பற்றியும் அவர்களிடம் அழுத்தமாக எடுத்துரைத்தார். “கலாசாரம் என்பது மனிதனின் சிருஷ்டி உழைப்புத்தான்; உழைப்புத்தான் இன்றும் நாளையும் அதன் அடிப்படை. மனிதகுலம் இவ்வுலகில் எப்படியெல்லாம் உழைத்தது, உலகின் வளர்ச்சிக்கு எப்படிப் பயன்படுத்தியது என்பதைக் கூறுகிற கதைதான் உலகின் பேரதிசயமான கதையாகும்” என்று உழைப்பின் பெருமையை எழுத்தாளர்களிடம் வலியுறுத்திக் கூறினார் கார்க்கி.
கலாசாரத்தைப் படைப்பவர்களும், உலகின் அனைத்து வகையான செல்வங்களையும் உருவாக்குவோர் மக்கள்தான். இந்த உண்மையை கார்க்கி தொடர்ந்து கூறிவந்தார். உழைப்பாளி மக்களின் வாழ்க்கையிலிருந்தும் அவர்களின் போராட்டங்களிலிருந்தும்தான் உணர்வு பெற்றதாய்க் கூறினார். கணக்கற்ற நூற்றாண்டுகளில் மக்கள் தங்கள் உழைப்பின் மூலம் படைத்து உருவாக்கிய போற்றுதலுக்குரிய பல்வேறு சிறப்பு அம்சங்களிலிருந்துதான் நான் உணர்வு பெற்றேன் என்றார். அதிலிருந்துதான் உற்சாகத்தையும் தனது மொழியையும், உருவகங்களையும் கற்பிதங்களையும் பெற்றுத்தான் கார்க்கி தனது அமர இலக்கியங்களைப் படைத்தார்.
இளம் எழுத்தாளர்கள் மீது கார்க்கி மிகுந்த அக்கறை காட்டினார். அவர்களது வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாய் இருந்தார். அவர்கள் எழுதிய படைப்புகளைப் பொறுமையாய்ப் படித்து தனது கருத்துக்களைக் கூறித்திருத்துவார். கடிதங்கள் மூலமாகவும் எழுத்தாளர்களின் படைப்புகளை விருப்பு வெறுப்பின்றிப் படித்துக் கருத்துக்களை அனுப்புவார். அவர்களைத் தனது வீட்டுக்கு வரவழைத்து விவாதங்கள் நடத்தி அவர்கள் எழுதுவதற்கு ஊக்குவிப்பார். அவர்கள் எழுதிய கைப்பிரதிகளைத் திருத்திக் கொடுப்பார்.
கார்க்கி தனக்கிருக்கும் அதிகமான இலக்கியப் பணிகளுக்கிடையே புதிய எழுத்தாளர்களின் எழுத்துக்களைப் படித்து, விமர்சனம் செய்து அவர்களிடம் நட்பு ரீதியாக எடுத்துக் கூறி வந்தார். அவர்களின் பிரியத்துக்குரிய வழிகாட்டியாகவும் தோழராகவும் கார்க்கி திகழ்ந்தார். மேலும் அவர்களது படைப்புகளைப் பல்வேறு பத்திரிகைகளுக்குச் சிபாரிசு செய்து பிரசுரிக்கவும் ஏற்பாடு செய்தார். இளம் எழுத்தாளர்களுக்கு இதன் மூலம் தன்னம்பிக்கை ஏற்படுத்தினார்.
புதிய எழுத்தாளர்களுக்கு கார்க்கி எழுதும் கடிதங்கள் நீளமாகவும், தெளிவாகவும், உணர்வூட்டுவதாகவும் இருக்கும். இதோ உதாரணத்திற்கு கார்க்கியின் ஒரு கடிதம்:
அன்புள்ள நண்பரே,
உங்கள் கவிதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இவ்வளவு காரசாரமாகவும், உயிர்த் துடிப்போடும், சீரிய கவிதை மொழியில் இதை நீங்கள் எழுதியிருப்பதைக்கண்டு மகிழ்கிறேன். உங்கள் ஆற்றலும், கவிதைத் துறையில் உங்களுக்குள்ள நம்பிக்கையும் மேலும் பெருகவேண்டும். மனப்பூர்வமாய் இதயத்தின் அடியாழத்திலிருந்து உங்களை வாழ்த்துகிறேன்.
உங்களுடன் ஒப்பிடும்போது வயது முதிர்ந்தவன் என்ற முறையில் நான் நல்லதொரு ஆலோசனையை வழங்கத் துணிகிறேன். எந்த நேரமும் அயராது உழையுங்கள். உங்கள் ஆயுதத்தைக் கூர்மையாகத் தீட்டி வைத்துக் கொள்ளுங்கள். வற்றாத ஊற்றுப் போன்ற மக்களது செழுமிய, எழில் மிகுந்த இன்சுவை மொழியைத் தொடர்ந்து பயிலுங்கள். இம்மொழியிலிருந்து நீங்கள் மேதைமையோடும் ஆற்றலோடும் வெளிப்பட முடியும். நல்ல கருத்துகளையும் உணர்ச்சிகளையும் எடுத்துரைக்கும் வல்லமையைப் பெறமுடியும். எந்தச் சிறிய விஷயத்தையும் கவனியாது விட்டுவிடாதீர்கள். எதைப் பற்றியும் அஞ்சாதீர்கள். அனைத்தையும் துருவி ஆராயுங்கள். அரிய வகையான விசயங்களை அனைவருக்கும் பயன்தரக் கூடியவற்றை உங்களால் திறம்படக் கண்டறிய முடியுமென்று உறுதியாய்க் கூறுகிறேன்” என்று கடிதத்தை கார்க்கி முடித்துள்ளார்.
கார்க்கி தனக்குப் பின்னால் ஒரு எழுத்தாளர் பரம்பரையை உருவாக்க இப்படிப்பட்ட நட்புரீதியான விமர்சனங்களும் கடிதங்களும் விவாதங்களும் உதவிபுரிந்தன. தன்னை நேரில் வந்து சந்திக்கும் இளம் எழுத்தாளர்களுக்கு கார்க்கி ஒரு பொன்மொழியைக் கூறுவது வழக்கம். “அன்பர்களே, கவிஞர்களாகவும், நாவலாசிரியர்களாகவும் எழுத்தாளர்களாகவும் சிறந்து விளங்க வேண்டுமா? அந்த ஆர்வம் உங்களுக்கு இருக்கிறதா? அப்படியானால் நீங்கள் கனல்பறக்கும் இதயத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்” என்று கூறுவார்.
இந்தக் கனல் பறக்கும் இதயம் கார்க்கிக்கு அமைந்திருந்தது. மாமேதை லெனின் இதற்குக் காரணமாக இருந்தார். லெனின் கார்க்கியின் வீட்டுக்கு அடிக்கடி வருவார். இருவரும் தனிமையில் பல மணி நேரம் பேசுவார்கள். சில நேரம் சண்டையிடுவது போல் பேச்சு உக்கிரமாக இருக்கும். கார்க்கி கதை சொன்னால் லெனின் அதைப் பிரியமாய்க் கேட்பார். ஒருநாள் கார்க்கி லெனினுக்கு ஒரு கதை சொன்னார்.
கதை இதுதான். புரட்சி வென்ற பிறகு பணக்காரச் சீமாட்டிகளுக்கெல்லாம் தலைவலி அதிகரித்தது. அப்போது ஜார் மன்னனின் நேரடி வாரிசு என்று கூறிக்கொண்ட ஒரு சீமாட்டி தனது சொகுசு வாழ்க்கைக்குத் தேவையான வசதி இல்லையே என்ற ஏக்கத்தில் தற்கொலை செய்துகொள்ள ஆற்றுக்குப் போனாள். தமது எஜமானி ஆற்றில் பாயப் போவதை அறிந்த நான்கு நாய்கள் அவளைக் கவ்விப் பிடித்துத் தடுத்தன. அதனால் சீமாட்டி தனது தற்கொலை எண்ணத்தைக் கைவிட வேண்டியதாயிற்று.
கார்க்கி இந்தக் கதையைக் கூறிவிட்டு லெனினுடைய கருத்து என்ன என்று கேட்டார். லெனினின் முகம் மாறிக் கண்கள் மேலும் கீழுமாய் கார்க்கியைப் பார்த்தன. சில வினாடிகள் கண்களை மூடித் திறந்துவிட்டு லெனின் அமைதியாகக் கூறினார். “இது கற்பனைக் கதையாக இருந்தால்கூட இதில் அடங்கியுள்ள கருத்து ஒன்றும் மோசமானதல்ல”, என்று கூறிவிட்டு “இது புரட்சி தந்த அருமையான கேலிக்கதை” என்று சிரித்தார். பின்பு கார்க்கியும் லெனினும் சேர்ந்து சிரித்தனர்.
கார்க்கி, லெனின் இருவரிடமும் ஒரு பொதுப் பார்வை இருந்தது. அவர்கள் இருவரும் தங்களை நன்கு அறிந்திருந்தனர். தாங்கள் பின்பற்றும் பாதை குறித்துத் தெளிவோடும் தேர்ச்சியோடும் இருந்தனர். லெனினைப் பற்றி கார்க்கிக்கு மிக உயர்ந்த மதிப்பு இருந்தது. கார்க்கி தனது மரணப்படுக்கையில்கூட லெனின் பெயரையே உச்சரித்துக் கொண்டிருந்தார். அதே போல் லெனினும் கார்க்கியை தனது உயிராக நேசித்தார். வெளிநாடுகளுக்குச் சென்றால்கூட லெனின் கட்சி உறுப்பினர்கள் மூலம் கார்க்கிக்குக் கடிதங்கள் எழுதிவந்தார். கார்க்கியும் லெனினும் சதுரங்கம் விளையாடுவர். அப்போது சிரிப்பும் கும்மாளமுமாய் இருவரும் ஆடுவர்.
தொடரும்...
நன்றி - கீற்று 18-02-2011



0 கருத்துகள்